Published:Updated:

`பெற்றோருடன் செல்வதாகக் கூறிய சேலம் இளம்பெண்!' - மேட்டூர் மகளிர் காவல்நிலையத்தில் என்ன நடந்தது?

வேனில் ஏற்றப்படும் இளமதி
வேனில் ஏற்றப்படும் இளமதி ( க.தனசேகரன் )

``அந்தப் பெண் யாரிடமும் பேச விரும்பவில்லை. பெற்றோரோடு போவதாகக் கூறுகிறார். சாதியவாதிகள் அச்சுறுத்தி, பெண்ணின் மனநிலையை மாற்றிவிட்டார்கள்''

சேலம் கொளத்தூரில் செல்வன் - இளமதி இருவரும் சாதி மறுப்பு சுயமரியாதை திருமணம் செய்துகொண்டனர். இந்தநிலையில், கடத்தப்பட்ட பெண் இளமதியை நான்கு நாள்களுக்குப் பிறகு நேற்று (மார்ச் 14) மதியம் மேட்டூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஆஜர்படுத்தினர். தகவல் அறிந்து மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குச் சென்றோம். இளமதி காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டர் அறையில் அமர்ந்திருந்தார்.

இளமதி
இளமதி
க. தனசேகரன்.

மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் என்ன நடந்தது?

மாலை 4:00 - காவல் நிலைய காம்பவுண்டிற்கு உள்ளே திராவிடர் விடுதலைக் கழகத்தினர் சுமார் 30 பேரும், காம்பவுண்டிற்கு வெளியே பா.ம.கவினர் சுமார் 250 பேருக்கு மேற்பட்டவர்களும் இருந்தார்கள். காவல்துறையினர் திராவிடர் விடுதலைக் கழகத்தினரிடம்,``இளமதி பெற்றோர்களோடு போவதாகத் தெரிவித்துள்ளார்'' என்றார்கள். திராவிடர் விடுதலைக் கழகத்தினர், ``பெண்ணையும், பையனையும் தனியாகப் பேச அனுமதிக்க வேண்டும்'' என்றார்கள். காவல்துறையினர் டி.எஸ்.பியிடம் கேட்பதாகத் தெரிவித்துச் சென்றார்கள்.

மாலை: 4:45 - டி.எஸ்.பி செளந்தரராஜன் திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த இருவரை மட்டும் பெண்ணிடம் பேச அனுமதிப்பதாகச் சொன்னார். இதையடுத்து நாத்திகஜோதியும் மற்றொருவரும், பெண்ணிடம் பேச காவல்நிலையத்துக்குள் சென்றனர். பா.ம.கவினர் முக்கிய பிரமுகர்கள் ஒவ்வொருவராக காம்பவுண்டிற்குள் வரத் தொடங்கினார்கள்.

மாலை 5:05 - காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்த நாத்திகஜோதி, ``அந்தப் பெண் யாரிடமும் பேச விரும்பவில்லை. பெற்றோரோடு போவதாகக் கூறுகிறார். சாதியவாதிகள் அச்சுறுத்தி, பெண்ணின் மனநிலையை மாற்றி விட்டார்கள்'' என்று பத்திரிகைகளுக்குப் பேட்டி கொடுத்துவிட்டு, காவல் நிலையத்திலிருந்து திராவிடர் விடுதலைக் கழகத்தினரைக் கூட்டிச் சென்றார்.

மாலை 5:30 - இளமதியின் வழக்கறிஞர் சரவணனிடம் பேசினோம். ``சடங்குகள் செய்து தாலி கட்டினால்தான் இந்து திருமணச் சட்டம் செல்லும். சுயமரியாதை திருமணம், பதிவு செய்தால் மட்டுமே செல்லும். அவர்கள், பெண்ணை வலுக்கட்டாயமாகத் தூக்கிச்சென்று மிரட்டி, மாலை மாற்றி இருக்கிறார்கள். நடந்தது திருமணமே இல்லை'' என்றார்.

செல்வன் - இளமதி
செல்வன் - இளமதி
க. தனசேகரன்

மாலை 5:45 - பா.ம.கவைச் சேர்ந்த மேற்கு மாவட்டச் செயலாளர் ராஜசேகர், பவானி மாவட்ட கவுன்சிலர் வேலுச்சாமி, மாநில துணைப் பொதுச் செயலாளர் கோபால், மேட்டூர் நகரச் செயலாளர் சந்திரசேகரன், மேட்டூர் நகரத் தலைவர் முருகன் மற்றும் சிலர் டி.எஸ்.பியைச் சந்தித்துப் பேசி விட்டு வெளியே வந்தார்கள். வெளியே வந்தவர்களிடம் கேட்டதற்கு நிலவரம் குறித்து கேட்டதாகத் தெரிவித்தார்கள்.

மாலை 6:00 - பத்திரிகையாளர்கள் டி.எஸ்.பியிடம் கேட்டதற்கு ``நீதிபதியிடம் ஒப்படைக்க நேரம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். நேரம் கிடைத்ததும், பெண்ணை நீதிபதியிடம் ஒப்படைப்போம்'' என்று கூறிவிட்டு ஜீப்பில் வெளியில் சென்றார்.

இரவு 7:00 - காவல் நிலையத்திற்கு டி.எஸ்.பி வந்தார். பா.ம.கவின் முக்கிய நிர்வாகிகளைக் காவல்நிலையத்துக்குள் அழைத்து பேச்சுவார்த்தை நடந்தது. காவல்துறை தரப்பில் டி.எஸ்.பி செளந்தரராஜன், கொளத்தூர் இன்ஸ்பெக்டர் சக்கரபாணி, மேட்டூர் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன், பவானி இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் ஆகியோரும் பா.ம.க தரப்பில் 15-க்கும் மேற்பட்டவர்கள் இருந்தார்கள்.

இரவு 7:30 - காவல் நிலையத்தை விட்டு வெளியே வந்தவர்களிடம் பேசினோம். ``வன்கொடுமை தடுப்புச் சட்டம் பதிவு செய்திருப்பதால் பெண்ணைச் சிறப்பு நீதிபதியிடம் ஒப்படைக்க வேண்டுமாம். நீதிபதி வெளியே இருக்கிறார். திங்கள்கிழமை வரச் சொல்லுகிறார். காவல்துறையினர் பெண்களின் பாதுகாப்பு கருதி பாதுகாப்பு மையத்துக்கு அனுப்புவதாகச் சொல்லுகிறார்கள். `பெண்ணைக் காவல் நிலையத்தில் நாங்கள் தானே ஆஜர்படுத்தினோம். திங்கள்கிழமை நாங்களே காவல்நிலையத்துக்குக் கூட்டி வருகிறோம்' என்று நாங்கள் கூறியதற்கு டி.எஸ்.பி ஓகே சொன்னார்.

பா.ம.கவினர்
பா.ம.கவினர்
க.தனசேகரன்

ஆனால் இவ்வழக்கின் விசாரணை அதிகாரி சக்கரபாணி `நாளைக்குச் சட்டச் சிக்கல் ஏற்பட்டால் அதற்கு நான்தான் பதில் சொல்ல வேண்டிவரும். அதனால், பெண்ணைப் பாதுகாப்பு மையத்துக்குத்தான் அனுப்புவேன்' என்று அடம்பிடிக்கிறார். அதையடுத்து, எங்கள் தரப்பில் சட்டத்துறை அமைச்சருக்கும், அவருடைய உதவியாளருக்கும் போன் பேசிக் கொண்டிருக்கிறார்கள்'' என்று கூறிவிட்டு உள்ளே சென்றார்கள்.

இரவு 8:15 வெளியே வந்த சிலர், `சட்டத்துறை அமைச்சரே பேசி விட்டார். எல்லாம் ஓ.கே ஆயிடுச்சு' என்றார்கள். பவானி மாவட்ட கவுன்சிலர் வேலுசாமி வெளியே இருந்த பெண்ணின் தாயைக் காவல் நிலையத்துக்குள் கூட்டிச் சென்றார். பெண்ணிக்கு எந்த ஒரு இடையூறும் ஏற்படக் கூடாது என்று எழுதி வாங்கிக் கொண்டார்கள்.

வேனில் ஏற்றப்பட்டும் இளமதி
வேனில் ஏற்றப்பட்டும் இளமதி
க.தனசேகரன்

இரவு 8:40 இளமதியைக் காவல் நிலையத்திற்குள்ளிருந்து 20-க்கும் மேற்பட்டவர்கள் புடைசூழ, `வெற்றி... வெற்றி'' என்று கூறியவாறு காவல் நிலையத்திற்கு வெளியே வந்தார்கள். இளமதி சோகமாகவே வந்தார். காம்பவுண்டிற்கு வெளியே 200-க்கும் மேல் திரளாகக் கூடியிருந்த பா.ம.கவினர் `மருத்துவர் அய்யா வாழ்க! மருத்துவர் அய்யா வாழ்க!' என்று கோஷம் போட்டுப் பெண்ணை வேனில் ஏற்றிச் சென்றார்கள். வேனைத் தொடர்ந்து கார்களிலும் டூவிலர்களிலும் மற்றவர்கள் சென்றார்கள்.

அடுத்த கட்டுரைக்கு