Published:Updated:

3,000 கிலோ; ரூ.21,000 கோடி மதிப்பு! - குஜராத்தில் சிக்கிய ஆப்கனிலிருந்து கடத்திவரப்பட்ட போதைப்பொருள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின்
பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின்

ஆப்கனிலிருந்து கடத்திவரப்பட்ட ரூ.21,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் குஜராத் துறைமுகத்தில் பிடிபட்டது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஆப்கானிஸ்தானில் ஆட்சியைப் பிடித்துள்ள தாலிபன்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ளனர். கடந்த தாலிபன் ஆட்சியின்போது போதைப்பொருள் வியாபாரம் கொடிகட்டிப் பறந்தது. குறிப்பாக, ஹெராயின் என்ற போதைப்பொருள் ஆப்கானிஸ்தானிலிருந்து உலகம் முழுவதும் சட்டவிரோதமாக அனுப்பப்படும். தற்போது தாலிபன்கள் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில் அந்த நாட்டிலுள்ள கந்தஹார் நகரிலிருந்து 3 டன் ஹெராயின் போதைப்பொருள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. டெல்லி வருவாய் புலனாய்வுத்துறைக்கு கிடைத்த ரகசியத் தகவலில், ஆப்கானிஸ்தானிலிருந்து குஜராத் வரும் கப்பலில் இரண்டு கன்டெய்னர்களில் 3,000 கிலோ ஹெராயின் போதைப்பொருள் அனுப்பப்பட்டிருப்பதாகத் தெரியவந்தது.

டால்கம் பவுடருக்குள் வைத்து அனுப்பப்பட்ட போதைப்பொருள்
டால்கம் பவுடருக்குள் வைத்து அனுப்பப்பட்ட போதைப்பொருள்

குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்துக் போதைப்பொருள் வந்திருப்பதாகத் தகவல் கிடைத்தது. உடனே அதிகாரிகள் முந்த்ரா துறைமுகத்தில் வந்து இறங்கிய கன்டெய்னர்களை அதிரடி சோதனை செய்தனர். இதில் இரண்டு கன்டெய்னர்களில் போதைப்பொருள் கடத்திக் கொண்டுவரப்பட்டது தெரியவந்தது. 1,999 கிலோ போதைப்பொருள் ஒரு கன்டெய்னரிலும், மற்றொரு கன்டெய்னரில் 988 கிலோ போதைப்பொருளும் இருந்தது. போதைப்பொருளை மறைப்பதற்காக கன்டெய்னரில் டால்கம் பவுடரும் சேர்த்து அனுப்பப்பட்டிருந்தது. அது, ஆந்திராவைச் சேர்ந்த ஒரு நிறுவனத்துக்காக அனுப்பப்பட்டிருந்தது.

ஆப்கானிலிருந்து இவை இரான் அனுப்பப்பட்டு, அங்கிருந்து குஜராத் துறைமுகத்துக்கு அனுப்பப்பட்டிருந்ததாக வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். போதைப்பொருள் இந்தியாவுக்குள் கடத்திக் கொண்டுவரப்பட்டதில் யாருக்குத் தொடர்பு இருக்கிறது என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் சென்னையைச் சேர்ந்த ஒரு தம்பதி, டெல்லியில் தங்கியிருந்த ஏராளமான ஆப்கன் பிரஜைகள் பிடித்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகின்றனர். பிடிபட்ட ஆப்கன் பிரஜைகளுக்கு தாலிபன்களுடன் இருக்கும் தொடர்பு குறித்து விசாரிக்கப்பட்டுவருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் காந்திநகரிலுள்ள மத்திய தடயவியல் ஆய்வுக்கூடத்தில் ஆய்வு செய்யப்பட்டபோது அது உயர்தரமான ஹெராயின் என்றும், அது ஆப்கனிலிருந்துதான் வந்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தானில் தரமான ஹெராயின் கிடைப்பது வழக்கம். ஒரு கிலோ ஹெராயின் சர்வதேச மார்க்கெட்டில் ரூ.7 கோடி. பறிமுதல் செய்யப்பட்ட மொத்த ஹெராயின் மதிப்பு ரூ.21,000 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டெல்லி, அகமதாபாத், காந்திநகர், ஆந்திராவின் சில இடங்களிலும் ரெய்டு நடத்தப்பட்டிருக்கிறது. கைதுசெய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி, மேலும் சிலர் கைதுசெய்யப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தியாவில் இந்த அளவுக்கு அதிக மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்படுவது இதுவே முதன்முறை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு