Published:Updated:

தகராறு கொலையில் முடிந்தது! - கல்லூரி மாணவருக்கு நண்பர்களால் நடந்த துயரம்

வீ கே.ரமேஷ்
VIJAYAKUMAR M

சேலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் திலீப்குமாரை அவருடைய நண்பர்கள் மூன்று பேர் சேர்ந்து இரும்பு ராடால் தாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Murder
Murder

சேலம் பனமரத்துப்பட்டியை அடுத்த நாழிக்கல்பட்டியைச் சேர்ந்தவர் திலீப்குமார் (19). நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஆண்டகலூர் கேட் அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். திலீப்குமாருக்கு திருநாவுக்கரசு, சரவணன், சூர்யா ஆகியோர் நண்பர்களாக இருந்து வந்தார்கள். இவர்கள் அனைவரும் சேர்ந்து நாழிக்கல்பட்டியில் ஒவ்வொரு வருடமும் விநாயகர் சதுர்த்திக்கு விநாயகருக்குச் சிலை வைத்து பிறகு அதை ஏரிக்குக் கொண்டு சென்று கரைப்பது வழக்கம்.

Dhileep Kumar
Dhileep Kumar

அதே போல இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்திக்கு நாழிக்கல்பட்டியில் விநாயகர் சிலை வைப்பதில் திலீப்குமாருக்கும் திருநாவுக்கரசு, சரவணன், சூர்யா ஆகியோருக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டது. அதனால் திலீப்குமார் விநாயகர் சிலையைத் தனியாகவும் திருநாவுக்கரசு, சரவணன், சூர்யா ஆகியோர் தனியாகவும் விநாயகர் சிலையை வைத்து வழிப்பட்டு வந்தார்கள்.

இந்நிலையில் கடந்த 4-ம் தேதி விநாயகர் நிலை ஊர்வலம் சென்ற போது அனைவரும் ஆடிப் பாடி சென்றனர். அப்போது தன்னுடைய பழைய நண்பர்களான திருநாவுக்கரசு, சரவணன், சூர்யாவை பார்த்து திலீப்குமார் கிண்டல் கேலி செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த திருநாவுக்கரசு, சரவணன், சூர்யா ஆகியோர் திலீப்குமாரை தாக்க முற்பட்டனர். பொதுமக்கள் இரண்டு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு திலீப்குமார் அவரது வீட்டருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த திருநாவுக்கரசு, சரவணன், சூர்யா மீண்டும் திலீப்குமாரிடம் தகராறு செய்தார்கள். பிறகு திருநாவுக்கரசு, சரவணன், சூர்யா ஆகியோர் தயாராகக் கொண்டு வந்த இரும்புக் கம்பியால் திலீப்குமாரை சரமாரியாகத் தாக்கினார்கள். இதில் படுகாயம் அடைந்த திலீப்குமார் தப்பி ஓடினார்.

Protest
Protest

ஆனாலும், திலீப்குமாரை விடாமல் துரத்திச் சென்று கடுமையாகத் தாக்கினார்கள். இதில் திலீப்குமார் ரத்த வெள்ளத்தில் கீழே மயங்கி விழுந்தார். அதையடுத்து திருநாவுக்கரசு, சரவணன், சூர்யா தப்பி ஓடிவிட்டனர். திலீப்குமார் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைப் பார்த்த அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் திலீப்குமாரை தூக்கிக் கொண்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்குத தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி திலீப்குமார் இறந்தார். அதையடுத்து திலீப்குமாரின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் கொலையாளிகளை உடனே கைது செய்ய வேண்டுமெனச் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். பிறகு, மல்லூர் போலீஸார் சடலத்தை மீட்டு தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.