சேலம், வீராணம் அருகேயுள்ள வலசையூர் பகுதியைச் சேர்ந்தவர் காட்டூர் ஆனந்தன் (35). பிரபல ரெளடியான இவர்மீது கொலை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் பதிவாகியிருக்கின்றன. காட்டூர் ஆனந்த் நேற்றிரவு வீட்டில் உள்ளவர்களிடம் வெள்ளியம்பட்டியிலுள்ள தன்னுடைய நண்பரைப் பார்த்துவிட்டு வருவதாகக் கூறிவிட்டு மோட்டார் சைக்கிளில் சென்றார். அவருடன் மற்றொரு நண்பரும் சென்றிருக்கிறார்.
அப்போது மூன்று கார்களில் வந்த மர்மநபர்கள் அவருடைய மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர். பின்னர் அந்த மர்மக் கும்பல் காரிலிருந்து இறங்கி காட்டூர் ஆனந்தை அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டினர். அவருடன் வந்தவர் தப்பி ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதில் ரத்தவெள்ளத்தில் அங்கு சரிந்து விழுந்த காட்டூர் ஆனந்த் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதையடுத்து, அங்கிருந்து மர்மக் கும்பல் கார்களில் தப்பிச் சென்றது. இது குறித்து தகவல் கிடைத்ததும் காரிப்பட்டி போலீஸார் அங்கு விரைந்துசென்றனர். பின்னர் கொலை தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். இதையடுத்து, உடலைப் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதற்கிடையில், இதுகுறித்து தகவல் அறிந்ததும் காட்டூர் ஆனந்தின் உறவினர்கள் அங்கு விரைந்து வந்து அவருடைய உடலைப் பார்த்து கதறி அழுதனர். சேலம் அருகே இரவில் பிரபல ரெளடி வெட்டிக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.