Published:Updated:

திருச்சி: தவ்பீக் மனைவி சல்மா கைது... `கடத்தல் மன்னன்’ எங்கே?! - வலைவீசும் காவல்துறை

தவ்பீக் மனைவி சல்மா
தவ்பீக் மனைவி சல்மா

தவ்பிக் இங்கு வந்தது எப்படி? எங்கு இருக்கிறார் என்று அவரது மனைவி சல்மாவிடம் நாங்கள் விசாரணை நடத்தியதில் முன்னுக்குபின் முரணாகப் பல தகவல்களைக் கொடுத்துக்கொண்டே இருந்ததால், அவரை அழைத்துச் சென்றிருக்கிறோம்.

சென்னையில் தொழிலதிபர் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட, பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த தவ்பீக் என்பவரது மனைவி சல்மா திருச்சியில் கைது செய்திருக்கும் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி போலீஸார்
திருச்சி போலீஸார்

வங்கதேசத்தைச் சேர்ந்த சல்மா, தவ்பீக்கை காதலித்து திருமணம் செய்துள்ளார். போலி பாஸ்போர்ட், போலி ஆவணங்கள் மூலம் சட்டவிரோதமாகச் சென்னை வந்துள்ளனர். அங்கிருந்து வந்து கடந்த 5 மாதங்களாகத் திருச்சி மாவட்டம் மணிகண்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே வாடகை வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளார். தவ்பீக் அண்மையில் திருச்சி வந்து, சல்மாவை சந்தித்துச் சென்றுள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. தவ்பீக் மும்பைக் குண்டு வெடிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில், பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்‌‌.

இந்நிலையில் திருச்சி மணிகண்டத்தில் தங்கி இருந்த பெண்ணிடம் கிராம நிர்வாக அதிகாரி ஆய்வு செய்த போது, இவர்கள் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என்று கூறி இருக்கிறார்கள். ஆனால் அதற்கான ஆதாரம் எதுவும் இல்லை.

சல்மா
சல்மா

தவ்பீக் மனைவியை கைது செய்த இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை அழைத்துச் சென்றார். அவருக்கு அங்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவர் கர்ப்பமாக இருப்பதால் பரிசோதனைகளை மேற்கொண்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கவுள்ளனர். இதையடுத்து, என்.ஐ.ஏ மற்றும் கியூ பிராஞ்ச் போலீஸார் விசாரணை தொடங்க இருப்பதாகவும் தகவல் வந்துள்ளது.

இதுகுறித்து போலீஸார் வட்டாரத்தில் விசாரித்தோம், ``தவ்பீக் வேலையே தொழில் அதிபர்களைக் கடத்துவது, மற்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவது தான் . இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் அவரது மனைவி சட்டவிரோதமாகத் திருச்சியில் உள்ள வீட்டில் குடியிருந்திருக்கிறார்.

சல்மாவை அழைத்துச்செல்லும் போலீஸார்
சல்மாவை அழைத்துச்செல்லும் போலீஸார்

கடந்த வாரம் கூட தவ்பிக் இங்கு வந்து அவரது மனைவியைப் பார்த்துச்சென்றிருக்கிறார். தவ்பிக் இங்கு வந்தது எப்படி? எங்கு இருக்கிறார் என்று அவரது மனைவி சல்மாவிடம் நாங்கள் விசாரணை நடத்தியதில் முன்னுக்குபின் முரணாகப் பல தகவல்களைக் கொடுத்துக்கொண்டே இருந்ததால், அவரை அழைத்துச் சென்றிருக்கிறோம். அத்தோடு இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரிக்க இருக்கிறார்கள்" என்று முடித்துக்கொண்டனர்.

அடுத்த கட்டுரைக்கு