Published:Updated:

சத்தம் கேட்குதேன்னு வெளியில் வந்தவனை குத்திக் கொன்னுட்டாங்க...

சேலம் கொலை
பிரீமியம் ஸ்டோரி
News
சேலம் கொலை

சாதி வெறியர்களால் சிதைக்கப்பட்ட அப்பாவிக் குடும்பம்

மது போதையில் சாதிவெறி தலைக்கேறிய கொடூரர்கள் சேர்ந்து செய்த ஒரு கொலை, ஓர் அப்பாவிக் குடும்பத்தையே சின்னாபின்னமாகச் சிதைத்துப் போட்டுள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்து உள்ளது சக்கரைசெட்டிப்பட்டி. பட்டியலின மக்கள் வசிக்கும் இந்தக் கிராமத்தில், மே 8-ம் தேதி பொட்டிபுரத்தைச் சேர்ந்த மாற்றுச் சமூகத்தினர் சிலர் மதுபோதையில் பிரச்னை செய்துள்ளனர். அவர்களில் இருவரை ஊர்க்காரர்கள் பிடித்து வைத்துள்ளனர். தப்பிச் சென்றவர்கள், மேலும் பலரைத் திரட்டிக்கொண்டு வந்து அந்தக் கிராமத்தில் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதில் விஷ்ணுபிரியன் என்கிற 28 வயது இளைஞரை, அவரின் மனைவி மற்றும் பெற்றோரின் கண் முன்னே குத்திப் படுகொலை செய்துள்ளனர். இந்தச் சம்பவம், சேலத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

என்ன நடந்தது? சக்கரைசெட்டிப் பட்டி யைச் சேர்ந்த அஜீத்குமார் என்பவரிடம் பேசினோம். ‘‘அன்னைக்கு சாயங்காலம் 6 மணி இருக்கும். பொட்டி புரத்தைச் சேர்ந்தவங்க சுமார் பத்து பேர், எங்க ஊரைத் தாண்டியுள்ள தொப்பளான்காடு காட்டுப் பகுதியில போய் சரக்கு அடிச்சுட்டு, நாலு டூவீலர்ல நிறை போதையில வந்தாங்க. அவங்க கையில மூங்கிக்குச்சி இருந்துச்சு. பார்த்ததுமே அவங்க வர்ற விதமே சரியில்லைன்னு புரிஞ்சிருச்சு. ரோட்டோரம் நின்னுக்கிட்டு இருந்த நாங்க, கொஞ்சம் ஒதுங்கி நின்னோம். ஆனா, அவங்க அந்த மூங்கிக்குச்சியால போறப்போக்குல எல்லோரையும் அடிச்சுக்கிட்டே போனாங்க. பெரியவங்களைக்கூட விடலை. சாதிப் பெயரைச் சொல்லி அசிங்கமா திட்டிக்கிட்டே அடிச்சாங்க.

விஷ்ணுபிரியன்
விஷ்ணுபிரியன்

‘எதுக்கு தேவையில்லாம எல்லோரையும் அடிக்கிறீங்க?’னு கேட்டதுக்கு, கேட்டவங்களையும் அடிச்சாங்க. அவங்களைப் பிடிச்சு போலீஸ்ல கொடுத்திடணும்னு துரத்தினோம். ரெண்டு பேரைத் தவிர மத்தவங்க தப்பிச்சுட்டாங்க. அந்த ரெண்டு பேரையும் எங்க ஊரு மாரியம்மன் கோயில்ல உக்காரவெச்சுட்டு, ஓமலூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுத்தோம். ஒரு மணி நேரமாகியும் போலீஸ் வரலை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதற்கிடையில, தப்பிச்சுப் போனவங்க பா.ம.க நிர்வாகியான செந்தில்குமார் தலைமையில முப்பது பேரைத் திரட்டிக் கிட்டு உருட்டுக்கட்டை, கத்தியோடு ஊருக்குள்ள நுழைஞ்சாங்க. ரோட்டோரமா இருந்த வீடுங்க மேலயெல்லாம் கற்களை வீசினாங்க. அவங்க வீசின கல்லு விஷ்ணுபிரியன் வீட்டு மேலயும் விழுந்திருக்கு. சத்தம் கேட்டு வெளிய வந்த விஷ்ணுபிரியனை, கத்தியால குத்திட்டாங்க. ரத்த வெள்ளத்துல மிதந்த விஷ்ணுபிரியனை ஆஸ்பத்திரிக்குத் தூக்கிக்கிட்டு ஓடினோம். ஆனாலும், அவர் உயிரைக் காப்பாத்த முடியலை. இந்த கேப்ல கோயில்ல நாங்க பிடிச்சு வெச்சிருந்த ரெண்டு பேரும் எஸ்கேப் ஆகிட்டாங்க. சம்பந்தமே இல்லாம அப்பாவியோட உசுரு போயிருச்சுங்க’’ என்று கலங்கினார்.

சத்தம் கேட்குதேன்னு வெளியில் வந்தவனை குத்திக் கொன்னுட்டாங்க...

விஷ்ணுபிரியனின் அப்பா முருகனுக்கு ஆறுதல் சொல்லிப் பேசினோம், ‘‘அன்னைக்கு ஊருக்குள்ள என்ன நடந்துச்சுன்னே எங்களுக்குத் தெரியா துங்க. நாங்க எல்லோருமே வீட்டுக் குள்ளதான் இருந்தோம். ஜன்னல்ல டமார்னு சத்தம் கேட்டுச்சு. சப்பாத்தி சாப்பிட்டுக்கிட்டு இருந்த என் மூத்த மகன் விஷ்ணுபிரியன், என்னனு பார்க்கிறதுக்காக வெளியே போனான். நாங்களும் பின்னாடியே ஓடினோம். பதினைஞ்சு பேர் விஷ்ணுபிரியனைப் பிடிச்சு உருட்டுக் கட்டையால அடிச்சாங்க. எங்களுக்கு எதுவுமே புரியலை. நான், என் மனைவி, சின்னப் பையன் எல்லோரும், ‘அடிக்கா தீங்க’னு கெஞ்சினோம். எங்க எல்லோரையும் அடிக்க ஆரம்பிச் சுட்டாங்க. திடீர்னு ‘ஊருக்குள்ள ஒரு ---- பயலகூட விடக் கூடாது’னு சாதிப் பெயரைச் சொன்னபடியே என் முத்தமகன் விஷ்ணுபிரியனையும், இளையமகன் நவீனையும் கத்தியால குத்திட்டாங்க. எவ்வளவோ போராடியும் என் பெரிய மகனைக் காப்பாத்த முடியலை” என்றவர், அதற்குமேல் நடந்ததைச் சொல்ல முடியாமல் விம்மினார்.

சிறிது ஆசுவாசத்துக்குப் பிறகு, ‘‘நான் பட்ட கஷ்டமெல்லாம் வீணாப் போயிருச்் சுங்க. எனக்கு ஒரு பொண்ணு, ரெண்டு பசங்க. என்னை மாதிரி என் பிள்ளைகளும் கூலி வேலை செஞ்சு கஷ்டப்படக் கூடாதுனு கஷ்டப்பட்டு மூணு பேரையும் படிக்கவெச்சேன். பெரியவன் விஷ்ணுபி ரியன் எம்.சி.ஏ படிச்சிட்டு சென்னையில ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியிலயும், சின்னவன் பி.இ முடிச்சிட்டு கோயம் புத்தூர்ல ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியிலயும் வேலையில இருந்தாங்க. விஷ்ணுபிரியனுக்கு கல்யாணம் ஆகி 60 நாள்தான்யா ஆகுது. அதுக்குள்ள என் மருமகளை தாலி அறுக்க வெச்சுட்டானுங்களே... படுபாவிங்க” என்று தலையில் அடித்துக்கொண்டு கதறி அழுதார்.

நவீன் - அஜீத்குமார் - பாஸ்கரன்
நவீன் - அஜீத்குமார் - பாஸ்கரன்

இதுபற்றி பா.ம.க மாநில துணைப் பொதுச்செயலாளர் இரா.அருள், ‘‘செந்தில்குமார் பா.ம.க-வின் முன்னாள் ஒன்றியச் செயலாளர். தற்போது பா.ம.க ஆதரவாளராக இருக்கிறார். அவருக்கும் இந்தச் சமபவத்துக்கும் துளியளவும் சமபந்தம் இல்லை. அன்றைய தினம் தன் தங்கை மகள் பிறந்த நாளுக்காக அந்தப் பகுதிக்குச் சென்றுள்ளார். தேவையில்லாமல் அவரை வழக்கில் சேர்த்துவிட்டார்கள்’’ என்றார்.

ஓமலூர் டி.எஸ்.பி-யான பாஸ்கரன், ‘‘வெவ்வேறு இடத்தில் பணிபுரிந்த நாங்கள் அந்த இடத்துக்குச் செல்வதற்குள் இந்தச் சம்பவம் நடந்துவிட்டது. இந்தக் கொலையில் ஈடுபட்ட செந்தில்குமார், சிவக்குமார், தமிழ்மணி, சண்முகம் உள்ளிட்ட 12 பேரை கைதுசெய்துள்ளோம். அவர்கள்மீது வன்கொடுமை, கொலை உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்துள்ளோம்’’ என்றார்.

மது அரக்கனுக்கும் சாதியவெறிக்கும் இன்னும் எத்தனை உயிர்களை பலிகொடுக்கப்போகிறோமோ!