Published:Updated:

`மணல் கொள்ளையைத் தடுக்க நினைத்தால்..?’ - தேவகோட்டை அருகே வி.ஏ.ஓ-க்கள் மீது கொலை வெறித் தாக்குதல்

வி.ஏ.ஓ-க்கள் மீது தாக்குதல்
வி.ஏ.ஓ-க்கள் மீது தாக்குதல்

நாங்கள் எதுவும் கேட்காமல் அமைதியாக இருந்த சூழலில் செல்போனைப் பறித்துக்கொண்டு வாகனத்தையும் சேதப்படுத்தினர். மேலும், இனி மணல் கொள்ளையைத் தடுக்க முயற்சி செய்தால் எங்களை உயிருடன் விடமாட்டோம் என எச்சரித்து அனுப்பினர்.

சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம், இளையான்குடி, காரைக்குடி என மாவட்டம் முழுதும் பல்வேறு இடங்களில் மணல் கொள்ளை நடைபெற்றுவருகிறது. ஆளும் கட்சி ஆதரவோடு பல்வேறு அரசியல் கட்சியினரும் தொடர்ந்து மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். இதைத் தட்டிக் கேட்கும் நேர்மையான அதிகாரிகளுக்கு மணல் மாஃபியாக்கள் கொலை மிரட்டல் விடுப்பதாகப் புகார் எழுந்திருக்கிறது.

மணல் கொள்ளை (கோப்புப்படம்)
மணல் கொள்ளை (கோப்புப்படம்)

இந்நிலையில் சருகணி ஆற்றில் மணல் கொள்ளையில் ஈடுபட்டுவருவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து ஆய்வு செய்யச் சென்ற வி.ஏ.ஓ மீது மணல் கொள்ளையர்கள் கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால், தேவகோட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பாதிக்கப்பட்ட வி.ஏ.ஓ, ஜெயமூர்த்தியிடம் பேசினோம். ``எனக்கு சொந்த ஊர் கடலூர். வி.ஏ.ஓவாகத் தேர்வாகி சிவகங்கை மாவட்டம் வெள்ளிக்கட்டி கிராமத்தில் கடந்த ஓராண்டாகப் பணி செய்துவருகிறேன். நான் பணி செய்யும் பகுதியில் உள்ள சருகணி ஆற்றில் தொடர்ந்து மணல் கொள்ளை நடைபெறுவதைத் தடுத்து வருகிறேன்.

இந்நிலையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கட்டுப் பகுதியில் மணல் அள்ளுவதாகத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, நான் உட்பட பக்கத்து கிராமத்துப் பகுதி வி.ஏ.ஓ-க்களும் இணைந்து மணல் கொள்ளை நடப்பதைக் கண்காணிக்கச் சென்றோம். நாங்கள் வருவதைத் தெரிந்துகொண்ட 15-க்கும் மேற்பட்ட மணல் கொள்ளையர்கள் ஆயுதங்களுடன் வழி மறித்து எங்களைத் தகாத வார்த்தையில் பேசி என்னையும் என்னுடன் வந்த வி.ஏ.ஓ-க்களையும் அடித்துக் கொலை வெறித் தாக்குதல் நடத்தினர்.

சேதமடைந்த வாகனம்
சேதமடைந்த வாகனம்

நாங்கள் எதுவும் கேட்காமல் அமைதியாக இருந்த சூழலில் செல்போனைப் பறித்துக்கொண்டு வாகனத்தையும் சேதப்படுத்தினர். மேலும், இனி மணல் கொள்ளையைத் தடுக்க முயன்றால் எங்களை உயிருடன் விடமாட்டோம் என எச்சரித்து அனுப்பினர். மன உளைச்சல் ஏற்பட்டு திரும்பிய நாங்கள் திருவேகபுத்தூர் காவல்நிலையத்தில் கணேசன், கண்ணதாசன் உட்பட 11 நபர்கள் மீது புகார் அளித்துள்ளோம்" என்றார்.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாநிலச் செய்தித் தொடர்பாளர் அருள்ராஜ்,``வி.ஏ.ஓ ஜெயமூர்த்தியைக் கொலை செய்ய முயற்சி செய்த உருதிக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவியின் கணவர் மற்றும் அவருடன் தொடர்புடைய நபர்கள் மீது உடனே கைது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அரசு நேர்மையான அலுவலர்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும். நேர்மையான அதிகாரிகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்திவருது வருத்தமளிக்கிறது" என்று வேதனை தெரிவித்தார்.

வி.ஏ.ஓ-க்கள் மீது தாக்குதல்
வி.ஏ.ஓ-க்கள் மீது தாக்குதல்

இது குறித்து தேவகோட்டைப் பகுதி காவல்துறை ஏ.எஸ்.பி கிருஷ்ணராஜிடம் கேட்டோம். ``தேவகோட்டைப் பகுதியில் தொடர்ந்து மணல் கொள்ளையில் ஈடுபட்டு வரும் நபர்கள் மீது நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். தற்போது வி.ஏ.ஓ மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களைத் தேடிவருகிறோம். விரைவில் அவர்களைக் கைது செய்து விசாரணை நடத்துவோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு