Published:Updated:

`தானுண்டு, தன் வேலை உண்டுனு இருப்பான்!'- உயிருக்குப் போராடும் தம்பிக்காக கண்கலங்கும் கம்யூனிஸ்ட் பிரமுகர்

வீ கே.ரமேஷ்
VIJAYAKUMAR M

``அவர்கள்மீது தனிப்பட்ட எந்தப் பகையும் கிடையாது. என் தம்பி எதிலும் தலையிட மாட்டார். அவர், தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவர்.''

வேலுதங்கமணி
வேலுதங்கமணி

``ஜவுளிக்கடையில், அதன் உரிமையாளரும் பெண் ஊழியரும் இருக்கிறார்கள். அங்கு, தொப்பி போட்ட இரண்டு வாலிபர்கள், ஜவுளிக்கடை உரிமையாளர் கொடுக்கும் துணிகளைப் பார்த்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். பிறகு, அந்த வாலிபர்கள் பின்னாடி மறைத்துவைத்திருந்த வீச்சரிவாளை எடுத்து, உரிமையாளரை சரமாரியாக வெட்டுகிறார்கள். அருகில் இருந்த பெண் ஊழியர் அலறி ஓடுகிறார்'' இந்த வீடியோ காட்சி, தற்போது சமூக வலைதளங்களில் வந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தக் கொடூர சம்பவம், சேலம் மாவட்டம் நங்கவள்ளியில் நடந்துள்ளது. இச்சம்பவம் நடைபெற்று 6 நாள்கள் ஆகியும் இன்னும் குற்றச்செயலில் ஈடுபட்டவர்களைக் காவல்துறை பிடிக்க முடியாமல் திணறிவருகிறது.

கந்துவட்டித் தொழில் செய்யக்கூடியவர்கள். அவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் என்னிடம் வருவார்கள். நான் அவர்களை காவல்துறையிடம் அனுப்பிவைப்பேன். மற்றபடி அவர்கள்மீது தனிப்பட்ட எந்தப் பகையும் கிடையாது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஜீவானந்தம்

சேலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நங்கவள்ளி ஒன்றியச் செயலாளராக இருப்பவர், ஜீவானந்தம். இவருடைய தம்பி வேலுதங்கமணி. இவர், நங்கவள்ளி டவுன் பகுதியில் பல ஆண்டுகளாக ஜவுளிக்கடை நடத்திவருகிறார். இவர்மீதுதான் இந்தக் கொலைவெறித் தாக்குதல் நடந்துள்ளது. இச்சம்பவத்தால் பலத்த காயம் அடைந்த வேலுதங்கமணி, ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார். இச்சம்பவத்தைப் பார்த்த ஜவுளிக்கடையில் வேலைபார்த்த பெண் ஊழியர், பயந்து, சத்தம் போட்டுக் கத்தினார். சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பொதுமக்கள் ஓடி வருவதைக் கண்ட அந்த இரண்டு நபர்களும் தப்பி ஓடிவிட்டனர். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த வேலுதங்கமணி, சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

இச்சம்பவத்தை அறிந்த நங்கவள்ளி காவல்துறையினர் அப்பகுதிக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். பிறகு, சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபாகானிகேர் நேரில் வந்து விசாரணையை மேற்கொண்டார். அப்போது, ஜவுளிக்கடைக்குள் புகுந்து வேலுதங்கமணியை வெட்டியவர்கள், நங்கவள்ளி பகுதியைச் சேர்ந்த சதீஷ் மற்றும் மணி என்பது தெரியவந்தது. அவர்களைப் பிடிக்க தனிப்படையும் அமைத்தார். இதையடுத்து கோவை ஐஜி பெரியய்யா, நங்கவள்ளிக்கு நேரில் வந்து ஆய்வுகளை மேற்கொண்டு, ஜவுளிக்கடை உரிமையாளர் வேலுதங்கமணியை வெட்டிவிட்டு தப்பி ஓடிய சதீஷையும், மணியையும் பிடிக்க சேலம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தலைமையில் 3 தனிப்படை அமைத்துள்ளார். இந்நிலையில், சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் வேலுதங்கமணியின் உடல்நிலை மிக மோசமானதால், பெங்களூரு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

ஜவுளிக்கடையில் ரவுடிகள்
ஜவுளிக்கடையில் ரவுடிகள்

இதுபற்றி வேலுதங்கமணியின் அண்ணனும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நங்கவள்ளி ஒன்றியச் செயலாளருமான ஜீவானந்தம், ''என் தம்பி வேலுதங்கமணி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் ஒன்றிய உறுப்பினர் பதவியில் இருக்கிறார். கட்சிக் கூட்டத்திற்கு வந்துபோவார். மற்றபடி போராட்டம், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதில்லை. இந்த நங்கவள்ளி பகுதியில் சதீஷ் மற்றும் அவருடைய அப்பா முத்துசாமி, அண்ணன் கெளதமன் ஆகியோர் கந்துவட்டித் தொழில் செய்யக்கூடியவர்கள்.

அவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் என்னிடம் வருவார்கள். நான் அவர்களை காவல்துறையினரிடம் அனுப்பிவைப்பேன். மற்றபடி அவர்கள்மீது தனிப்பட்ட எந்தப் பகையும் கிடையாது. என் தம்பி எதிலும் தலையிட மாட்டார். அவர், தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவர். நங்கவள்ளியைச் சேர்ந்த சதீஷ், மேட்டூரைச் சேர்ந்த மணி இருவரும் ரவுடிகள். அவர்கள், விளம்பரத்திற்காகச் செய்திருக்கலாம். மற்றபடி அவர்களுக்கும் என் தம்பிக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.

இவர்களையும் இவர்களுக்குப் பின்னாடி இருப்பவர்களையும் காவல்துறை கடுமையாகத் தண்டிக்க வேண்டும். என் தம்பி மோசமான நிலையிலேயே பெங்களூரு சக்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது'' என்றார்.