அரசியல்
சமூகம்
அலசல்
Published:Updated:

முடிவுக்கு வருமா சாதிய படுகொலைகள்? - ராக்கெட் ராஜா கைதான பின்னணி!

சாமித்துரை
பிரீமியம் ஸ்டோரி
News
சாமித்துரை

இந்தக் கொலையின் பின்னணியில் இருந்த ராக்கெட் ராஜா, தன்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை அறிந்ததும், மும்பையில் சென்று பதுங்கினார்.

சாதியப் படுகொலை, கட்டப் பஞ்சாயத்து, மிரட்டல் எனச் சமூகவிரோதச் செயல்களில் ஈடுபட்டுவந்த ரெளடி ராக்கெட் ராஜாவை நெல்லை மாவட்ட காவல்துறையினர் கைதுசெய்திருக்கிறார்கள். ஏற்கெனவே பல வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளைஞரைப் பழிக்குப் பழி கொன்ற வழக்கில் தற்போது கைதாகியிருக்கிறார்.

இது குறித்து காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, “திசையன்விளை அருகே ஆனைக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர், பால விவேகானந்தன். இதுதான் ராக்கெட் ராஜாவின் உண்மையான பெயர். கராத்தே செல்வினுடன் சேர்ந்து, சமுதாயம் சார்ந்த பிரச்னைகளில் தலையிட்ட அவர், ராக்கெட் வேகத்தில் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டதால் ‘ராக்கெட் ராஜா’ என்று அவரைச் சேர்ந்தவர்கள் அழைக்கத் தொடங்கினார்கள்.

ராக்கெட் ராஜா
ராக்கெட் ராஜா

1996-ம் ஆண்டு பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் நாட்டு வெடிகுண்டு வீசினார். அதுதான் அவரது முதல் குற்றச் சம்பவம். கராத்தே செல்வின் மறைந்ததும், வெங்கடேச பண்ணையாருடன் சேர்ந்தார். அவர் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட பிறகு அவரின் தம்பி சுபாஷ் பண்ணையாருடன் சேர்ந்து பழிக்குப் பழியாக நடந்த பல சாதியக் கொலைகளுக்கு மூளையாகச் செயல்பட்டார்.

பின்னர் சுபாஷ் பண்ணையாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்தவருக்கு திடீரென அரசியல் ஆசை ஏற்பட, ‘பனங்காட்டுப்படை’ என்ற கட்சியைத் தொடங்கினார். கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஹரிநாடாரே நிதிமோசடி வழக்கில் கைதாகி பெங்களூரு சிறையில் இருக்கிறார். அதன் பிறகு இருவரும் பிரிந்துவிட்டார்கள்.

சாமித்துரை
சாமித்துரை
முடிவுக்கு வருமா சாதிய படுகொலைகள்? - ராக்கெட் ராஜா கைதான பின்னணி!

ராக்கெட் ராஜா மீது சென்னை எழும்பூர், கொரட்டூர் உள்ளிட்ட இடங்களில் நடந்த கொலை உள்ளிட்ட பல வழக்குகள் இருந்தபோதிலும், பெரும்பாலான வழக்குகளில் விடுதலையாகிவிட்டார். சேலத்தில் நடந்த கொலை வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது. 2017-ல் பேராசிரியர் செந்தில்குமார் கொலை வழக்கு, முன்னாள் எம்.பி-யான சசிகலா புஷ்பா வீட்டின் பணிப்பெண்களை மிரட்டிய வழக்கு, ராமநாதபுரத்தில் பிஸ்டலுடன் பிடிபட்ட வழக்கு, அவரது வீட்டில் சோதனையிட்டபோது ஏ.கே-47 ரக துப்பாக்கி கைப்பற்றப்பட்ட வழக்கு உள்ளிட்ட வழக்குகளும் நிலுவையில் இருக்கின்றன.

இந்த நிலையில், ஜூலை 30-ம் தேதி மஞ்சங்குளத்தை சேர்ந்த சாமித்துரை கொலை வழக்கிலும் ராக்கெட் ராஜாவுக்குத் தொடர்பு இருக்கிறது. மணல் கடத்தல் தொடர்பாக சாமித்துரையின் அண்ணன் சுப்பையா என்பவர் கடந்த ஆண்டு வெட்டிக் கொல்லப் பட்டார். அது குடும்பத்துக்குள் நடந்த பகையால் ஏற்பட்டது. கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு கோதைச்சேரியைச் சேர்ந்த செல்வக்குமார் என்பவர் கொல்லப் பட்டதற்குப் பழி தீர்க்கும் வகையில் சாமித்துரையை ராக்கெட் ராஜா கோஷ்டியினர் வெட்டிக் கொன்றிருக்கிறார்கள்.

கல்யாணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் சாமித்துரை கொல்லப்பட்ட கொடூரம் நடந்தது. இந்தக் கொலையின் பின்னணியில் இருந்த ராக்கெட் ராஜா, தன்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை அறிந்ததும், மும்பையில் சென்று பதுங்கினார். அங்கிருந்து அவர் திருவனந்தபுரம் வந்திருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின்பேரில் அவரைப் பொறிவைத்துப் பிடித்து கைதுசெய்திருக்கிறோம்” என்றார்கள்.

இது குறித்து ராக்கெட் ராஜா தரப்பு வழக்கறிஞர்களிடம் பேசியபோது, “ராக்கெட் ராஜா தன் மீதான வழக்குகளில் ஜாமீனில் இருக்கிறார். சேலம் வழக்கில் அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டிருக்கிறோம். அது நிலுவையில் இருக்கிறது. சாமித்துரை கொலை என்பது பழிக்குப் பழியாக நடந்திருக்கிறது. அவரால் கொல்லப்பட்டவரின் சகோதரர் அவரை வெட்டிக் கொன்றிருக்கிறார். ஆனால், அந்தக் கொலைக்கான கூட்டுச்சதியில் ஈடுபட்டதாகத் தேவையில்லாமல் ராக்கெட் ராஜாவைச் சேர்த்துவிட்டார்கள்.

அந்த வழக்கிலும் முன்ஜாமீன் தாக்கல் செய்திருந்தோம். அது தள்ளுபடியாகிவிட்டதால், மும்பைக்குச் சென்று தங்கியிருந்தார். மறுபடியும் முன்ஜாமீன் மனு செய்யவிருந்தோம். அதற்குள் கைது செய்துவிட்டார்கள். அவருக்குச் சர்க்கரைநோய் இருப்பதால் சிகிச்சை எடுப்பதற்காக திருவனந்தபுரத்திலுள்ள கிம்ஸ் மருத்துவமனைக்கு வந்தார். அவரைக் கைது செய்தபோது மருத்துவப் பரிசோதனை ரெகார்டுகள் மட்டுமே இருந்தன. சிகிச்சைகூட பெறவிடாமல் அவரைச் சிறையில் அடைத்துவிட்டார்கள்” என்றார்கள்.

சரவணன்
சரவணன்

இது பற்றி நெல்லை மாவட்ட எஸ்.பி-யான சரவணனிடம் கேட்டதற்கு, “சாமித்துரை கொலை வழக்கில் 10 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களைக் காவலில் எடுத்து விசாரித்தபோது ராக்கெட் ராஜாவுக்கு இந்தக் கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதனால் அவரையும் இந்த வழக்கில் குற்றவாளியாகச் சேர்த்தோம். மும்பையில் தலைமறைவாக இருந்த அவரைப் பிடிக்க, நாங்குநேரி உதவி கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி தலைமையில் தனிப்படைகள் அமைத்து, தேடிவந்தோம். மும்பையிலிருந்து அவர் திருவனந்தபுரத்துக்கு வருவதாகத் தகவல் கிடைத்ததால், அங்கு சென்று அவரைக் கைது செய்தோம். அவரிடம் விசாரணை நடத்திய பிறகு சிறையில் அடைத்திருக்கிறோம்” என்றார்.

தென்மாவட்டங்களில் சாதிய வன்மத்தைத் தூண்டி, அப்பாவிகளின் உயிர்களைப் பறிக்கும் இது போன்ற நபர்கள் மீதான காவல்துறை நடவடிக்கை தொடரட்டும்!