Published:Updated:

ஆர்யன் கான் வழக்கு: பணம் பறிப்பதாகக் குற்றம்சாட்டப்பட்ட சமீர் வான்கடேவே விசாரிப்பார் என அறிவிப்பு!

பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் வழக்கை, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வான்கடேவே தொடர்ந்து விசாரிப்பார் என்று அறிவிக்கப்பட்டிருப்பதன் பின்னணி...

நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்தியதாக இம்மாதத் தொடக்கத்தில் பிடிபட்டார். அவரை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மும்பை மண்டல இயக்கநர் சமீர் வான்கடே தலைமையிலான அதிகாரிகள் கைதுசெய்தனர். ஆர்யனைக் கைதுசெய்த நாளிலிருந்து சமீர் வான்கடேமீது மிரட்டிப் பணம் பறித்தல் உட்பட பல்வேறு புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன. இதனால் சமீர் மீதான புகார்கள் குறித்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் டெல்லியிலிருந்து மும்பை வந்து விசாரித்துவருகின்றனர். தொடர் புகார்கள் காரணமாக சமீர் வான்கடே, ஆர்யன் கான் வழக்கு விசாரணையிலிருந்து நீக்கப்படுவார் என்று செய்திகள் வெளியாகின.

ஆர்யன் கான் பிடிபட்டபோது செல்ஃபி... தலைமறைவாக இருந்த முக்கிய சாட்சி புனேயில் கைது! - அடுத்து என்ன?
சமீர் வான்கடே
சமீர் வான்கடே

இது குறித்து சமீர் வான்கடேயிடம் விசாரணை நடத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தலைமை கண்காணிப்பு கமிஷனர் கியானேஷ்வர் சிங் அளித்த பேட்டியில்,``சமீர் வான்கடேவுக்கு எதிராக வலுவான ஆதாரம் கிடைக்கும் வரை ஆர்யன் வழக்கை சமீர் வான்கடேதான் கையாளுவார். ஆர்யன் வழக்கில் சாட்சியாகச் சேர்க்கப்பட்டிருக்கிறார். பிரபாகர் தெரிவித்த புகார் குறித்து ஐந்து பேர்கொண்ட கமிட்டி விசாரித்துவருகிறது. இந்தப் புகாரில் சிக்கியிருக்கும் கே.பி.கொசாவி, சாட்சி பிரபாகர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பும்படி கேட்டுக்கொண்டிருக்கிறோம். ஆனால் அவர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை.

விசாரணைக்கு ஆஜராகி தங்களிடமிருக்கும் ஆதாரங்களை விசாரணைக்குழுவிடம் கொடுக்க வேண்டும் என்று இருவரிடமும் மீடியா மூலம் கேட்டுக்கொண்டிருக்கிறோம். சமீரிடம் நான்கு மணி நேரம் விசாரிக்கப்பட்டது. அவர் பல உண்மைகளை விசாரணைக்குழு முன்பு தாக்கல் செய்திருக்கிறார். தேவைப்பட்டால் கூடுதல் ஆதாரம், ஆவணங்கள் அவரிடம் கேட்கப்படும். நாங்கள் கேட்ட வழக்கு தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்திருக்கிறார். தேவைப்பட்டால் மேலும் அவரிடம் விசாரணை நடத்தப்படும். சமீருக்கு எதிராக வலுவான ஆதாரம் கிடைக்கும் வரை போதைப்பொருள் தொடர்பான வழக்கை சமீர் தொடர்ந்து விசாரிப்பார்" என்று தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு