Election bannerElection banner
Published:Updated:

பிறந்தநாள் பார்ட்டி; வகுப்பறைக்குள் பீர் பாட்டில்கள்!- ஆசிரியர்கள் திட்டியதால் மாணவி தற்கொலை

பீர் பாட்டில்
பீர் பாட்டில்

`கல்பனாவுக்குப் பிறந்தநாள் என்பதால் எங்களுக்குப் பார்ட்டி கொடுக்க பீர் பாட்டில் வாங்கி வந்தாள்'

சேலம் மாவட்டம், நங்கவள்ளியில் வகுப்பறைக்குள் மாணவி ஒருவர் பீர் பாட்டில் வைத்திருந்ததால் ஆசிரியரும், தலைமை ஆசிரியரும் திட்டியதோடு பெற்றோரை வரவழைத்து எச்சரித்து அனுப்பியுள்ளனர். இதனால், உளவியல்ரீதியாகப் பாதிக்கப்பட்ட அந்த மாணவி தற்கொலை செய்து இறந்துள்ளார். பெற்றோர், காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்காமல் இரவோடு இரவாக மாணவியின் உடலையும் எரித்த சம்பவம் சேலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நங்கவள்ளி போலீஸாரிடம் பேசினோம். ''சேலம் மாவட்டம் நங்கவள்ளி சின்ன சோரகை கிராமத்தைச் சேர்ந்தவர் கல்பனா. (பெயர் மாற்றம்). இவர் நங்கவள்ளியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ் டூ படித்து வந்தார். கடந்த 15-ம் தேதி கல்பனாவுக்குப் பிறந்தநாள் என்பதால் பீர் பாட்டில்களை வாங்கிவந்து வகுப்பறையில் அனைத்து மாணவிகளிடமும் காட்டியிருக்கிறார்.

மாணவிகள்
மாணவிகள்

அப்போது வகுப்பாசிரியர் வந்திருக்கிறார். மாணவிகள் கையில் பீர் பாட்டில் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தவர், அவர்களைத் திட்டிய கையோடு 5 மாணவிகளைத் தலைமையாசிரியரிடம் அழைத்துச் சென்று புகார் தெரிவித்திருக்கிறார். பிறகு தலைமை ஆசிரியரும், வகுப்பு ஆசிரியரும் சேர்ந்து அந்த 5 மாணவிகளையும் கடுமையாகத் திட்டியதோடு, `யார் பீர் பாட்டில்களை வாங்கி வந்தது எனச் சொல்லவில்லை என்றால் டி.சி கொடுத்து அனுப்பி விடுவோம்' என்று மிரட்டியிருக்கிறார். இதனால் பயந்து போன மாணவிகள், 'கல்பனாவுக்குப் பிறந்தநாள் என்பதால் எங்களுக்குப் பார்ட்டி கொடுக்க பீர் பாட்டில் வாங்கி வந்தாள்' எனக் கூறியுள்ளனர்.

தோழி அழைக்கிறார்... விஷ ஊசி போட்டு தற்கொலை!- சென்னை நர்ஸ் மரணத்தில் விலகாத மர்மம்

இதையடுத்து, கல்பனாவின் பெற்றோரைப் பள்ளிக்கு வரவழைத்துப் பெற்றோர் முன்பும் அசிங்கமாகத் திட்டி எச்சரிக்கை செய்து வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். வீட்டில் பெற்றோரும் கல்பனாவைத் திட்ட மன உளைச்சல் ஏற்பட்ட கல்பனா யாருக்கும் தெரியாமல் வீட்டுக்குள் தூக்குப் போட்டு தற்கொலை செய்து இறந்துள்ளார். இச்சம்பவம் வெளியில் தெரிந்தால் போலீஸ் கேஸ் ஆகும் என்பதால் யாருக்கும் தெரியாமல் அந்த மாணவியின் உடலைப் பெற்றோர்கள் இரவோடு இரவாகத் தீ வைத்து எரித்துள்ளார்கள்.

எப்படியோ நங்கவள்ளி கிராம அலுவலருக்குத் தெரியவர அவர் நங்கவள்ளி காவல்நிலையத்தில் இதுசம்பந்தமாகப் புகார் கொடுத்தார். இதையடுத்து வழக்குப் பதிவு செய்ததோடு உடலை எரித்துள்ளதால் மேல் நடவடிக்கை எடுக்கவும் முயற்சி செய்து வருகிறோம். யாருக்கும் தகவல் கொடுக்காமல் பெற்றோர்கள் மாணவியை எரித்துள்ளனர். வி.ஏ.ஓ கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ளோம்" என்கின்றனர்.

death
death

இதுகுறித்து பேசிய வி.ஏ.ஓ., ``என்ன காரணத்திற்காக மாணவி இறந்தார் என்று எனக்கு தெரியாது. இறந்தை எங்க கவனத்திற்கு சொல்லாமல் எரித்ததால் புகார் கொடுத்தேன்" என்றார். சேலம் முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி பேசும்போது, "மது வைத்திருந்த மாணவியை தனியாகத் தான் விசாரித்துள்ளனர். பிறகு பெற்றோரை அழைத்து ஆலோசனை சொல்லி அனுப்பி இருக்கிறார்கள். வீட்டிற்கு போய் மாணவி தற்கொலை செய்து இறந்துள்ளார் எனக் கூறப்படுகிறது. மேற்கொண்டு இளம்பிள்ளை கல்வி அலுவலர் விசாரித்து வருகிறார்" என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு