தூத்துக்குடி மாவட்டம் வேம்பார், தருவைகுளம் உள்ளிட்ட கடலோரப் பகுதியிலிருந்து விரலி மஞ்சள், கஞ்சா, கடல் அட்டை, தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்கள் உள்ளிட்டவை கடல்வழியாக இலங்கை உள்ளிட்ட பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் சட்டவிரோதமாகக் கடத்தப்பட்டுவருகின்றன. மரைன் போலீஸாரும், க்யூ பிரிவு போலீஸாரும் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டும், அவற்றைப் பறிமுதல் செய்தும் வருகின்றனர். இருப்பினும் கடத்தல் சம்பவம் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டேவருகிறது.

இந்த நிலையில், விளாத்திகுளம் அருகேயுள்ள வேம்பார் கடற்கரைப் பகுதியிலிருந்து இலங்கைக்கு போதைப்பொருட்களைக் கடத்திச் செல்லவிருப்பதாக, க்யூ பிரிவு போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையெடுத்து க்யூ பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயா அனிதா தலைமையிலான தனிப்படையினர் வேம்பார் கடற்கரையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, கடற்கரையிலிருந்து ஒரு நாட்டுப்படகு கடலுக்குள் கிளம்பியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதையடுத்து போலீஸார், படகின் அருகில் சென்றுள்ளனர். அவர்களைப் பார்த்தும், அந்த நாட்டுப்படகு அதிவேகமாக கடலுக்கு செல்லத் தொடங்கியிருக்கிறது. இதனால் சந்தேகமடைந்த போலீஸார், கரையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மற்றொரு விசைப்படகு மூலமாக அந்தப் படகைப் பின்தொடர்ந்துள்ளனர். ஜி.பி.எஸ் கருவி மூலம் அந்த நாட்டுப்படகு கடலில் சென்றுகொண்டிருக்கும் இடத்தைத் துல்லியமாகக் கண்டறிந்து படகைச் சுற்றிவளைத்தனர். அதைப் பரிசோதனை செய்ததில் 2 கிலோ வீதம் ஐந்து பாக்கெட்டுகளில் 10 கிலோ கிரிஸ்டல் மெத்தாம்பேட்டமைன் என்னும் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்தப் படகில் இருந்த கீழவைப்பார் பகுதியை சேர்ந்த இருதயவாஸ், கிங்கப்பன், சிலுவை, அஸ்வின், வினிஸ்டன், சுபாஷ், கபிலன், சிப்பிகுளத்தினை சேர்ந்த சைமன் ஆகிய எட்டுப் பேரை போலீஸார் கைதுசெய்தனர். போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்திய நாட்டுப்படகையும், 10 கிலோ கிரிஸ்டல் மெத்தாம்பேட்டமைன் பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 10 கிலோ கிரிஸ்டல் மெத்தாம்பேட்டமைன் போதைப்பொருளின் சர்வதேச மதிப்பு ரூ.20 கோடி எனக் கூறப்பட்டுள்ளது. போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் நாட்டுப்படகு மூலம் இலங்கைக்கு க்கடத்திச் சென்றது தெரிய வந்துள்ளது. கைதுசெய்யப்பட்ட எட்டுப் பேரிடமும் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.