அரசியல்
அலசல்
Published:Updated:

சேலம் ரௌடி கொலை... கழுத்தை அறுத்து ரத்தத்தை ருசித்த கொடூரம்!

ரகுநாதன்
பிரீமியம் ஸ்டோரி
News
ரகுநாதன்

‘‘வெள்ளையனுக்கும் தொட்டில்பட்டியைச் சேர்ந்த உருட்டு குமார் என்ற ரெளடிக்கும் சில வருடங்களுக்கு முன்பு மோதல் ஏற்பட்டிருக்கிறது.

எதிரியின் கழுத்தை ஆட்டை அறுப்பதுபோல் அறுத்துக் கொன்று, ரத்தத்தை ருசிபார்த்த ரெளடிக் கும்பலின் கொலை வெறியாட்டத்தால் சேலம் மாவட்டமே திகிலில் உறைந்துகிடக்கிறது!

சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த தொட்டில்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரகுநாதன். இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ரகுநாதனும் அதே பகுதியிலிருக்கும் கூலிப்படையைச் சேர்ந்த வெள்ளையனும் நண்பர்கள். இருவரும் ஒன்றாகச் சேர்ந்து பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டுவந்திருக்கின்றனர். இந்த நிலையில், கடந்த 26-10-2022 அன்று வெள்ளையனே, தன் கூட்டாளிகளுடன் ரகுநாதனின் கழுத்தை அறுத்துக் கொலைசெய்திருப்பது எதிர்பாராத திருப்பம்.

ரகுநாதன்
ரகுநாதன்

இதன் பின்னணி குறித்துப் பேசுகிற போலீஸார், ‘‘வெள்ளையனுக்கும் தொட்டில்பட்டியைச் சேர்ந்த உருட்டு குமார் என்ற ரெளடிக்கும் சில வருடங்களுக்கு முன்பு மோதல் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து ஒருவரையொருவர் கொலைசெய்ய முயன்று, அது தொடர்பான வழக்கும் பதிவாகியிருக்கிறது. புள்ளாக்கவுண்டன்பட்டி தி.மு.க பேரூர் கழகச் செயலாளராக நியமிக்கப்பட்ட உருட்டு குமாருடன் ரகுநாதனும் நண்பராகியிருக்கிறார். தன் எதிரியான உருட்டு குமாருடன் ரகுநாதன் சேர்ந்தது வெள்ளையனுக்கு பெருங்கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் தீபாவளியன்று இரவு ரகுநாதனின் வீட்டுக்கு, தன் கூட்டாளிகளுடன் சென்ற வெள்ளையன், ‘என்னைக் கொலை செய்ய உதவி செய்கிறாயா, நீ என்ன இன்ஃபார்மரா?’ என்று கேட்டு ரகுநாதனைத் தாக்கியிருக்கிறார். காயமடைந்த ரகுநாதன் மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருக்கிறார்.

சேலம் ரௌடி கொலை... கழுத்தை அறுத்து ரத்தத்தை ருசித்த கொடூரம்!

‘அடிபட்டவன் திருப்பித் தாக்குவதற்குள் முந்திக்கொள்ள வேண்டும்’ என்று நினைத்த வெள்ளையன், தன் கூட்டாளிகளுடன் மருத்துவமனைக்கே சென்று ரகுநாதனை சமரசப் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கிறார். ஆனால், ரகுநாதன் வர மறுக்கவே மருத்துவமனைக்குள் புகுந்த வெள்ளையன் கும்பல், மீண்டும் ரகுநாதனைச் சரமாரியாகத் தாக்கியிருக்கிறது. அப்போது தனது இடுப்பில் மறைத்துவைத்திருந்த ஆடு அறுக்கும் கத்தியால் ரகுநாதனின் கழுத்தை ஆட்டை அறுப்பதுபோல் அறுத்துக் கொலைசெய்த வெள்ளையன், பீறிட்டு வந்த ரத்தத்தைக் கையில் பிடித்து தனது கூட்டாளிகள் முகத்தில் தடவியிருக்கிறார். அப்போதும் கொலைவெறி அடங்காத கும்பல், ரத்தத்தைத் தங்களது நாக்கில் தடவி ருசிபார்த்திருக்கிறது’’ என்றனர் விலகாத அதிர்ச்சியோடு.

விஜயகுமார்
விஜயகுமார்

மேட்டூர் டி.எஸ்.பி விஜயகுமார், “கொலைசெய்யப்பட்ட ரகுநாதன், ஆரம்பகாலத்தில் வெள்ளையனின் கூட்டாளியாக இருந்திருக்கிறார். ஆனால், திடீரென உருட்டு குமாருடன் சேர்ந்ததால், தன்னைக் கொலைசெய்ய உருட்டு குமாரிடம் திட்டம் வகுத்துத் தருவதாக வெள்ளையன் தரப்பால் கருதப்பட்டு அவர் கொலைசெய்யப்பட்டிருக்கிறார்” என்றார்.

உருட்டு குமார்
உருட்டு குமார்

புள்ளாக்கவுண்டன்பட்டி பேரூர் கழகச் செயலாளர் உருட்டு குமாரிடம் இந்த விவகாரம் குறித்துக் கேட்டபோது, “வெள்ளையன் என்னுடைய உறவினர்தான். ரகுநாதன், வெள்ளையன் இருவருக்கும் ஏற்பட்ட மோதலில்தான் இந்த கொலை நடந்திருக்கிறது. மற்றபடி எனக்கும் இந்தக் கொலைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை” என்றார்.

ரெளடிகளைவிட அவர்களது அரசியல் தொடர்பு ஆபத்தானது!