சென்னைக்கு அருகிலுள்ள நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் கடந்த 2018-ம் ஆண்டு, தன் மகனை சென்னை அசோக் நகரிலுள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் சேர்க்க விண்ணப்பித்திருந்தார். அப்போது அந்தப் பள்ளியின் முதல்வராக இருந்த ஆனந்த், மாணவரைச் சேர்க்க 1.5 லட்சம் ரூபாய் லஞ்சமாகக் கேட்டுள்ளார். மாணவரைப் பள்ளியில் சேர்க்கும்போது ஒரு லட்சம் ரூபாயும், அதன் பிறகு, 15 நாள்களுக்குப் பிறகு மீதமுள்ள 50 ஆயிரத்தை வழங்கும்படியும் தெரிவித்துள்ளார்.
ராஜேந்திரன் பள்ளி முதல்வர் லஞ்சம் கேட்டது தொடர்பாக சி.பி.ஐ-யிடம் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அதிகாரிகள் கூறியது போல, பள்ளி முதல்வரிடம் ஒரு லட்சம் ரூபாயை வழங்கியுள்ளார். லஞ்சம் வாங்கிய ஆனந்தை சி.பி.ஐ அதிகாரிகள் கையும் களவுமாகப் பிடித்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை சி.பி.ஐ நீதிமன்றத்தில் நடந்துவந்தது.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வெங்கடவரதன், பள்ளி முதல்வர் ஆனந்தன் மீதான குற்றச்சாட்டு தகுந்த ஆதாரங்களோடு நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு ஐந்து ஆண்டு சிறைத் தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும், அபாரதத் தொகையில் 30 ஆயிரம் ரூபாயை மனுதாரர் ராஜேந்திரனுக்கு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.