Published:Updated:

`10 அடி ஆழம்; பல லட்ச ரூபாய் கிராவல் மண்!' -தோகை மலையை அலறவிடும் சட்டவிரோதக் கும்பல்

கடத்தல் வாகனங்கள் அதிவேகமாக இயக்கப்படுவதால், அப்பகுதியில் விபத்துகள் ஏற்படுவதோடு, சமூக விரோதச் செயல்களும் அதிகரித்து வருகின்றன.

தோகைமலை மண் கடத்தல்
தோகைமலை மண் கடத்தல் ( நா.ராஜமுருகன் )

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள களத்துப்பட்டியில் உரிய அனுமதியின்றி, சட்டவிரோதமாக இரவு பகலாக கிராவல்மண் கடத்தப்படுவதாக, திருச்சி சரக டி.ஐ.ஜி-யிடம் பொதுமக்கள் புகார் மனு அளித்துள்ளனர்.

மணல் கடத்தல்
மணல் கடத்தல்
நா.ராஜமுருகன்

கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றியம் புழுதேரி, ஆர்ச்சம்பட்டி, ஆர்.டி.மலை, நெய்தலூர், புத்தூர், வடசேரி, கழுகூர், பாதிரிப்பட்டி, பில்லூர் உட்பட பல பகுதிகளில் ஏராளமான ஏரிகள், குளங்கள் இருக்கின்றன. உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக இந்த நீர்நிலைப் பகுதிகளில் இரவு பகலாக கிராவல்மண், மணல் உட்பட பல்வேறு கனிம வளங்கள் தொடர்ந்து கடத்தப்பட்டு வருவதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

Vikatan

`வருவாய்த் துறையினர் மற்றும் அதிகாரிகள் துணையுடன் தொடர்ந்து மண் கடத்தப்பட்டு வருவதால், சமூக விரோதச் செயல்கள், விபத்துகள் ஆகியவை அதிகரித்து வருவதாகவும்' பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். மணல் கடத்தலைத் தடுக்க மாவட்ட அளவில் போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டும் எதையும் செய்ய முடியவில்லை எனக் கூறப்படுகிறது.

கலெக்டர் அன்பழகன்
கலெக்டர் அன்பழகன்

இந்நிலையில், கடந்த மாதம் புழுதேரி அருகே, அரியாற்றில் இரவில் லாரிகள், டிராக்டர்கள் மூலம் மணல் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து, திருச்சி சரக டி.ஐ.ஜி பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், திருச்சி போலீஸார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, போலீஸாரிடமிருந்து தப்பிக்க வேகமாக டிராக்டரை ஓட்டிச் சென்ற, அரியாறு கீழத்தெருவை சேர்ந்த தர்மராஜ் என்பவர் டிராக்டர் கவிழ்ந்து, சம்பவ இடத்திலேயே பலியானார்.

தோகைமலை பகுதி மக்களிடம் பேசினோம். `` நெய்தலூர் ஊராட்சி, களத்துப்பட்டி பகுதியில், அரசு நிதிமூலம் சீரமைக்கப்பட்ட குளம் மற்றும் தனியார் இடங்களில், கடந்த ஒரு மாதமாக இரவு பகலாக அதிநவீன இயந்திரங்கள் மூலம் சுமார் 10 அடி ஆழத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கிராவல் மண் கடத்தப்பட்டு வருகிறது. கடத்தல் வாகனங்கள் அதிவேகமாக இயக்கப்படுவதால், அப்பகுதியில் விபத்துகள் ஏற்படுவதோடு, சமூக விரோதச் செயல்களும் அதிகரித்து வருகின்றன. இதனால், இரவு நேரத்தில் சாலையில் சென்று வரவே அச்சப்படுகிறோம். மண் கடத்தலைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கொதிக்கின்றனர். இதுதொடர்பாக, கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன், திருச்சி சரக டி.ஐ.ஜி பாலகிருஷ்ணன், குளித்தலை சப்-கலெக்டர் ஷேக் அப்துல்ரகுமான் உட்பட அனைத்து அதிகாரிகளுக்கும் புகார் மனுக்களை அளித்துள்ளனர்.

மணல் கடத்தல்
மணல் கடத்தல்

மண்கடத்தல் குறித்து நங்கவரம் வருவாய் ஆய்வாளர் மாரியப்பனிடம் பேசினோம். ``களத்துப்பட்டி பகுதியில் கிராவல் மண் எடுக்க யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. நெய்தலூர் வி.ஏ.ஓ-விடம் கூறி, சம்பவ இடத்தை ஆய்வு செய்யச் சொல்கிறேன். அனுமதியின்றி கிராவல் மண் கடத்தும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்" என்றார்.