Published:Updated:

சாத்தான்குளம்: `ஒரு வருஷம் படிப்பு இருக்கு சார்!’ விசாரணையில் கலங்கிய தன்னார்வலர்கள்

சாத்தான்குளம்
சாத்தான்குளம்

``போலீஸ் வேலை மேல உள்ள ஆசையாலதான் நாங்களும் சம்மதிச்சோம். பாதுகாப்புப் பணிக்காக அவங்க கூப்பிட்ட நேரத்துல போவோம் வருவோம். மத்தபடி நாங்க யாரையும் அடிக்கலை” என சி.பி.சி.ஐ.டி விசாரணையில் கலங்கியுள்ளனர் கொரோனா தன்னார்வலர்கள்.

சாத்தான்குளம் சம்பவத்தில் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன் ஆகியோர் சி.பி.சி.ஐ.டி போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 12 குழுக்கள் அடங்கிய சி.பி.சி.ஐ.டி போலீஸார் பல இடங்களில் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி சி.பி.சி.ஐ.டி ஆய்வாளர் அலுவலகத்திலும் தொடர்ந்து விசாரணையை நடத்தி வருகின்றனர்.

விசாரணைக்கு ஆஜரான தன்னார்வலர்
விசாரணைக்கு ஆஜரான தன்னார்வலர்

பெண் தலைமைக் காவலர், ஆய்வாளர் ஸ்ரீதர் தப்பிச்செல்ல முயன்ற காரின் உரிமையாளர் சுரேஷ்குமார், சிறப்பு காவல்உதவி ஆய்வாளர் பால்துரை, எழுத்தர்கள் பியூலா, பிரான்சிஸ் தாமஸ் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. இந்நிலையில், தந்தை, மகன் ஆகியோரை சாத்தான்குளம் காவல்நிலையத்தில் போலீஸார் தாக்கியபோது, ஃபிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் இளைஞர்கள் அவர்களின் கை, கால்களைப் பிடித்தும், ஒரு கட்டத்தில் அவர்களே லத்தியால் இருவரையும் தாக்கியதாகவும் சொல்லப்படுகிறது.

சாத்தான்குளம்: `காக்கிச் சட்டைக்காக சும்மா விடறேன்!' -இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரை எச்சரித்த சிறை அதிகாரி

போலீஸாரைக் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டால் மட்டும் போதுமா, அவர்களுடன் இணைந்து தாக்கிய ஃபிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் இளைஞர்கள் மீதும் விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பல தரப்பினரும் குரல் எழுப்பியுள்ளனர். ஆனால், இவர்கள் ஃபிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அல்ல, கொரோனா தன்னார்வலர்கள் என்ற உண்மையை முதலில் விகடன் இணையதளத்தில்தான் அம்பலப்படுத்தினோம். தற்போது, சி.பி.சி.ஐ.டி போலீஸாரும் அவர்களை, `கொரோனா தன்னார்வலர்கள்’ என்றே குறிப்பிட்டுள்ளனர்.

கொரோனா தன்னார்வலர்கள்
கொரோனா தன்னார்வலர்கள்

ஜெயராஜின் மனைவி செல்வராணி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ள 5 தன்னார்வலர்களுடன், போலீஸாருடன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டவர்கள் என 15 பேர் வரை விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதில், அந்த 5 தன்னார்வலர்கள் சி.பி.சி.ஐ.டி போலீஸாரிடம் கண்ணீருடன் புலம்பித் தீர்த்துவிட்டார்களாம்.

இதுகுறித்து விசாரித்தோம். ``கொரோனா ஊரடங்கு லீவு நாள்களில் மற்ற பசங்களை மாதிரி கிரிக்கெட் விளையாடப் போகாமா, ஊரு சுத்தாம பயனுள்ள வகையில் லீவைக் கழிக்கணுங்கிற வகையிலதான் கொரோனா தன்னார்வலர்களா எங்களோடப் பெயர்களைக் கொடுத்தோம். ரேஷன் கடைகளில் மக்களை வரிசைப்படுத்துதல், போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல் என எல்லா வேலைகளையும் செஞ்சோம். போலீஸாருடன் பாதுகாப்புப் பணிக்காக எங்களை இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் சாரும், ரெண்டு எஸ்.ஐ-க்களும்தான் தேர்வு செஞ்சாங்க. `போலீஸ் வேலை, மரியாதையான கம்பீரமான வேலை. நீங்க போலீஸ் வேலைக்கே சேர்ந்திடுங்கடா. அடுத்த செலக்‌ஷன்ல உங்களைப் போலீஸாக்கிடுறோம். இப்போதே ஸ்டேஷன் வேலைகளை ஓரளவுத் தெரிஞ்சு வச்சுக்கிட்டா, டூட்டியில சேரும்போது ஈஸியா இருக்கும்’னு சொன்னாங்க.

கொரோனா தன்னார்வலர்
கொரோனா தன்னார்வலர்

போலீஸ் வேலை மேல உள்ள ஆசையாலதான் நாங்களும் சம்மதிச்சோம். பாதுகாப்புப் பணிக்காக அவங்க கூப்பிட்ட நேரத்துல போவோம், வருவோம். மத்தபடி நாங்க யாரையும் அடிக்கலை. நாங்க எல்லாருமே அடித்தட்டு குடும்பத்தைச் சேர்ந்தவங்கதான். இன்னும் ஒரு வருஷம் படிப்பு இருக்கு. நாங்க படிச்சு, வேலைக்குப் போனாத்தான் குடும்பம் தலைநிமிரும். அந்தச் சம்பவத்துக்குப் பிறகு எங்களை கொலைகாரனைப் பார்க்குற மாதிரிதான் பார்க்குறாங்க. வீட்ல அம்மா, அப்பாவும் எங்களோட எதிர்காலத்தை நினைச்சுக் கவலைப்படுறாங்க” எனக் கலங்கியுள்ளார்களாம்.

அடுத்த கட்டுரைக்கு