Published:Updated:

நாகை: இலங்கைக்குக் கடத்த முயன்ற ரூ.2 கோடி மதிப்பிலான கஞ்சா! - சுற்றிவளைத்த சுங்கத்துறையினர்

கடத்தலுக்குப் பயன்படுத்திய நான்கு இரு சக்கர வாகனங்களையும், ஃபைபர் படகையும் கைப்பற்றிய சுங்கத்துறையினர் தப்பி ஓடிய நபர்கள் குறித்து தீவிரமாக விசாரித்துவருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நாகையிலிருந்து ஃபைபர் படகு மூலம் இலங்கைக்குக் கடத்தவிருந்த ரூ.2 கோடி மதிப்பிலான சுமார் 280 கிலோ கஞ்சா, படகு, நான்கு இருசக்கர வாகனங்கள் முதலியவை பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கஞ்சா
கஞ்சா

நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கைக்குக் கடல் மார்க்கமாக கஞ்சா கடத்தப்படுவதாக நாகப்பட்டினம் சுங்கத்துறை உதவி ஆணையர் செந்தில்குமாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த 10 நாள்களாக நாகப்பட்டினம் துறைமுகம், கீச்சாங்குப்பம் பகுதியில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவந்தனர். இந்தநிலையில் கீச்சாங்குப்பம் ஆற்று ஓரத்தில் சந்தேகத்துக்கு இடமான நிலையில் நான்கு இருசக்கர வாகனங்களில் வந்த எட்டுப் பேர் மீன்பிடி ஃபைபர் படகில் பெரிய அளவிலான பொட்டலங்களை படகின் ஐஸ்பெட்டியில் ஏற்றிக்கொண்டிருந்தனர். இதைக் கண்ட சுங்கத்துறையினர் அதிரடியாக படகைச் சுற்றிவளைத்தனர். மிரண்டுபோன கடத்தல்காரர்கள் நான்கு பேர் படகிலிருந்து ஆற்றில் குதித்து தப்பி ஓடிவிட்டனர்.

சென்னைக்கு ஆந்திராதான் கஞ்சா குடோன்; `சப்ளை பாய்ஸ்’  டெலிவரி - `போதை ஹப்’ ஆகிறதா தலைநகரம்?

மேலும் கரையில் நின்றிருந்த நான்கு நபர்களும் தங்கள் வாகனத்தை விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். படகைச் சோதனையிட்ட அதிகாரிகள் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். படகில் பத்து பொட்டலங்களில் இருந்த சுமார் 280 கிலோ கஞ்சாவை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலுக்குப் பயன்படுத்திய நான்கு இருசக்கர வாகனங்கள், ஃபைபர் படகைக் கைப்பற்றிய சுங்கத்துறையினர் தப்பி ஓடிய நபர்கள் குறித்து தீவிரமாக விசாரித்தனர்.

கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட படகு யூடியூப் சேனல் நடத்தும் நாகை மீனவர் குணசேகரனுக்குச் சொந்தமானது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிரது. மேலும் தப்பி ஓடிய எட்டுப் பேர் மீது வழக்கு பதிவு செய்த சுங்கத்துறையினர் அவர்களைத் தீவிரமாக தேடிவருகின்றனர். பிடிபட்டுள்ள கஞ்சாவின் சர்வதேச மதிப்பு ரூ. 2 கோடிக்குமேல் இருக்குமென சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கஞ்சா
கஞ்சா

நாகை மீனவர் யூடியூப் சேனல் நடத்திவந்த கீச்சாங்குப்பம் மற்றும் சேவா பாரதி பகுதிகளைச் சேர்ந்த குணசீலன், சதீஷ், சிவசந்திரன் மற்றுமொரு குணசீலன் ஆகியோரின் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். சுங்கத்துறை உதவி ஆணையர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்ற சோதனையில் குணசீலன் வீட்டில் இரண்டு லேப்டாப்கள், பென்டிரைவ், மெமரி கார்டுகள், கேமரா, வங்கிப் புத்தகங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதற்கிடையே கஞ்சா கடத்தல் வழக்கில் கல்லார் பகுதியில் மேலும் படகு ஒன்றைப் பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், படகின் உரிமையாளர் பாக்யராஜை நாகை சுங்கத்துறை அலுவலகத்தில் வைத்து தலைமறைவான கும்பல் குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். விசாரணையின் முடிவில் இது குறித்து மேலும் அதிர்ச்சியான செய்திகள் வெளிவரக்கூடும் என்கிறார்கள் அதிகாரிகள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு