நடிகை சோனம் கபூர் மாமனார் ஹரீஷ் அகுஜா உத்தரப்பிரதேச மாநிலம் பரிதாபாத்தில் ஏற்றுமதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். சாஹி எக்ஸ்போர்ட் என்ற நிறுவனத்தை நடத்தி வரும் ஹரீசை மர்ம நபர்கள் ரூ.27 கோடி வரை மோசடி செய்துள்ளனர். ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு மாநில, மத்திய கலால் வரித்துறை சில சலுகைகளை வழங்குகிறது. அந்த சலுகைகளை பயன்படுத்தி கலால் வரி, சுங்க வரியில் சலுகை பெற முடியும். ஹரீஷ் ஏற்றுமதி நிறுவனத்திற்கு கிடைத்த சலுகை கூப்பன்களை மர்ம கும்பல் போலி டிஜிட்டல் கையெழுத்தை பயன்படுத்தி வேறு கம்பெனிக்கு மாற்றியுள்ளனர்.

மொத்தம் ரூ.27.61 கோடி மதிப்புள்ள 154 சலுகை கூப்பன்கள் சட்டவிரோதமாக மர்ம கும்பல் மூலம் போலி கம்பெனிக்கு மாற்றப்பட்டுள்ளது. இது குறித்து பரிதாபாத் துணை கமிஷனர் நிதிஷ் அகர்வால கூறுகையில், ``ஹரீஷ் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தங்களது கம்பெனியின் ஏற்றுமதி சலுகை கூப்பன்களை மர்ம கும்பல் வேறு கம்பெனிக்கு மாற்றி பணமாக்கிவிட்டதாக புகார் செய்திருந்தார். அதன் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் டெல்லி, மும்பை, சென்னை, கர்நாடகாவில் மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் சுரேஷ் குமார் ஜெயின் என்பவரும், மும்பையில் பூஷன் கிஷன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மனோஜ் ரானா, மனீஷ் குமார், பிரவீன் குமார், மனீஷ் குமார் மோகா ஆகியோர் இதற்கு முன்பு வெளிநாட்டு வர்த்தக இயக்குநகரத்தில் பணியாற்றியுள்ளனர். அவர்களுக்கு எப்படி ஏற்றுமதி சலுகை கூப்பன்களை பெறவேண்டும் என்று நன்றாக தெரிந்துள்ளது. அந்த அனுபவத்தை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.
