Published:Updated:

328 மூட்டை வெங்காயம்... மதிப்பு ரூ.8 லட்சம்..!- அதிகாலையில் ஓனருக்கு அதிர்ச்சிகொடுத்த திருடன்

வெங்காயத்தைத் திருடும் நிலை வரும் என்று யாரும் நினைத்துப் பார்த்திருக்கமாட்டோம். அப்படியொரு சம்பவம்தான், பீகாரில் நடந்துள்ளது.

onion
onion

வெங்காயத்தால் கண்ணீர் வரும் நிலை மாறி, தற்போது வெங்காயத்தின் விலையைக் கேட்டாலே கண்களில் தண்ணீர் வரும் சூழல் உருவாகியுள்ளது. நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை விண்ணைத் தொடும் அளவுக்கு அதிகரித்துள்ளது. சில நாள்களுக்கு முன்புவரை, 15 - 20 ரூபாய்க்கு விற்கப்பட்ட 1 கிலோ வெங்காயத்தின் விலை, தற்போது, 60-80 வரை அதிகரித்திருக்கிறது. மும்பையில் 1 கிலோ வெங்காயம், 75 ரூபாய்க்கும் டெல்லியில் 80 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

வெங்காயக் கிடங்கு
வெங்காயக் கிடங்கு
Vikatan

பெட்ரோல் விலைக்கு நிகராக வெங்காயம் உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். `தமிழகத்தில் அடுத்த 2 நாள்களில் வெங்காயத்தின் விலை குறையும்’ என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் உறுதியளித்துள்ளார். நாடுமுழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வெங்காயத்தை திருடும் நிலை வரும் என்று யாரும் நினைத்துப் பார்த்திருக்கமாட்டோம். அப்படியொரு சம்பவம்தான், பீகாரில் நடந்துள்ளது. பீகாரில் உள்ள பத்வா மாவட்டத்தில் இருக்கிறது சோனாரு காலனி. அங்கிருந்த வெங்காயக்கிடங்கில் மூட்டை மூட்டையாக சாக்குப்பையில் வெங்காயங்கள் வைக்கப்படிருந்தன.

உள்ளே நுழைந்த திருடன், கிடங்கின் பூட்டை உடைத்து, உள்ளே வைக்கப்பட்டிருந்த வெங்காயத்தை திருடிச்சென்றுள்ளார். அதன்மதிப்பு 8 லட்ச ரூபாய் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. அதுமட்டுமன்றி, பணப்பெட்டியில் வைத்திருந்த, 1.83 லட்சத்தையும் திருடிவிட்டு தப்பிச்சென்றுள்ளார். விசாரணையில் இந்த வெங்காயக்கிடங்கு தீரஜ் குமார் என்பவருடையது என்பதும், அவர் பத்வா மாவட்டத்தில் உள்ள கோல்ஹர் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. பணம் மற்றும் வெங்காயம் திருடுபோனதையறிந்த தீரஜ் குமார், பத்வா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சனிக்கிழமை இரவு இந்தத் திருட்டு நடந்துள்ளது.

Vikatan
வெங்காயம்
வெங்காயம்

சம்பவம் தொடர்பாக தீரஜ் குமார், ``வழக்கமாக தினமும் காலை 8 மணிக்குக் கிடங்குக்குச் செல்வேன். அப்படித்தான் ஞாயிற்றுக்கிழமையும் சென்றேன். அப்போதுதான், பூட்டு உடைக்கப்பட்டிருந்தை பார்த்து அதிர்ச்சியடைந்தேன். 328 சாக்குமூட்டையில் இருந்த வெங்காயம் திருடப்பட்டுள்ளது. திருடன், வெங்காயப் பையை மட்டுமல்லாமல், பணப்பெட்டியையும் உடைத்து, 1.83 லட்சம் ரூபாய் பணத்தை திருடியுள்ளான்” என்றார். காவல்துறை தரப்பில், ``தீரஜ் குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்துள்ளோம். அந்தக் கிடங்கில் உள்ள சிசிடிவி கேமராவைக் கண்காணித்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.