Published:Updated:

`ஆதரவற்ற முதியவர்கள்தான் டார்கெட்!' - சேலம் போலீஸாரைப் பதறவைத்த சிசிடிவி காட்சிகள்

சிசிடிவி காட்சிகள்
சிசிடிவி காட்சிகள்

சேலத்தில் ஆதரவற்ற முதியவர்களைக் குறிவைத்துக் கொலை செய்துவரும் கொலையாளி குறித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சேலத்தில் பொது இடங்களிலும், பூட்டப்பட்ட தனியார் கடை முன்பும் உறங்கும் ஆதரவற்ற முதியோர்களின் தலையில் கல்லைக் தூக்கிப் போட்டு கொலை செய்துவரும் மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியிருக்கின்றன. முதியவர்களைக் கொல்வதுடன், அவர்கள் வைத்திருக்கும் பணத்தை எடுத்துச் செல்லும் அந்தக் கொலையாளியைப் பிடிக்க போலீஸார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

கொலை
கொலை

சேலம் காசகரனூர் பகுதியில் பூட்டப்பட்ட தனியார் டயர் கடையின் முன்பு நேற்று அதிகாலை 3:00 மணியளவில் 70 வயது மதிப்புடைய ஒரு ஆதரவற்ற முதியவர் தூங்கிக் கொண்டிருக்கிறார். அந்த இடத்திற்கு பேன்ட், சர்ட் அணிந்த சுமார் 27 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞர் இரண்டு கைகளாலும் தூங்க முடியாத ஒரு கல்லைத் தூக்கிவந்து உறங்கிக் கொண்டிருந்த அந்த முதியவரின் தலையில் போட்டு கொலை செய்கிறார். பிறகு, அந்த முதியவரின் சட்டை பாக்கெட்டில் இருந்த பணத்தை எடுத்துச் செல்லும் அதிர்ச்சியான வீடியோ காட்சி அப்பகுதியில் பொருத்தப்பட்ட சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி இருக்கிறது.

இக்கொலைச் சம்பவம் குறித்து சூரமங்கலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்ததோடு சி.சி.டி.வி கேமரா காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில், இன்று பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள வணிக வளாகத்தில் அங்கப்பன் என்ற 85 வயது மதிக்கத்தக்க முதியவர் உறங்கிக்கொண்டிருந்தார். அந்த இடத்திற்கு வந்த அந்த மர்ம இளைஞன் தூங்கிக்கொண்டிருந்த அங்கப்பன் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டு கொலை செய்துவிட்டு அவருடைய பாக்கெட்டில் இருந்த பணத்தை எடுத்துச் சென்றுள்ளார்.

சிசிடிவி காட்சிகள்
சிசிடிவி காட்சிகள்

இப்படி தொடர்ந்து தூங்கிக்கொண்டிருக்கும் ஆதரவற்ற முதியவர்களைக் குறி வைத்து கல்லைத் தூக்கிப்போட்டு கொலை செய்து பணத்தை எடுத்துச் செல்லும் அந்த நபரைப் பிடிக்க விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. `ஆதரவற்ற முதியவர்களின் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டுக் கொல்லும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம்' என்று சேலம் மாநகரக் காவல்துறையினர் சந்தேகிக்கிறார்கள்.

குறிப்பாகப் பிச்சைக்காரர்களும், ஆதரவற்ற முதியவர்களும் அச்சத்தின் உச்சத்தில் இருக்கிறார்கள். இரவு நேரத்தில் பொது இடங்களில் உறங்கவே அச்சப்படுகிறார்கள். அந்தக் கொலையாளியை சேலம் மாநகரக் காவல்துறையினர் தனிப்படை அமைத்துத் தேடி வருகிறார்கள்.

கமிஷனர்
கமிஷனர்
எம்.விஜயகுமார்

இதுபற்றி சேலம் மாநகரக் காவல்துறை ஆணையாளர் செந்தில்குமார், ``அது சைக்கோ கொலையாளியாக இருக்க வாய்ப்பில்லை. பயப்பட வேண்டிய அவசியமும் இல்லை. ஒரு வீடியோ வெளியாகி இருக்கிறது. அதையடுத்து காவல்துறையில் ஒரு டீம் தயார் செய்து அனுப்பி இருக்கிறோம். அவர்கள் விசாரணை மேற்கொண்டிருக்கிறார்கள். உடனே குற்றவாளி கைது செய்யப்படுவார்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு