Published:Updated:

`கல்யாணமாகி 60 நாள்கள் கூட ஆகலை..!’- மதுபோதை...சாதி வெறியால் சேலம் பட்டதாரிக்கு நேர்ந்த கொடூரம்

விஷ்ணுபிரியன் வீடு
விஷ்ணுபிரியன் வீடு ( எம்.விஜயகுமார் )

மது போதையில் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த சிலர் கத்தி, உருட்டுக்கட்டையோடு பட்டியலின கிராமத்திற்குள் புகுந்து தாக்கினர்.

மது போதையில் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த சிலர் கத்தி, உருட்டுக்கட்டையோடு பட்டியலின கிராமத்திற்குள் புகுந்து அங்கிருந்தவர்களைச் சரமாரியாகத் தாக்கினர். திருமணமாகி 60 நாள்கள் கூட ஆகாத சாஃப்ட்வேட் இன்ஜினீயர் இளைஞரை அவருடைய மனைவி மற்றும் பொற்றோர் கண் முன்பே கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் சேலத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சாதிக் கலவரம் உருவாகும் அபாயம் இருக்கிறது. அதையடுத்து அப்பகுதியில் காவல்துறை குவிக்கப்பட்டுள்ளனர்.

விஷ்ணுபிரியன்
விஷ்ணுபிரியன்

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த பொட்டிபுரத்தைச் சேர்ந்த சில மாற்றுச் சமூகத்தினர் தொப்பளான் காடு வனப்பகுதியில் மது அருந்தி விட்டு டூவீலரில் திரும்பி வந்திருக்கின்றனர். அப்போது மூங்கில் குச்சியால் வழியில் இருப்பவர்களை தாக்கிக்கொண்டே வந்ததாகச் சொல்கிறார்கள். சக்கரைசெட்டிப்பட்டி பட்டியலின கிராமத்தில் ரோட்டோரமாக நின்றிருந்தவர்களை அடித்துள்ளனர். அதையடுத்து, அந்தக் கிராமத்தினர் பைக்கில் வந்த இரண்டு பேரைப் பிடித்து காவல்துறையில் ஒப்படைப்பதற்காக அங்கு அமர வைத்திருக்கிறார்கள். தப்பித்துச் சென்றவர்கள் ஊரில் போய் ஆட்களைக் கூட்டி வந்து இந்தக் கொடூர கொலையைச் செய்திருக்கிறார்கள்.

இதுபற்றி சக்கரை செட்டிப்பட்டியைச் சேர்ந்த அபிமன்யு கூறுகையில், ``'நேற்று மாலை பொட்டிபுரம் மாற்று சமுதாயத்தைச் சேர்ந்த சுமார் 10 பேர் தொப்பளான் காட்டு வனப்பகுதியில் மது அருந்தி இருக்கிறார்கள். வனத்தில் உள்ள மூங்கில் குச்சிகளை எடுத்து அங்குள்ள பட்டியலின மக்களை அடித்து அவர்களிடம் தகராறு செய்து விட்டு வந்திருக்கிறார்கள்.

எங்க ஊரில் ரோட்டோரமாக நாங்கள் நின்று கொண்டிருந்தோம். நான்கு டூவீலர்களில் மூங்கில் குச்சியோடு, 'ஏன்டா.............நாயே' என்று எங்க சாதிப் பெயரைச் சொல்லி ஆபாச வார்த்தைகளில் திட்டிக் கொண்டே வந்து ரோட்டோரமாக நின்றுகொண்டிருந்த எங்க ஊர் பெரியவர்களை அடிச்சாங்க. நாங்க போய், `எதற்கு அடிக்கிறீங்கன்னு' கேட்டதற்குப் போதையில் எங்களைத் தாக்கினார்கள்.

போலீஸ் குவிப்பு
போலீஸ் குவிப்பு

அவர்களைக் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப் பிடித்தோம். எல்லோரும் கிளம்பிப் போயிட்டாங்க. ரெண்டு பேரை மட்டும் பிடித்து ஊருக்குள் உள்ள மாரியம்மன் கோயிலில் உட்கார வச்சிட்டு போலீஸுக்குத் தகவல் கொடுத்தோம். தப்பித்துப் போனவர்கள் அவுங்க ஊர்க்காரர்களிடம் சொல்லி உருட்டுக்கட்டை, கத்தியோடு பா.ம.க முன்னாள் ஒன்றியச் செயலாளர் செந்தில்குமார் தலைமையில் எங்க ஊருக்கு வந்தார்கள்.

ரோட்டோரமாக இருந்த வீடுகளில் கற்களை வீசி இருக்கிறார்கள். விஷ்ணுபிரியன் வீட்டிலும் கற்கள் விழுந்துள்ளது. அவர்களுக்கு இந்தச் சம்பவம் பற்றி எதுவும் தெரியாது. சத்தம் கேட்டு விஷ்ணுபிரியனின் அம்மாவும், அவுங்க தம்பி நவீனும் வெளியே வந்திருக்கிறார்கள். நவீனைப் பிடித்து தலை, கை, கால்களில் கத்தியால் குத்தி இருக்கிறார்கள். அம்மாவின் சத்தத்தைக் கேட்டு விஷ்ணுபிரியன் சப்பாத்தி சாப்பிட்டுக்கொண்டே வெளியே வந்திருக்கிறார்.

தம்பியை அடிப்பதைப் பார்த்துப் பதறிப் போன விஷ்ணுபிரியன், தடுத்து வீட்டின் கேட்டை பூட்டுப் போட முயன்றுள்ளார். அப்போது அவரை வெளியே இழுத்து மனைவி, பெற்றோர் கண்முன்னே குத்திக் கொலை செய்தார்கள். இத்தகவல் கேள்விப்பட்டு மாரியம்மன் கோயிலிருந்து ரோட்டுக்கு ஓடி வந்தோம். பஞ்சாயத்துத் தலைவர் வெங்கடேசனின் மகன் ஊருக்குப் பின்புறமாக காரில் வந்து, நாங்க பிடிச்சு வைச்சிருந்த அந்த ரெண்டு பசங்களையும் கூட்டிட்டுப் போயிட்டார். நாங்க விஷ்ணுபிரியனையும், நவீனையும் மணிப்பால் மருத்துவமனைக்குக் கொண்டு போனோம். மருத்துவமனை போனதும் விஷ்ணுபிரியன் இறந்து விட்டார்'' என்றார்.

அபிமன்யு
அபிமன்யு

விஷ்ணுபிரியனின் பெரியப்பா சேட்டு கூறுகையில், ``விஷ்ணுபிரியன் எம்.சி.ஏ., முடிச்சிட்டு சென்னையில் சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கிறார். திருமணமாகி 60 நாள்கள் கூட ஆகவில்லை. கொரோனா ஊரடங்கிற்காக இங்கு வந்திருந்தான். நவீன் பி.இ., படித்திருக்கிறார். வீட்டை விட்டு வெளியே வராத அமைதியான குடும்பம். எதற்காகக் கொலை செய்கிறார்கள் என்று தெரியாமலேயே இறந்துள்ளான். காரணமானவர்களைத் தூக்கில் போட வேண்டும்'' என்றார் வேதனையுடன்.

அடுத்த கட்டுரைக்கு