Published:Updated:

"வழக்கு செலவுகளுக்காக மீண்டும் திருடினேன்!"- பல மாவட்டங்களில் கைவரிசை காட்டிய திருடன் சேலத்தில் கைது

திருடன்

`திருமணமாகி குழந்தைகள் பிறந்த பின்னரும், ஜாலியாகச் சுற்றித் திரிய வெளியூர்களுக்குச் சென்று பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிப்பேன்.' - போலீஸில் சிக்கிய நபர் வாக்குமூலம்

"வழக்கு செலவுகளுக்காக மீண்டும் திருடினேன்!"- பல மாவட்டங்களில் கைவரிசை காட்டிய திருடன் சேலத்தில் கைது

`திருமணமாகி குழந்தைகள் பிறந்த பின்னரும், ஜாலியாகச் சுற்றித் திரிய வெளியூர்களுக்குச் சென்று பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிப்பேன்.' - போலீஸில் சிக்கிய நபர் வாக்குமூலம்

Published:Updated:
திருடன்

சேலம், ஆத்தூர் குற்றப்பிரிவு எஸ்.ஐ மூர்த்தி தலைமையிலான போலீஸார் ஆத்தூர், அம்மம்பாளையம் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியே பைக்கில் வந்த வாலிபர் ஒருவர் போலீஸாரைப் பார்த்ததும் திரும்பிச் சென்றார். இதை கவனித்த போலீஸார் வேகமாகச் சென்று அந்த வாலிபரை மடக்கிப்பிடித்தனர்.

விசாரணையில் அவர், ஆத்தூர் அம்மம்பாளையத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் வெங்கடேஷ் என்பதும், அவர் திருச்சி மாவட்டம், துறையூரில் திருடப்பட்ட பைக்கை ஓட்டி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து வெங்கடேசன் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதில் வீட்டுப் பூட்டை உடைத்து நகை, பணத்தைக் கொள்ளையடிக்கும் பிரபல கொள்ளையன் என்பது தெரியவந்தது. தொடர் விசாரணையில் ஆத்தூர் நரசிங்கபுரம் புதிய ஹவுஸிங் போர்டு, வீரகனூர் பழைய ஹவுஸிங் போர்டு பகுதிகளில் இரண்டு வீடுகளில் 20 பவுன் நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டார். அந்த நகையை சேலத்திலுள்ள பிரபல பழைய நகைகளைக் கொள்முதல் செய்யும் நிறுவனத்தாரிடம் அவர் விற்பனை செய்ததும் தெரியவந்தது. அதையடுத்து, அந்த நகைக்கடை நிறுவனத்தாரிடமிருந்து திருட்டு நகை 18 பவுனை போலீஸார் மீட்டனர். பின்னர் வெங்கடேசனை போலீஸார் கைதுசெய்து வாக்குமூலம் பெற்றனர். அதில், ஏற்கெனவே பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டியது தொடர்பாக வாக்குமூலம் அளித்திருக்கிறார் அவர்.

கைது
கைது

``நான் சிறுவயதிலிருந்தே ஜாலியாக செலவு செய்ய, சுற்ற பக்கத்து வீடுகளில் சிறிய அளவிலான திருட்டில் ஈடுபட்டேன். திருமணமாகி குழந்தைகள் பிறந்த பின்னரும், ஜாலியாகச் சுற்றித் திரிய வெளியூர்களுக்குச் சென்று பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிப்பேன். சமீபத்தில் ஆத்தூர், வீரகனூர், பெரம்பலூர், சிறுகத்தூர், துறையூர், கள்ளக்குறிச்சி, சின்னசேலம், கூழ் குப்பம், தியாகதுருகம், உப்பிலியாபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வீட்டுப் பூட்டை உடைத்தும் மேற்கூரை வழியே இறங்கியும் நகைக் கொள்ளையில் ஈடுபட்டிருக்கிறேன். கொள்ளையடித்த நகைகளை சேலத்திலுள்ள நகைக்கடையில் விற்று செலவு செய்திருக்கிறேன். திருச்சியில் போலீஸார் என்னைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். அந்த வழக்குகளுக்குச் செலவு அதிகமாகிறது. அதனால் செலவு செய்வதற்கு மீண்டும் திருட ஆரம்பித்தேன்" என்று கூறியிருக்கிறார்.

மாட்டிறைச்சி விற்றவர்களைக் கைதுசெய்த போலீஸ்!
மாட்டிறைச்சி விற்றவர்களைக் கைதுசெய்த போலீஸ்!

இது குறித்து நம்மிடம் பேசிய போலீஸ் அதிகாரிகள், "கைதான வெங்கடேஷ் இருபதுக்கும் மேற்பட்ட இடங்களில் நகைத் திருட்டில் ஈடுபட்டிருக்கிறார். கள்ளக்குறிச்சியில் ஓய்வுபெற்ற மத்திய பாதுகாப்புப்படை டி.ஐ.ஜி வீட்டில் 15 பவுன் நகை கொள்ளையடித்திருக்கிறார். அவர்மீது தமிழகம் முழுவதும் 46 கொள்ளை வழக்குகள் இருக்கின்றன. 500 பவுனுக்கு மேல் கைவரிசை காட்டியிருக்கிறார். இதில் சேலத்திலுள்ள நகைக் கடையில் மட்டும் 60 பவுனுக்கு மேல் விற்றிருக்கிறார். அவற்றை மீட்கவும், எந்தெந்த வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்டது என்பதை அறியவும் தீவிர விசாரணை நடத்திவருகிறோம்" என்றனர்.