Published:Updated:

`ஆப்பிரிக்காவில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம்; ரூ.20 கோடி?'- கல்கி ஆசிரமத்தை அதிரவைத்த ஐ.டி ரெய்டு

ஸ்ரீபகவான், என்.கே.வி கிருஷ்ணா
ஸ்ரீபகவான், என்.கே.வி கிருஷ்ணா

நாடு முழுவதும் உள்ள கல்கி ஆசிரமம் மற்றும் ஸ்ரீபகவான் மகன் என்.கே.வி கிருஷ்ணா நடத்திவரும் நிறுவனங்கள் என 40-க்கும் மேற்பட்ட இடங்களில் திடீரென இன்று ஐ.டி ரெய்டு நடத்தப்பட்டது.

ஆந்திர மாநிலத்தைத் தலைமையிடமாகக்கொண்டு கல்கி பகவான் ஆசிரமம் செயல்பட்டுவருகிறது. ஸ்ரீ பகவான் என அழைக்கப்படும் விஜயகுமார் என்பவர்தான் இந்த ஆசிரமத்தை நிறுவி, பல்வேறு ஆன்மிகப் பணிகளைச் செய்துவந்தார். நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஆசிரமங்களை நடத்திவரும் இவருக்கு, சென்னையில் மட்டும் 20 இடங்களில் கிளைகள் உள்ளன.

ஸ்ரீபகவான்
ஸ்ரீபகவான்

சமீபத்தில், வெளிநாட்டு பக்தர்கள், இளைஞர்களுக்கு போதைப் பொருள்களைக் கொடுத்து ஆபாச செயல்களில் ஈடுபட்டதாகவும், சிறப்பு பூஜை என்ற பெயரில் ஆயிரக்கணக்கான ரூபாய் வசூல் செய்யப்படுகிறது என்ற புகாரும் எழுந்தது. நீதிமன்றம் வரை சென்ற இந்த சர்ச்சை இப்போதுதான் கொஞ்சம் ஓய்ந்தநிலையில், இன்று நாடு முழுவதும் உள்ள கல்கி ஆசிரமம் மற்றும் ஸ்ரீ பகவானின் மகன் என்.கே.வி கிருஷ்ணா நடத்திவரும் நிறுவனங்கள் என 40-க்கும் மேற்பட்ட இடங்களில் திடீரென ஐ.டி ரெய்டு நடத்தப்பட்டது.

லாஸ் ஏஞ்சல்ஸ் டு பெங்களூரு பிசினஸ்! - கல்கி பகவான் மகனை வளைத்த வருமான வரித்துறை?

சென்னையில், 20 இடங்களில் இந்த ரெய்டு நடந்தது. சுமார் 400 அதிகாரிகள் இந்த ரெய்டில் ஈடுபட்டனர். ஸ்ரீ பகவானின் மகன் கிருஷ்ணா நடத்திவரும் நிறுவனங்களில், பல்வேறு பணப் பரிவர்த்தனைகளை மறைத்ததாகவும் வருமான வரி ஏய்ப்பு செய்ததாகவும் எழுந்த புகாரை அடுத்தே நடந்தது. இதற்கிடையே காலை முதல் நடந்த ரெய்டில், கல்கி பகவான் ஆசிரமம் மற்றும் கிருஷ்ணாவுக்குத் தொடர்புடைய இடங்களில், கணக்கில் வராத 20 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்ரீபகவான்
ஸ்ரீபகவான்

அதேபோல், தமிழகம் மட்டுமில்லாமல் ஆப்பிரிக்க நாடுகளிலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது, சட்டவிரோதமாக முதலீடு செய்தது மற்றும் வருமானத்தை கணக்கில் காட்டாமல் அதிக அளவில் சொத்துகளை வாங்கியுள்ளது குறித்த முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும், தொடர்ந்து வருமான வரித் துறை சோதனை நடந்துவருகிறது என்றும், நாளை வரை இந்தச் சோதனை நடைபெறும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு