Published:Updated:

அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் எனக் கூறி ரூ.1.9 கோடி மதிப்பிலான நகைகள் பறிப்பு - மும்பையில் அதிர்ச்சி!

கைது

மும்பையில் திரைப்பட பாணியில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் என்று கூறி, தனியார் நிறுவனத்தில் நுழைந்த மர்ம நபர்கள் ரூ.1.9 கோடி மதிப்பிலான பணம், நகைகளைப் பறித்துச் சென்றனர்.

அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் எனக் கூறி ரூ.1.9 கோடி மதிப்பிலான நகைகள் பறிப்பு - மும்பையில் அதிர்ச்சி!

மும்பையில் திரைப்பட பாணியில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் என்று கூறி, தனியார் நிறுவனத்தில் நுழைந்த மர்ம நபர்கள் ரூ.1.9 கோடி மதிப்பிலான பணம், நகைகளைப் பறித்துச் சென்றனர்.

Published:Updated:
கைது

மோசடியில் ஈடுபட வேண்டும் என்று நினைப்பவர்கள் அதற்கு புதுப்புது வழிகளைக் கண்டுபிடித்துக்கொண்டுதான் இருக்கின்றனர். மும்பையில் அது போன்ற ஒரு வித்தியாசமான கொள்ளை நடந்திருக்கிறது. `தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடிகர் சூர்யா சி.பி.ஐ அதிகாரி என்று கூறி ரெய்டு நடத்துவதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், மும்பையில் ரெய்டு நடத்தியவர்கள் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் என்று கூறியிருக்கின்றனர். மும்பை, ஜவேரி பஜார் பகுதியில் அதிகமான தங்கம், வைரம் விற்பனை செய்யும் வியாபாரிகள் இருக்கின்றனர்.

மோசடி
மோசடி

சிறிய கடையில்கூட பல கோடிக்குத் தங்கம், வைரம் இருக்கும். ஜவேரி பஜாரிலுள்ள அது போன்ற ஒரு கடைக்குள் சிலர் நுழைந்தனர். அவர்கள் தாங்கள் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, வி.பி.எல் புல்லியன் என்ற கடைக்குள் நுழைந்து அதன் உரிமையாளர் ஒருவரின் பெயரைக் கூறிக் கேட்டனர். அதோடு அங்கு வேலை செய்த சிலருக்கு கைவிலங்கிட்டனர். மேலும் சிலரை ரெய்டுக்கு வந்தவர்கள் அடித்து உதைத்தனர்.

மொத்தம் ஆறு பேர் வந்தனர். அவர்களில் இரண்டு பேர் பெண்கள் ஆவர். இரண்டு பேர் கடைக்கு வெளியில் பாதுகாப்புக்கு நின்றுகொண்டனர். நான்கு பேர் உள்ளே நுழைந்து அங்கிருந்த ஊழியர்களை மிரட்டி `கடை உரிமையாளர் விராட் பாய் எங்கே' என்று கேட்டனர். ஊழியர்கள் அவர் இல்லை என்று தெரிவித்தவுடன் அனைவரும் மொபைல் போனுடன் சரணடையும்படி கேட்டுக்கொண்டனர். ரெய்டுக்கு வந்தவர்கள் அங்கிருந்த பீரோவில் தேடிப்பார்த்ததில் ரூ.1.9 கோடி மதிப்பிலான பணம், நகைகள் இருந்தன.

கைது
கைது

அவற்றை எடுத்துக்கொண்டு, சில ஊழியருக்குக் கைவிலங்கிட்டு, அதே கடைக்குச் சொந்தமான அருகிலிருந்த மற்றொரு அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சென்ற பிறகு ஊழியர்களின் கைவிலங்கைக் கழற்றிவிட்டு ஆறு பேரும் தங்கம், பணத்துடன் தப்பிச் சென்றுவிட்டனர். இது குறித்து உடனே போலீஸில் புகார் செய்யப்பட்டது. உதவி இன்ஸ்பெக்டர் சுஷில் குமார் இது குறித்து, ``வழக்கு பதிவுசெய்து விசாரித்துவருகிறோம். கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வுசெய்ததில் ஆறு பேர் இந்தக் கொள்ளையில் ஈடுபட்டிருந்தனர். கொள்ளையில் ஈடுபட்ட மொகமத் கிளிட்வாலா என்பவரை டோங்கிரியில் கைதுசெய்திருக்கிறோம்.

மால்வானியில் சமீர் என்பவரையும், கேட் என்ற இடத்திலிருந்து விசாகா என்பவரையும் கைதுசெய்திருக்கிறோம். எஞ்சிய மூன்று பேரையும் தேடிவருகிறோம். `ஸ்பெஷல் 26’ என்ற இந்திப் படத்தில் வருவது போன்று இந்தக் கொள்ளைச் சம்பவம் நடந்திருக்கிறது'' என்று தெரிவித்தார்.