மும்பை கோரேகாவ் பகுதியிலிருக்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில், கணக்கு வைத்திருந்த வாடிக்கையாளர் ஒருவர் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துபோனார். ஆனால் கடந்த 2021-ம் ஆண்டு அவரின் வங்கிக் கணக்கில் கேஒய்சி (சுய தகவல்கள்) மாற்றப்பட்டு அதிலிருந்து ரூ.1.29 கோடியை யாரோ எடுத்திருந்தனர். கொல்கத்தாவைச் சேர்ந்த அந்த வாடிக்கையாளர் ஹிரேந்திர குமாருக்கு கொல்கத்தா வங்கிக் கிளையில் கணக்கு இருந்தது. குமார் 2014-ம் ஆண்டு இறந்துவிட்டார். ஆனால், மும்பை கோரேகாவ் வங்கிக் கிளையில் அவரின் கணக்கில் கேஒய்சி தகவல்களை மாற்றியமைத்து இருப்பதை வங்கி தணிக்கை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

அதோடு வாடிக்கையாளரின் போன் நம்பரையும் மாற்றி நெட் பேங்கிங் மூலம் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.1.29 கோடி எடுக்கப்பட்டிருந்தது. இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. விசாரணையில் கோரேகாவ் வங்கிக் கிளையில் துப்புரவுத் தொழிலாளர்களாகப் பணியாற்றும் தில்ஷத் கான், அல்தமேஷ் ஆகியோர் சேர்ந்து இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கண்காணிப்பு கேமரா மூலம் நடத்தப்பட்ட விசாரணையில் இருவரும் மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து போலீஸில் புகார் செய்யப்பட்டது. போலீஸார் வழக்கு பதிவுசெய்து இருவரையும் தேடிவருகின்றனர். இது குறித்து இவ்வழக்கை விசாரித்துவரும் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ``வங்கியில் துப்புரவுத் தொழிலாளர்களாகப் பணிபுரிந்த இரண்டு பேரும் வங்கி ஊழியர் ஒருவரின் ஐடி மற்றும் பாஸ்வேர்டைப் பயன்படுத்தி, கம்ப்யூட்டரில் வாடிக்கையாளரின் கேஒய்சி தகவல்களில் மாற்றம் செய்து, வேறு வங்கியில் உள்ள 10 கணக்குகளுக்கு ரூ.1.29 கோடியை மாற்றியுள்ளனர். 2021-ம் ஆண்டு அக்டோபர் வரை இந்தப் பண பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் பிறகு வேலையை ராஜினாமா செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டனர். அவர்களைத் தேடிவருகிறோம்" என்று தெரிவித்தார்.
