Published:Updated:

`மனசுல என்ன சிங்கம் பட சூர்யான்னு நினைப்பா?!' - மிரட்டிய ரவுடி; பதிலடி கொடுத்த எஸ்.ஐ

இசக்கிராஜா
இசக்கிராஜா

வெடிகுண்டு வீசப்பட்ட வழக்கில் கைதாகி, ஜாமீனில் வெளிவந்த ரவுடி, உதவி ஆய்வாளருக்கு வாட்ஸ் அப்பில் கொலை மிரட்டல் விடுத்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் சிறப்பு தனிப்படை உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வருபவர் இசக்கிராஜா. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜுவின் வீட்டில் வெடிகுண்டு வீசப்பட்டது தொடர்பாக, கூலிப்படை ரவுடி `மட்டை' மாடசாமி என்பவரை கைது செய்து மதுரை சிறப்புப் படையிடம் ஒப்படைத்தார். இந்த வழக்கில் ஜாமீனில் வெளிவந்த ரவுடி மாடசாமி, மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகக் கிடைத்த தகவலின்படி மாடசாமியின் சொந்த ஊரான பாறைகுட்டம் கிராமத்துக்குத் தேடிச் சென்றுள்ளார்.

இதை அறிந்த மாடசாமி, எஸ்.ஐ, இசக்கிராஜாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ``இசக்கிராஜா எஸ்.ஐ, நீ இவ்வளவு பேசுறியே... உங்க அம்மா, அப்பா மேல சாராய கேஸ் இருக்கு. அப்பாவுக்கு பல கொலை வழக்குகளிலும் சம்பந்தம் இருக்கு.

ரவுடி மாடசாமி - எஸ்.ஐ இசக்கிராஜா
ரவுடி மாடசாமி - எஸ்.ஐ இசக்கிராஜா

பாறைகுட்டத்துல உள்ள உன்னோட சொந்த சித்தப்பா, கிளாக்குளம் ரயில் நிலையம் பக்கத்துல புனிதாங்கிற 8-ம் வகுப்பு பள்ளி மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தார். நாய் நாய்தான். நரி நரிதான். சிங்கம் சிங்கம்தான். நான் யாரு பேசுறேன்னு தெரியுதா.. மாடசாமி... பாறைக்குட்டம் மாடசாமி. மனசுல சிங்கம் பட போலீஸ் சூர்யான்னு நினைச்சுக்கிட்டு சுத்திக்கிட்டு திரியாத... உனக்கும் எனக்கும் இருக்குறது குடும்பப் பகைதான். இதை மறந்துடாத. நீ போட்டிருக்குற காக்கி டிரெஸுக்காக உன்னை நான் விடுறேன். நண்பர்களே இதை எல்லாரும் ஷேர் பண்ணுங்க” என்று பேசியுள்ளார். 5.57 நிமிடம் அடங்கிய இந்த ஆடியோ வைரலானது.

இதையடுத்து மாடசாமிக்கு போன் செய்த இசக்கிராஜா, “நான் இசக்கிராஜா பேசுறேன். என்ன மாடசாமி, வாய்ஸெல்லாம் பயங்கரமா போட்டுருக்க... நீ இப்போ எங்க இருக்கேன்னு சொல்லு. நான் நேர்ல வர்றேன்” என்று சொல்ல,

“அது யாரு பேசுனான்னு நல்லாப் பாரு.. நான் பேசவே இல்லயே...” என மறுமுனையிலிருந்து பதில் வருகிறது. ”எங்க தாத்தா, அப்பா, சித்தப்பா எல்லாரும் ரவுடிதான் ஒத்துக்கிறேன். நீ யாரு நீயும் ரவுடிதானே... மதுரையில அமைச்சர் வீட்டுல குண்டு போட்டது நீதானே..' என இசக்கிராஜா சொல்ல, “நான் ரவுடியே கிடையாது. அது என்னோட நம்பரா.. என்னோட வாய்ஸான்னு நல்லாப் பாரு” என திரும்பத் திரும்ப அதையே பேசுகிறார்.

