Published:Updated:

`நிறைய எம்-சாண்ட்; கொஞ்சம் சிமென்ட்!' -தனியார் கம்பெனிக்கு அதிர்ச்சி கொடுத்த சேலம் தொழிலாளி

முருகன்
முருகன்

கட்டடத் தொழிலாளி முருகன், தூள் செய்யப்பட்ட எம்சாண்ட் மற்றும் மணலில் கொஞ்சம் சிமென்ட் கலந்து போலியாக சிமென்ட் தயாரித்தது விசாரணையில் தெரியவந்தது.

சேலத்தில் பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி சிமென்ட் தயாரித்து விற்பனை செய்த கட்டடத் தொழிலாளி கைது செய்யப்பட்டார். அவருடைய மினி லாரியில் கொண்டுசெல்லப்பட்ட 50 போலி சிமென்ட் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தச் சம்பவத்தால் சேலத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம் ஓமலூர் வெள்ளாளப்பட்டியைச் சேர்ந்தவர் முருகன். இவருக்கு வயது 55. கட்டடத் தொழிலாளியான இவர் அவ்வப்போது கட்டடங்களுக்குத் தேவையான சிமென்ட் மூட்டைகளை மொத்தமாக வாங்கி சப்ளை செய்து வந்துள்ளார். இந்தநிலையில், பிரபல தனியார் நிறுவனமான அல்ட்ரா டெக் சிமென்ட் பெயரில் போலியாக சிமென்ட் தயாரித்து அதை அந்த நிறுவனத்தின் மூட்டைகளில் அடைத்து விற்று வந்துள்ளார்.

`தண்ணீர் தொட்டிக்கு கீழே விளையாட்டு!'- சிமென்ட் கல்வெட்டால் தேனி சிறுமிக்கு நேர்ந்த சோகம்

இதைக் கண்டுபிடித்த அந்த நிறுவனத்தின் சேலம் தொழில்நுட்ப மேலாளர் சஞ்சய்குமார், மோசடியில் ஈடுபட்ட முருகன் மீது சேலம் மாநகர காவல் ஆணையர் செந்தில்குமாரிடம் புகார் கொடுத்தார். அதையடுத்து முருகனைப் பிடிப்பதற்காக சூரமங்கலம் காவல் ஆய்வாளர் செந்தில் மற்றும் கருப்பூர் காவல் உதவி ஆய்வாளர் அங்கப்பன் உள்ளிட்டோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

கட்டடத் தொழிலாளி முருகன், தூள் செய்யப்பட்ட எம்சாண்ட் மற்றும் மணலில் கொஞ்சம் சிமென்ட் கலந்து போலியாக சிமென்ட் தயாரித்தது விசாரணையில் தெரியவந்தது. குறிப்பிட்ட அந்த நிறுவனத்தின் சிமென்ட் மூட்டைப் பைகளை விலைக்கு வாங்கி, அதில் இந்தப் போலி சிமென்ட்டுகளை நிரப்பியதும் தெரியவந்தது. மேலும், சிமென்ட் ஒரு மூட்டை மார்க்கெட் விலையை விட முருகன், 50 முதல் 70 ரூபாய் வரை குறைவாக விற்றும் வந்துள்ளார்.

முருகன்
முருகன்

புதிய கட்டடங்கள் கட்டும் பலருக்கும் முருகன், தனியார் நிறுவன சிமென்ட் என்று கூறி சப்ளை செய்து வந்திருக்கிறார். விலை குறைவு என்பதால், இவரிடம் போலி சிமென்ட் மூட்டைகளை வாங்கி பல கட்டடங்கள் கட்டப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து கட்டடத் தொழிலாளி முருகனை சேலம் போலீஸார் கைது செய்தனர். மேலும், அவர் கடைகளுக்கு சப்ளை செய்ய மினி லாரியில் எடுத்துச் சென்ற 50 போலி சிமென்ட் மூட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட முருகனிடம் காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு