Published:Updated:

கந்துவட்டி, கட்டப்பஞ்சாயத்து, மணல் மாஃபியா! - சிவகங்கை கலெக்டர் அலுவலகம் அருகில் கொல்லப்பட்ட ரவுடி

அருண் சின்னதுரை
சாய் தர்மராஜ்.ச

மணல் மாஃபியா கும்பலுடன் தொடர்பில் இருந்தபடி கந்துவட்டி, கட்ட பஞ்சாயத்து என ரவுடியாக வலம் வந்துள்ளார், ராஜசேகர்.

ராஜசேகர்
ராஜசேகர்

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, ரவுடி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜசேகர்
ராஜசேகர்

சிவகங்கை அருகே, அல்லூர்பனங்காடியைச் சேர்ந்தவர், ராஜசேகர் (33) . 2015-ம் ஆண்டில் நடந்த கொலை வழக்கு ஒன்று மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்துவந்தது. இந்த வழக்கில் ஆஜராகிவிட்டு, தனது நண்பருடன் இரு சக்கர வாகனத்தில் ராஜசேகர் திரும்பிக்கொண்டிருந்தார். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ராஜசேகர் வந்தபோது, ஆட்டோவில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்தது.

அப்போது நிலைதடுமாறிய ராஜசேகர், பைக்கை கீழே போட்டுவிட்டு எஸ்பி அலுவலகம் நோக்கி ஓட முயன்றுள்ளார். அந்தச் சமயத்தில்தான், ராஜசேகரை அரிவாளால் தலையில் சரமாரியாக வெட்டியுள்ளது அந்தக் கும்பல். இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் வந்த நண்பர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

கொல்லப்பட்ட ராஜசேகர்
கொல்லப்பட்ட ராஜசேகர்

இந்தக் கொலை தொடர்பாக சிவகங்கை போலீஸார் விசாரித்து வருகின்றனர். கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் ராஜசேகருக்கு தொடர்புள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும், பல ஆண்டுகளாக மணல் கொள்ளையில் ராஜசேகர் ஈடுபட்டு வந்துள்ளார். அவரின் மணல் கொள்ளையை காட்டிக்கொடுத்த 2 பேரை கடந்த 2010-ம் ஆண்டு கொடூரமான முறையில் கொலை செய்தது உட்பட மூன்று கொலை வழக்குகள் ராஜசேகர் மீது நிலுவையில் இருந்துள்ளது. மேலும், மணல் மாஃபியா கும்பலுடன் தொடர்பில் இருந்தபடி கந்துவட்டி, கட்டப் பஞ்சாயத்து என ரவுடியாக ராஜசேகர் வலம் வந்துள்ளார் என்கின்றனர் போலீஸ் தரப்பில்.

ராஜசேகர் வந்த பைக்
ராஜசேகர் வந்த பைக்

எப்போதும் பரபரப்புடன் இருக்கும் கலெக்டர் அலுவலகம் அருகில் ரவுடி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.