இசக்கிராஜா
இசக்கிராஜா

தொடர்ந்து இருவரது உரையாடலும் நீள்கிறது. ”என் நம்பர் இதுதான். நான் தனியா வரேண்டா. எந்த ரவுடி என்னைக் கூப்பிட்டாலும் நான் தனியா வரத் தயார். தைரியம் இருந்தா வெட்டிக்கோ. என்னோட குடும்பம் ரவுடி குடும்பம்னு ஊருக்கே தெரியும். ரவுடி குடும்பத்துல இருந்து ஒருத்தன் திருந்தி எஸ்.ஐ ஆனதுனால, மக்கள் ஏத்துக்க மாட்டாங்களா.. என்னோட குடும்பத்து மேல உள்ள கெட்ட பேரையே மாத்தியிருக்கேன்” என இறுதியாகப் பேசி முடிக்கிறார் இசக்கிராஜா. 13.51 நிமிடம் அடங்கிய இந்த ஆடியோவும் வைரலானது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், கோவில்பட்டியில் முகம்மது ரபீக், காந்தாரி ஆகிய இருதரப்பினருக்கு இடையே பழிக்குப்பழியாக நடந்த கொலைச் சம்பவங்களின்போது விசாரணை மேற்கொண்டபோது பிடிபட்டவர்களின் செல்போனில் இளைஞர்களை மூளைச்சலவை செய்யும் வகையில், ‘அப்துல்லா சண்டியர்’ என்ற பெயரில் உருவாக்கப்பட்டிருந்த வாட்ஸ் அப் குரூப்பை பார்த்து, ``சண்டியர்னு ஏதாவது குரூப் ஆரம்பிச்சீங்க கோவில்பட்டியில் ஒருத்தன் இருக்க மாட்டீங்க.

இசக்கிராஜா
இசக்கிராஜா

எல்லாத்தையும் ரிமாண்ட் பண்ணிடுவேன். புரியுதா.. கொலை செஞ்சுட்டு அலைஞ்சா பெரிய இவுங்களா.. ஆளை வெட்ட தைரியம் இல்லாமதான், உங்களை மூளைச்சலவை செஞ்சுட்டு இருக்கான். ஒழுங்கா உங்க குடும்பத்தையும் பொழப்பையும் பாருங்க” என எச்சரித்து வெளியிட்ட ஆடியோதான் முதலில் வைரலானது. தொடர்ந்து, ரவுடிகளுக்கு எச்சரிக்கை விடுத்து கைதும் செய்து வந்தார். தொடர்ந்து வழக்கு விவகாரங்களில் அதிரடி காட்டினார்.

இருப்பினும், அவரது இன்னொரு முகத்தையும் பார்த்தாக வேண்டும். நெல்லை மாவட்டம் சுத்தமல்லியில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவரை சரமாரியாகத் தாக்கியதில் பிரச்னையில் சிக்கினார் இசக்கிராஜா. கோவில்பட்டியில், பஸ் டிரைவரை தாக்கியதில் ஒட்டுமொத்த டிரைவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சமீபத்தில் கோவில்பட்டியில், கணவன்- மனைவி பிரச்னையில் பொறியாளர் ஒருவரை வீடுபுகுந்து தாக்கிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இசக்கிராஜா
இசக்கிராஜா

இந்த வழக்கை மகளிர் போலீஸார் விசாரித்து வந்த நிலையில், பெண்ணின் உறவினர் என்ற முறையில் பேச வந்ததாகச் சொல்லி தாக்குதல் நடத்தியது சர்ச்சையைக் கிளப்பியது. இச்சம்பவம் குறித்து பொறியாளர் குடும்பத்தினர், இசக்கிராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி எஸ்.பி-யிடம் மனு அளித்துள்ளனர். ரவுடிகளுக்கு எச்சரிக்கை, வழக்கு விவகாரங்களில் காட்டிய அதிரடி... ஆகியவற்றால் இவரை மக்கள் ஹீரோவாகப் பார்த்தனர். ஆனால், `` சில பிரச்னைகளில் எல்லை மீறிச் செல்வது இசக்கிராஜாவை வில்லனாகவே பார்க்கும் நிலைக்குத் தள்ளிவிட்டது" என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

அடுத்த கட்டுரைக்கு