Published:Updated:

`அடுத்தடுத்து 3 கொலைகள்; ரயிலில் கேரளா தப்பியோட்டம்!' - சேலத்தைப் பதறவைத்த வடமாநிலக் கும்பல்

கொலை
கொலை ( எம். விஜயகுமார் )

கொலை செய்துவிட்டு வினோத் உள்ளிட்ட 4 பேர் சேலம் ஜங்ஷன் ரயில் நிலையம் வந்து அங்கிருந்து ரயிலில் ஏறி கேரளா தப்பியது விசாரணையில் தெரியவந்தது.

வட மாநிலத்தைச் சேர்ந்த இளம் தம்பதி உள்ளிட்ட மூவரைக் கொடூரமான முறையில் கொலை செய்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

`கஞ்சா போதை; அடுத்தடுத்து 3 கொலைகள்!' -சேலம் போலீஸுக்கு அதிர்ச்சி கொடுத்த டாப் ஸ்டூடன்ட்

சேலம் திருமலைகிரியை அடுத்துள்ள பெருமாபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ். வெள்ளிக் கொலுசு உற்பத்தி செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவரிடம் வட மாநிலத்தைச் சேர்ந்த பலர் வேலை செய்து வருகின்றனர். இவரது வெள்ளிப் பட்டறையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன் ஆக்ராவைச் சேர்ந்த ஆகாஷ் (23), அவரின் மனைவி வந்தனாகுமாரி (21) மற்றும் ஆகாஷின் அண்ணன் மகன் சன்னி குமார் (18) ஆகியோர் வேலைக்குச் சேர்ந்துள்ளனர். இவர்கள் மூவரும் தங்கராஜ் வீட்டின் அருகில் தங்கராஜுக்குச் சொந்தமான மற்றொரு வீட்டில் தங்கி வேலை செய்து வந்துள்ளனர். ஆகாஷ்-வந்தனாகுமாரி தம்பதிக்கு 10 மாத ஆண்குழந்தை ஒன்று உள்ளது.

வந்தனா
வந்தனா

இந்த நிலையில், நேற்று இரவு 9 மணியளவில் ஆகாஷின் வீடு வெளிப்பக்கம் தாழிடப்பட்டிருந்த நிலையில், தொட்டிலில் இருந்த அவர்களது குழந்தை நீண்டநேரமாக அழுது கொண்டிருந்திருக்கிறது. குழந்தையின் அழுகுரல் கேட்டு பக்கத்து வீட்டில் இருந்த பெண்கள் அங்கு வந்து பார்த்துள்ளனர். வீட்டைத் திறந்து பார்த்தபோது, வீட்டுக்குள் வந்தனாகுமாரி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். மேலும், வீட்டின் பின்புறம் ஆகாஷ் மற்றும் சன்னி குமார் ஆகியோரும் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். இதுகுறித்து அவர்கள் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும், சேலம் மாநகரக் காவல் ஆணையர் செந்தில்குமார், துணை ஆணையர் தங்கதுரை ஆகியோரும் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். அதன்பின்னர், மூன்று பேரின் சடலங்களும் உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்தக் கொலை சம்பவம் குறித்து சேலம் இரும்பாலை போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில், கடந்த சனிக்கிழமை அன்று ஆக்ராவிலிருந்து வினோத், தினேஷ், சுராஜ் மற்றும் விஜி ஆகிய 4 பேர் சேலம் சிவதாபுரம் வந்து தங்கராஜின் வெள்ளிப் பட்டறையில் வேலைக்குச் சேர்ந்துள்ளனர்.

சிசிடிவி காட்சி
சிசிடிவி காட்சி

இவர்கள் 4 பேரும் ஆகாஷ் தங்கியிருந்த வீட்டின் எதிரே இருந்த வீட்டில் தங்கியுள்ளனர். மறுநாள் ஞாயிறுக்கிழமை விடுமுறை என்பதால் ஆகாஷ் மற்றும் வினோத் உள்ளிட்ட நண்பர்கள் அனைவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் வினோத் மற்றும் அவரின் நண்பர்கள் சேர்ந்து இந்தக் கொலையை செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.

கொலை செய்துவிட்டு வினோத் உள்ளிட்ட 4 பேர் சேலம் ஜங்ஷன் ரயில் நிலையம் வந்து அங்கிருந்து ரயிலில் ஏறி கேரளா தப்பியது விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து சேலம் போலீஸார், கேரள போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, இன்று அதிகாலை பாலக்காடு ரயில் நிலையத்தில் வினோத் உள்ளிட்ட 4 பேரை கேரள போலீஸார் கைது செய்தனர். இவர்களை சேலம் போலீஸாரிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சேலம் போலீஸார் பாலக்காடு விரைந்துள்ளனர். இவர்கள் நான்கு பேரும் சேலம் வந்த பின்னர்தான் கொலைக்குக் காரணம் என்ன எனத் தெரியவரும். சேலத்தில் நடந்த இந்த 3 பேர் கொலை சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு