Published:Updated:

`போலீஸாரைக் கவனிக்கணும்; செலவாகும்!'- ஈரோட்டில் ரூ.36 லட்சத்தோடு எஸ்கேப்பான இருவர்

‘மாவட்ட அதிகாரிகள் மற்றும் போலீஸாரைக் கவனிக்க 36 லட்சம் செலவாகும். அதைக் கொடுத்தால், போலீஸ் பறிமுதல் செய்த உங்கள் ஒன்றரைக் கோடி ரூபாய் பணத்தை பெற்றுத்தருகிறோம்’ எனக்கூறி ஏமாற்றியுள்ளனர்.

கோப்புப் படம்
கோப்புப் படம்

கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்தவர், சந்தோஷ் பால். கத்தார் நாட்டில் வேலை செய்துவருகிறார். இவருக்குச் சொந்தமாக புனேயில் கொஞ்சம் சொத்துகள் இருக்கின்றன. கத்தாரில் இருந்துகொண்டே உறவினர்கள் மூலமாக சொத்துகளை விற்க முயற்சி எடுத்து வந்திருக்கிறார். அந்தவகையில், கடந்த ஆகஸ்ட் மாதம் ஒருவரிடம் சொத்துகளை விற்க விலைபேசி, முன்பணமாக ஒன்றரைக் கோடி ரூபாயைப் பெற்றுள்ளனர் சந்தோஷ் பாலின் உறவினர்கள்.

அவர்கள், அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு கார் மூலமாக கேரளாவுக்குக் கிளம்பியுள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 19-ம் தேதி இரவு சுமார் 9.30 மணியளவில், ஈரோடு மாவட்டம், ஹாசனூர் மலைப்பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸார், சந்தோஷ் பால் உறவினர்கள் வந்த காரை நிறுத்திச் சோதனையிட்டுள்ளனர்.

`ஒரு தடவை பார்ப்பார், மனப்பாடம் செய்துவிடுவார்!'- 1,300 பேரை அதிரவைத்த கிரெடிட் கார்டு மோசடி மன்னன்

அப்போது, அவர்கள் கொண்டுவந்த ஒன்றரைக் கோடி ரூபாய் பணத்துக்கு முறையான ஆவணங்கள் இல்லை எனக்கூறி, பணத்தைப் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்துவிட்டு, கோர்ட்டில் போய் பணத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள் என வெறும்கையோடு அவர்களை அனுப்பி வைத்துள்ளனர்.

கத்தாரில் இருக்கும் சந்தோஷ் பாலிற்கு இந்தச் சம்பவம் தெரியவர, கொதித்துப்போயிருக்கிறார். அதையடுத்து, அந்தப் பணத்தை மீட்பதற்காக சென்னையிலிருக்கும் கல்லூரி நண்பரான ரியாசுதீன் என்பவரிடம் உதவி கேட்டிருக்கிறார். ரியாசுதீனோ, ` இதுதொடர்பாக, வெங்கடேஷ் மற்றும் வழக்கறிஞர் சலீம் அகமது என இருவரிடம் பேசியிருக்கிறேன். அவர்களுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி ஒன்றரைக் கோடியை மீட்டுத்தருகிறேன் எனச் சொல்கிறார். ஆனால், அதற்கு அதிகாரிகளைச் சரிக்கட்ட 36 லட்சம் செலவாகும் என்கிறார்கள். என்ன செய்யலாம்?’ எனக் கேட்க, கத்தாரிலிருந்து 36 லட்சம் ரூபாயை ரியாசுதீனுக்கு அனுப்பியிருக்கிறார் சந்தோஷ் பால்.

அந்தப் பணத்தைப் பெற்றுக்கொண்ட பிறகு, வழக்கம்போல் வெங்கடேஷ் மற்றும் வழக்கறிஞர் சலீம் அகமது ஆகியோர் எஸ்கேப் ஆகிவிட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்து, ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவில் புகாரளித்த ரியாசுதீன்,

`முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வரைக்கும் எங்களுக்கு செல்வாக்கு இருக்கிறது. ஈரோடு மாவட்ட அதிகாரிகள் மற்றும் போலீஸாரைக் கவனிக்க 36 லட்சம் செலவாகும். அதைக் கொடுத்தால், போலீஸ் பறிமுதல் செய்த ஒன்றரைக் கோடி ரூபாய் பணத்தைப் பெற்றுத் தருகிறோம் என்று சொன்னார்கள்.

கைது செய்யப்பட்ட வெங்கடேஷ்
கைது செய்யப்பட்ட வெங்கடேஷ்

அதை நம்பி 36 லட்ச ரூபாயைக் கொடுத்தேன். கடைசியில் ஏமாற்றிவிட்டார்கள். பணத்தை திரும்பக் கேட்டால், கொலை செய்துவிடுவேன் என மிரட்டுகிறார்கள்’ எனக் கண்ணீர் விட்டிருக்கிறார். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணையில் இறங்கிய ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார், பண மோசடி உள்பட மூன்று பிரிவுகளின் கீழ் வெங்கடேஷைக் கைதுசெய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள சலீம் அகமதுவைத் தேடிவருகின்றனர்.

படித்தவர்களே இதுபோன்ற நபர்களிடம் பணத்தைப் பறிகொடுக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற ஆசாமிகளிடம் எச்சரிக்கையாக இருப்பது தொடர்பாக உங்கள் கருத்தைப் பதிவு செய்யலாம்.