Published:Updated:

நள்ளிரவு மணல் கடத்தல்; மடக்கிய டி.எஸ்.பி! -போலீஸுக்கு அதிர்ச்சி கொடுத்த திருவாரூர் புள்ளி

லாரிகளில் ஆற்று மணல் இருந்தநிலையில் உபரி மண் ஏற்றி வந்ததாக போலியான ஆவணத்தைக் கொடுத்து லாரிகளை எடுத்துச் சென்றுள்ளனர்.

தஞ்சாவூரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் மணல் ஏற்றி வந்த 4 லாரிகளை போலீஸ் டி.எஸ்.பி ஒருவரே பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த நிலையில் உயர் அதிகாரிகள் தரப்பிலிருந்து மணல் லாரிகளை விடுவிக்குமாறு அழுத்தம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

டி.எஸ்.பி புகழேந்தி கணேஷ்
டி.எஸ்.பி புகழேந்தி கணேஷ்

பட்டுக்கோட்டையின் புதிய டி.எஸ்.பி-யாக அண்மையில் பொறுப்பேற்றார் புகழேந்தி கணேஷ். இவர் சில தினங்களுக்கு முன் வல்லம், தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இரவுநேர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது தஞ்சையிலிருந்து உளூர் பகுதிக்கு 3 டிப்பர் மற்றும் 1 டாரஸ் லாரி என மொத்தம் 4 லாரிகளில் மணல் எடுத்துச் செல்லப்பட்டது.

ரோந்துப் பணியில் இருந்த டி.எஸ்.பி புகழேந்தி கணேஷ் அந்த லாரிகளை நிறுத்தியதுடன் மணல் ஏற்றி வந்ததற்கான ஆவணங்களைக் கேட்டுள்ளார். ஆனால், டிரைவர்களிடம் எந்த ஆவணமும் இல்லை. அத்துடன், `சார் இந்த மணல் லாரிகள் ஆளும்கட்சிப் பிரமுகருக்குச் சொந்தமானது' என ஒரு டிரைவர் கூறியிருக்கிறார். இதையடுத்து 4 லாரிகளையும் பறிமுதல் செய்ததுடன் அதனை ஓட்டி வந்த டிரைவர்களையும் கைது செய்து ஒரத்தநாடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

மணல்
மணல்
மாதிரிப்படம்

அத்துடன் ஸ்டேஷனில் பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் சுமித்ராவிடம், `எந்த உரிமமும் இல்லாமல் மணல் ஏற்றி வந்துள்ளனர். இவர்கள் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்துங்கள்' எனக் கூறியுள்ளார். அப்போது சுமித்ரா, `சார்.. எங்க டி.எஸ்.பி செங்கமலக்கண்ணனிடம் கூறிவிட்டு வழக்கு பதிவு செய்கிறேன்' எனக் கூறியிருக்கிறார். இதையடுத்துப் பேசிய புகழேந்தி கணேஷ், `மணல் ஏற்றி வந்த லாரிகள், ஓட்டி வந்த டிரைவர்கள், லாரிக்கான சாவிகள் என எல்லாவற்றையும் உங்களிடம் ஒப்படைத்துவிட்டேன். பார்த்துக்கொள்ளுங்கள்' எனக் கூறிவிட்டுக் கிளம்பிவிட்டார்.

`3 மாத வாடகையே வேண்டாம்..!' -10 ரூபாய் டாக்டரின் செயலால் நெகிழ்ந்த பட்டுக்கோட்டை வியாபாரிகள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதற்கிடையில் தஞ்சாவூர் எஸ்.பி அலுவலகத்திலிருந்து உயர் பொறுப்பில் இருக்கும் ஒருவர் போன் செய்து லாரிகளை விட்டுவிடுமாறு கூறியிருக்கிறார். இதையடுத்து உபரி மண் ஏற்றி வந்ததாக போலியான ஆவணங்களை மணல் ஏற்றி வந்தவர்கள் தரப்பில் காண்பித்து லாரிகளை எடுத்துச் சென்றுள்ளனர். மணல் ஏற்றி வந்து பிடிபட்ட லாரிகள் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க பிரமுகர் ஒருவருக்குச் சொந்தமானது என்றும் லாரியில் எஸ்.ஆர்.எம் என எழுதப்பட்டிருந்தது எனவும் சொல்கின்றனர் போலீஸார்.

போலீஸ் ஸ்டேஷன்
போலீஸ் ஸ்டேஷன்

``போலியான பர்மிட்டை வைத்து மணல் ஏற்றி வந்ததை அறிந்துதான் பட்டுக்கோட்டை டி.எஸ்.பி பறிமுதல் செய்தார். ஆனால், லாரிகளில் ஆற்று மணல் இருந்த நிலையில் உபரி மண் ஏற்றி வந்ததாகப் போலியான ஆவணத்தைக் காட்டி லாரிகளை எடுத்துச் சென்றுள்ளனர். சொல்லப்போனால் ஒருநாள் முழுவதும்கூட அந்த லாரிகளைக் காவல் நிலையத்தில் நிற்க வைக்கமுடியவில்லை.

அந்த அளவுக்குப் பல தரப்பிலிருந்தும் லாரிகளை விடுவிக்க அழுத்தம் வந்துள்ளது. இதற்குக் காவல்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் சிலரும் உடந்தையாக இருந்துள்ளனர். இதனால்தான் ஆளும் கட்சிப் பிரமுகர்களால் நடத்தப்படும் மணல் கொள்ளையைத் தடுக்க முடியவில்லை" என வேதனைப்படுகின்றனர் போலீஸார்.

`கஞ்சா, கந்துவட்டியோடு மணல் திருட்டு!' -பட்டுக்கோட்டை டிஎஸ்பி -யின் பல்ஸ் பார்க்கும் மாமூல் போலீஸ்

இந்த விவகாரம் குறித்து பட்டுக்கோட்டை டி.எஸ்.பி புகழேந்தி கணேஷிடம் பேசினோம். `` லாரிகளை பிடித்துக் கொடுத்துவிட்டு வந்தது உண்மைதான். அதன்பிறகு என்ன நடந்தது எனத் தெரியவில்லை" என்றார்.

ஒரத்தநாடு இன்ஸ்பெக்டர் சுமித்ராவிடம் பேசினோம். `` அரியலூர் மாவட்டத்திலிருந்து உபரி மண்ணை லாரிகளில் ஏற்றி வந்துள்ளனர். அதற்கு உரிய பர்மிட்டைக் காண்பித்த பிறகு லாரிகள் விடுவிக்கப்பட்டன" எனச் சுருக்கமாக தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு