Election bannerElection banner
Published:Updated:

ரூ.14,000 கோடி மோசடி: வைர வியாபாரி நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த பிரிட்டன் ஒப்புதல்!

நிரவ் மோடி
நிரவ் மோடி

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14,000 கோடி அளவுக்கு மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த பிரிட்டன் உள்துறை அமைச்சகம் ஒப்புதல் கொடுத்துள்ளது.

பொதுத்துறை வங்கிகளில் மிகப்பெரிய இரண்டாவது வங்கியாக கருதப்படும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி 14,000 கோடி ரூபாய் வரை மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுவிட்டார். அவர் தப்பிச் சென்ற பிறகுதான் இந்த மோசடியே வெளிச்சத்துக்கு வந்தது. இது தொடர்பாக வங்கி நிர்வாகம் கொடுத்த புகாரின் பேரில் 2018-ம் ஆண்டு, ஜனவரி மாதம் 31-ம் தேதி சி.பி.ஐ நிரவ் மோடி மீது வழக்கு தொடர்ந்தது. இந்த மோசடியை நிரவ் மோடியும் அவரது மாமா மெகுல் சோக்‌ஷியும் சேர்ந்து செய்திருந்தனர். வெளிநாட்டிலிருந்து வைரம் இறக்குமதி செய்ய பஞ்சாப் நேஷனல் வங்கியில் தற்காலிகக் கடன் பெற்று, அதைத் திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்துவிட்டதாக குற்றச்சாட்டு. இந்த மோசடியில் பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகளுக்கும் நேரடி தொடர்பு இருப்பதை சி.பி.ஐ அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மெகுல் சோக்‌ஷிi
மெகுல் சோக்‌ஷிi

மும்பை, டெல்லி உட்பட இந்தியா மற்றும் வெளிநாடுகள் என 16 நகரங்களில் நிரவ் மோடி நகைக்கடைகள் நடத்திவந்தார். வெளிநாட்டுக்குச் செல்லும் முன்பாக இந்தியாவிலுள்ள நகைக்கடைகளில் இருந்த நகைகள் மற்றும் வைரத்தை விற்றுப் பணமாக்கி, வெளிநாட்டுக்கு எடுத்துச் சென்றுவிட்டார். அவர் பயன்படுத்திய கார் மற்றும் சொற்ப தங்க நகைகள் மட்டுமே சி.பி.ஐ-க்கு கிடைத்தன.

நிரவ் மோடி தற்போது பிரிட்டனில் இருக்கிறார். அவரை பிரிட்டன் போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர். இதையடுத்து நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என்று கோரி இந்தியா, பிரிட்டன் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளது. தென்மேற்கு லண்டனிலுள்ள வாண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிரவ் மோடி இந்தியாவின் நாடு கடத்தும் கோரிக்கைக்கு எதிராக மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுக்கள் வெஸ்ட் மினிஸ்டர் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டுவந்தன. இதில் நிரவ் மோடி இந்தியாவிலுள்ள சிறைகள் மோசமாக இருக்கும் என்பது உட்பட பல்வேறு காரணங்களைக் கூறி தன்னை இந்தியாவுக்கு நாடு கடத்தக் கூடாது என்று வாதிட்டார். இந்த வழக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டுவந்தது. இதில் கடந்த பிப்ரவரி மாதம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. நிரவ் மோடியின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த அனுமதி வழங்கியது. முறையாக விசாரணை நடைபெறாது; சரியான மருத்துவ வசதிகள் கிடைக்காது என்ற மோடியின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிமன்றம், பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் தண்டிக்கப்பட வேண்டும் என்றும், இந்திய நீதிமன்றத்துக்கு நிரவ் மோடி பதிலளிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது.

நிரவ் மோடி
நிரவ் மோடி

இந்தநிலையில் பிரிட்டன் உள்துறைச் செயலாளர் பிரீத்தி பட்டேல் வைர வியாபாரி நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த ஒப்புதல் வழங்கும் உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இந்த ஒப்புதலுக்கு எதிராக நிரவ் மோடி பிரிட்டன் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய 14 நாள்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. 14 நாள்களில் மோடி மேல் முறையீடு செய்து அது ஏற்கப்படாவிட்டால் உடனே அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார்.

அவரை மும்பையிலுள்ள ஆர்தர் ரோடு சிறையில் அடைக்க பிரத்யேகச் சிறை தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிறையில் வெஸ்டர்ன் கழிவறை, படுக்கை, டி.வி உட்பட அனைத்து வசதிகளும் இருக்கும். இது, பிரிட்டனில் பதுங்கியிருக்கும் கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் முன்னாள் உரிமையாளர் விஜய் மல்லையாவை நாடு கடத்தினால் அடைப்பதற்காகத் தயார் செய்யப்பட்டிருந்தது. அதில் தற்போது நிரவ் மோடியை அடைக்கத் திட்டமிட்டுள்ளனர்.

நிரவ் மோடி 2018-ம் ஆண்டு, ஜனவரி 1-ம் தேதி இந்தியாவைவிட்டுத் தப்பி ஓடினார். இது தொடர்பான வழக்கில் 2018-ம் ஆண்டு, மே 14-ம் தேதி நிரவ் மோடி உட்பட இந்த மோசடியில் தொடர்புடைய 25 பேர் மீது சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. பிரிட்டனில் கடந்த 2019-ம் ஆண்டு, மார்ச் மாதம் கைதுசெய்யப்பட்ட மோடி அங்குள்ள கோர்ட்களில் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு