Published:Updated:

`இனி வெளியே செல்லவே கூடாது!'- பெற்றோர் எதிர்ப்பால் விபரீத முடிவெடுத்த சேலம் காதல் ஜோடி

இவர்களின் காதல், இரண்டு பேரின் வீட்டுக்கும் தெரியவந்துள்ளது. இதனால் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துவந்துள்ளனர்.

ஜோதிகா
ஜோதிகா

பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், காதல் ஜோடி சயனைடு சாப்பிட்டு தற்கொலை செய்துள்ளனர். இந்த சோகச் சம்பவம் சேலத்தில் நடந்துள்ளது.

ஜோதிகா
ஜோதிகா
எம். விஜயகுமார்

சேலம் செவ்வாய்ப்பேட்டை அங்காளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர், கோபி. இவர், வெள்ளிப்பட்டறை வைத்திருக்கிறார். இவரது மகன் சுரேஷ் (22). இவர், தனது தந்தையோடு வெள்ளி ஆபரணங்கள் செய்யும் தொழில் செய்துவந்தார். குகை மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர், ரவி. இவர், வெள்ளி மற்றும் ஜவுளி வியாபாரம் செய்துவருகிறார். இவரது மகள் ஜோதிகா (20). இவர், சேலத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்துவந்தார்.

சுரேஷும் ஜோதிகாவும் நீண்ட நாள்களாகக் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் இரண்டு பேரின் வீட்டுக்கும் தெரியவந்துள்ளது. இதனால், இவர்களின் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துவந்துள்ளனர். வீட்டை விட்டு வெளியே போகக் கூடாது என்று ஜோதிகாவுக்கு பெற்றோர் கன்டிஷன் போட்டிருக்கிறார்கள். இதனால், காதலர்கள் இருவரும் சந்திக்க முடியாமல் தவித்துவந்திருக்கிறார்கள்.

சுரேஷ்
சுரேஷ்

இந்நிலையில், நேற்று முன்தினம் சுரேஷும் ஜோதிகாவும் சந்தித்திருக்கிறார்கள். தங்களது வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதைச் சொல்லி இருவரும் வருத்தமடைந்துள்ளனர். `நம்மை யாராலும் பிரிக்க முடியாது. நாம் சேர்ந்தே செத்துப்போகலாம்' என்ற மனநிலைக்குக் காதலர்கள் வந்திருக்கிறார்கள். இதையடுத்து, சுரேஷ் தனது தந்தையின் காரில் காதலியை உட்காரவைத்து சயனைடு சாப்பிட்டுள்ளனர். இருவரும் காரிலேயே உயிரிழந்தனர்.

இரவு வெகுநேரமாகியும் சுரேஷ் வீட்டுக்கு வரவில்லை. செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, சுரேஷை அவரது குடும்பத்தினர் தேட ஆரம்பித்தனர். சுரேஷின் தந்தை கோபி, தனது காரை சேலம் ஜவுளிக்கடை பஸ் ஸ்டாப் அருகேதான் நிறுத்திவைத்திருப்பார். அங்கு சென்று காருக்குள் பார்த்தபோது, சுரேஷ்-ஜோதிகா இருவரும் சடலமாகக் கிடந்தனர். அதைப் பார்த்த குடும்பத்தினர், கதறி அழுதனர்.

suresh
suresh

அதையடுத்து, சேலம் செவ்வாய்ப்பேட்டை காவல்துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் இருவரின் உடலையும் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்கு சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர்.

இதுபற்றி ஜோதிகாவின் வீட்டில் விசாரித்தபோது, ''ஜோதிகா ரொம்பத் துணிச்சலான பெண். அவள் காதல் செய்திருந்தால் எங்களிடம் சொல்லி இருப்பாள். அவள் யாரையும் காதலிக்கவில்லை. யாரோ கொலைசெய்து போட்டிருக்கிறார்கள்'' என்றார்கள்.

மருத்துவமனை
மருத்துவமனை

இதுபற்றி செவ்வாய்ப்பேட்டை இன்ஸ்பெக்டர் சுந்தராம்பாளிடம் கேட்டதற்கு, ''இருவரும் நீண்ட நாள்களாகக் காதலித்து வந்திருக்கிறார்கள். இருவர் வீட்டிலும் எதிர்ப்பு இருந்திருக்கிறது. அதனால், இவர்கள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். யார் எதிர்ப்பு தெரிவித்தார்கள் என்பதை விசாரணை செய்து வருகிறோம். மற்றபடி, கொலை செய்திருக்கிறார்கள் என்பதெல்லாம் பொய். தீவிரமாக விசாரணை செய்து கொண்டிருக்கிறோம்'' என்றார் இயல்பாக.