Published:Updated:

பாலிவுட்டுக்கு வில்லன்; போதை மாஃபியாக்களை வேட்டையாடும் அதிகாரி சமீர் வான்கடே - யார் இவர்?

போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வான்கடே போதைப்பொருள் கும்பலுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கிவருகிறார். யார் இந்த கரார் அதிகாரி?

சமீபத்தில் மும்பையிலிருந்து கோவா சென்ற கப்பலில், நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான், அவரின் நண்பர்கள் போதைப் பொருள் பயன்படுத்தியதாகக் கைது செய்யப்பட்டனர். இந்த கைது நடவடிக்கை பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலங்களில் பாலிவுட்டைச் சேர்ந்த பலரும் போதைப்பொருள் சர்ச்சையில் சிக்கிவருகின்றனர். இந்த அனைத்து சம்பவங்களிலும் ஒருவரின் பெயர் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அந்த பெயர் தான் சமீர் வான்கடே.

கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லப்படும் ஆர்யன் கான்
கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லப்படும் ஆர்யன் கான்

சமீர் வாங்கடே, மும்பை மண்டல போதைப்பொருள் தடுப்புப் பிரிவு இணை இயக்குநராக பணியாற்றி வருகிறார். பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கு இவரிடம் வந்தது. இந்த வழக்கில் சுஷாந்த் சிங்கின் காதலி நடிகை ரியா சக்கரவர்த்தியைக் கைது செய்திருந்தார் சமீர். இந்த வழக்கைத் தொடர்ந்து, இவரின் குழு பாலிவுட்டில் உலாவும் போதைப் பொருள் தொடர்பாக விசாரணையை விரிவுப்படுத்தியது . இந்த விசாரணைக்குப் பிறகு போதைப் பொருள் பயன்படுத்துவதாகவும், அது தொடர்பாகவும் பல பாலிவுட் பிரபலங்கள் கைது செய்யப்பட்டனர்.

சமீர் வான்கடே 1979-ம் ஆண்டு மும்பையில் பிறந்தவர். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த இவர், 2008-ம் ஆண்டு ஐ.ஆர்.எஸ்-ஆகத் தேர்ச்சி பெற்றார். கடந்த 2017-ம் ஆண்டு பிரபல மராத்திய நடிகையான கிராந்தி ரேத்கரேவுக்கும் இவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு மூன்று வயதில் இரட்டை பெண்குழந்தைகள் உள்ளனர். பணியில் சேர்ந்ததிலிருந்தே மிக நேர்மையான மற்றும் கண்டிப்பான அதிகாரியாகத்தான் சமீர் வான்கடே பணியாற்றிவருகிறார். முதன்முதலாக, மும்பை விமான நிலையத்தில் துணை சுங்கத்துறை அதிகாரியாக சமீர் பணியில் இணைத்தார்.

சமீர் வான்கடே
சமீர் வான்கடே
ANI

பிறகு மும்பை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரியாக பணியாற்றியபோது, பணியில் மிகவும் நேர்மையாகவும், சிறப்பாகவும் செயல்பட்டார். இவர் பணியில் இருக்கும்போது, விஐபிகள் முதல் அரசியல்வாதிகள் யார் எந்த தவறு செய்தலும், எவ்வித சமரசமும் செய்துகொள்ளாமல் நடவடிக்கை எடுத்ததற்காக அறியப்பட்டவர். பின்பு விமானப் புலனாய்வுப் பிரிவின் துணை ஆணையர், தேசிய புலனாய்வு அமைப்பு, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் என்று பல்வேறு இடங்களில் பணியாற்றியுள்ளார். செல்லும் அனைத்து இடங்களிலும் நேர்மையுடனும், துணிவுடன் மட்டுமே இருந்திருப்பதாக இவரைப் பற்றி குட் மார்க்ஸ் கொடுக்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சமீர் வருவாய்த்துறை அதிகாரியாக பணியாற்றிய சமயத்தில் வரி செலுத்தாத பலநூறு விவிஐபிக்களின் மீது வழக்குகளைப் பதிவு செய்திருந்தார். இதுபோன்ற தொடர் நடவடிக்கையினால், சமீர் சிலரின் பாராட்டுக்கும் பலரின் வெறுப்புக்கும் அடிக்கடி ஆளாவர். இந்த நேர்மையின் காரணமாகவே அவரின் குடும்பம் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை வெளியுலகிற்குச் சொல்லிக்கொள்வதில்லை என்று கூறப்படுகிறது. இவரின் திருமணத்திற்குக் கூட அவர்களுக்கு மிகவும் நெருக்கமான சிலருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

சமீர் வான்கடே
சமீர் வான்கடே
ANI

சிறப்பான வருவாய் அதிகாரியாக பணியாற்றிய சமீர், கடந்த சில வருடங்களுக்கு முன்பு மும்பை மண்டல போதைப்பொருள் தடுப்புப் பிரிவு இணை இயக்குநராக பணியமர்த்தப்பட்டார். இவர் பணியில் சேர்ந்ததிலிருந்து இதுவரை 15,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான போதைப் பொருளைக் கைப்பற்றியிருக்கிறது இவரின் குழு. மேலும், போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை என்று பலரையும் கைது செய்துள்ளனர். இப்படி இருக்கும்போதுதான் சுஷாந்த் சிங்கின் வழக்கு சமீரிடம் வந்து சேர்ந்தது. இதனையடுத்து, பாலிவுட்டில் புழங்கும் போதைப்பொருள் குறித்து ஆராயத்தொடங்கி, பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது சமீரின் குழு.

தற்போது மும்பையின் போதைப் பொருள் மன்னனாக வலம்வரும் மூஸாவை கைது செய்ய சமீர் மற்றும் அவரின் குழு கடும் முயற்சி எடுத்து வருகிறது. மும்பை கடற்கரைப் பகுதிகளில் உள்ள மாங்குரோவ் காடுகளில் வசித்துவரும் மூஸாவை பிடிக்க மும்பை தனிப்படை போலீஸார் பலமுறை முயற்சி செய்தும் பிடிக்க முடியவில்லை. இதனால் யாரையும் நம்பாது மூஸாவை பிடிக்க சமீரே நேரடியாகக் களமிறங்கி மிக ரகசியமாக சோதனையை நடத்தினர். அப்படியும் கூட ரெய்டு குறித்த தகவலறிந்து மூஸா தப்பித்துவிட. மூஸாவின் மெய்காப்பாளன் ஒபிரோ எக்வெல்கரைத்தான் பிடிக்க முடிந்தது.

மூஸா
மூஸா

போதைப்பொருட்களை பல்வேறு நாடுகளிலிருந்து மும்பைக்கு இறக்குமதி செய்து, இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் பிரித்து அனுப்புவது மூஸாவின் வேலை. மூஸாவைப் பிடித்தல் மொத்த மும்பையின் போதைப் பொருள் நெட்வொர்க் சிக்கும் என்பதற்காக பெரும் ரிஸ்க் எடுத்து இந்த வேலையைச் செய்துகொண்டிருக்கிறார் சமீர். இதுபோன்று கடந்த ஆண்டு ஒரு போதைப்பொருள் சோதனைக்குச் சென்ற இடத்தில் போதைப் பொருள் விற்பனை செய்யும் குழுவைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்களினால் சமீர் கடுமையாகத் தாக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹெராயின் மாஃபியா: இந்தியாவைச் சுற்றிவளைக்கும் போதைப் போர்!

சமீபத்தில் சமீரின் மனைவி கிராந்தி ரேத்கர் பேட்டியொன்றில், `` சமீர் சில நாள் வேலை முடித்து வரும்போது அவர் உடையில் ரத்த கரையுடன் வருவார். சில நேரங்களில் அவரின் உடை கிழிந்திருக்கும். போதைப் பொருள் மாஃபியாக்களை எதிர்த்துப் போராடுவதும், ரெய்டு நடத்துவதும் அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. நான் அவரை எதுவும் கேட்கமாட்டேன். அவரின் வேலை அப்படிப்பட்டது என்று எங்களுக்கு நன்றாகவே தெரியும். போதைப்பொருள் தடுப்பு அதிகாரியாக இருப்பது அவ்வளவு எளிதானதில்லை" என்றார்.

சமீர் வான்கடே - கிராந்தி ரேத்கர்
சமீர் வான்கடே - கிராந்தி ரேத்கர்

மேலும், ``பல தரப்பிலிருந்து மிரட்டல்கள் வரும். பிள்ளைகளை எங்கும் அழைத்துக்கொண்டு செல்ல முடியாது. பயமாக இருக்கும். அதனால், நாங்களும் தேவையில்லாமல் வெளியே எங்கும் செல்வது கிடையாது. எங்கள் குழந்தைகளுக்கு மூன்று வயதாகிறது. குழந்தைகள் அவரை மிஸ் செய்கிறார்கள். குழந்தைகளை நான் கவனித்துக் கொள்வேன் என்று அவருக்கு நன்றாகவே தெரியும். நான் குடும்பத்தைப் பார்த்துக்கொள்வேன் என்பதினால் அவர் நிம்மதியாக தனது வேலையைப் பார்த்துவருகிறார். தனது தனிப்பட்ட வாழ்க்கையைத் தியாகம் செய்து இந்த நாட்டிற்காக அவர் சேவை செய்துகொண்டிருக்கிறார். அவரை நினைக்கும்போது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது" என்று பேசியிருந்தார்.

போதை மாஃபியா கும்பலைத் தேடிப்பிடித்து வேட்டையாடிவரும் நேர்மையான அதிகாரியான சமீர் வான்கடே-வை பல்வேறு தரப்பினரும் கொண்டாடி வருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு