Published:Updated:

`சல்மான் கான் தந்தைக்கு மிரட்டல் விடுத்தது பிஸ்னோய் கூட்டத்தினர்தான்’ - போலீஸார் சொல்வது என்ன?

சல்மான் கான்

நடிகர் சல்மான் கான் தந்தைக்கு மிரட்டல் விடுத்தது லாரன்ஸ் பிஸ்னோய் கூட்டத்தினர்தான் என்று மும்பை போலீஸார் தெரிவித்துள்ளனர்.

`சல்மான் கான் தந்தைக்கு மிரட்டல் விடுத்தது பிஸ்னோய் கூட்டத்தினர்தான்’ - போலீஸார் சொல்வது என்ன?

நடிகர் சல்மான் கான் தந்தைக்கு மிரட்டல் விடுத்தது லாரன்ஸ் பிஸ்னோய் கூட்டத்தினர்தான் என்று மும்பை போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Published:Updated:
சல்மான் கான்

பாலிவுட் நடிகர் சல்மான் கான் தந்தை சமீபத்தில் மும்பை கடற்கரையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அவருக்குக் கொலை மிரட்டல் கடிதம் ஒன்று கிடைத்தது. அவர் வழக்கமாக நடைப்பயிற்சிக்கு பிறகு அமரும் இருக்கையில் மர்ம நபர் கொலை மிரட்டல் கடிதத்தை வைத்திருந்தார். அதில் `பஞ்சாப் பாடகர் சித்து மூஸ் வாலாவுக்கு ஏற்பட்ட கதிதான் உங்களுக்கும் ஏற்படும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து இந்தக் கொலை மிரட்டல் கடிதம் நடிகர் சல்மான் கானைக் குறிவைத்து அனுப்பப்பட்டிருப்பதாகக் கருதி போலீஸார் சல்மான் கானுக்கு பாதுகாப்பை பலப்படுத்தினர். அதோடு இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவந்தனர். சல்மான் கானும் நேரில் வாக்குமூலம் கொடுத்தார்.

மும்பை போலீஸார் டெல்லிக்குச் சென்று பஞ்சாப் பாடகர் சித்து கொலை வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள லாரன்ஸ் கூட்டத்தினரிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் லாரன்ஸ் கூட்டத்தினர்தான் இந்தக் கொலை மிரட்டல் கடிதத்தை அனுப்பியிருந்தது தெரியவந்தது. லாரன்ஸ் கூட்டத்தைச் சேர்ந்த சித்தேஷ் ஹிராமனிடம் விசாரித்தபோது, லாரன்ஸ் கூட்டாளி விக்ரம் என்பவன்தான் கொலை மிரட்டல் கடிதத்தை சல்மான் கானின் தந்தை சலீம் கானிடம் எடுத்துச் சென்றது என்பது தெரியவந்தது.

சல்மான் கான் தன் தந்தையுடன்
சல்மான் கான் தன் தந்தையுடன்

இது தொடர்பாக மும்பை போலீஸார் விடுத்துள்ள அறிக்கையில், ``சிறையில் இருக்கும் லாரன்ஸ்தான் சல்மான் கான், சலீம் கானுக்கு மிரட்டல் கடிதம் கொடுத்து அனுப்பியிருக்கிறான். இதற்காக ராஜஸ்தானிலுள்ள ஜலோர் என்ற இடத்திலிருந்து மூன்று பேர் மும்பைக்கு வந்து இந்தக் கடிதத்தைக் கொடுத்துள்ளனர். அவர்கள் குற்றவாளி சௌரப் மகாகால் என்பவனையும் சந்தித்துப் பேசியிருக்கின்றனர். யார் கடிதத்தை டெலிவரி செய்தது என்ற விவரத்தையும் குற்றப்பிரிவு போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். அவர்களைப் பற்றித் தகவல் கிடைத்திருக்கிறது. விரைவில் அவர்கள் கைதுசெய்யப்படுவார்கள். இதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு ஆறு சிறப்புக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே சித்து மூஸ் வாலா கொலை தொடர்பாக விசாரிக்க டெல்லி போலீஸார் புனே வந்துள்ளனர். இந்தக் கொலையில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் சித்தேஷ் ஹிராமன் உட்பட எட்டுப் பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism