Published:Updated:

சாத்தான்குளம்: `இரவு முழுவதும் தாக்குதல்; பல இடங்களில் ரத்தக்கசிவு!’ - சி.பி.ஐ அறிக்கையில் பகீர்

சாத்தான்குளம்
சாத்தான்குளம்

`சாத்தான்குளம் தந்தை, மகன் கொலையில் காவல்நிலையத்தில் மிருகத்தனமாக, கடுமையாகத் தாக்கப்பட்டதால்தான் இருவரும் உயிரிழந்திருக்கிறார்கள். ரத்தக்கறை மாதிரிகளுடன் இருவரின் டி.என்.ஏ பொருந்துகிறது” என சி.பி.ஐ தெரிவித்திருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் கடந்த ஜூன் மாதம் தந்தை மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் போலீஸார் தாக்கியதால் கோவில்பட்டி சிறையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இது குறித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து விசாரணைக்கு உத்தரவிட்டது. கோவில்பட்டி குற்றவியல் நீதிமன்ற நடுவர் பாரதிதாசன் விசாரணை மேற்கொண்டார். இதற்கிடையில், இந்த வழக்கு சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. சி.பி.ஐ விசாரணையைத் தொடங்கும் வரை, சி.பி.சி.ஐ.டி இந்த வழக்கை விசாரணை செய்யும் என கூறப்பட்டது.

பென்னிக்ஸ் - ஜெயராஜ்
பென்னிக்ஸ் - ஜெயராஜ்

சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணையைத் தொடங்கிய அன்றே முதலில் உதவி ஆய்வாளர் ரகுகணேஷை கைது செய்தனர். பின்னர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், ஆய்வாளர் ஸ்ரீதர், சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, ஏட்டுகள் முருகன், முத்துராஜா, காவலர்கள் வெயிலுமுத்து, சாமத்துரை, தாமஸ் பிரான்சிஸ் உள்ளிட்ட 10 போலீஸாரை கைதுசெய்து தூத்துக்குடி சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் அவர்கள் மதுரைச் சிறைக்கு மாற்றப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்ட போலீஸாரைக் காவலில் எடுத்து விசாரணை செய்தனர். இதில், சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். ஆய்வாளர் ஸ்ரீதருக்குக் கையில் வாதம் ஏற்பட்டது. சில போலீஸாருக்கும், சி.பி.ஐ அதிகாரிகளில் இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதால் விசாரணையில் தொய்வு ஏற்பட்டது. காவலர்கள், அதிகாரிகளின் சிகிச்சைக்குப் பிறகு விசாரணை மீண்டும் தொடர்ந்தது. இந்தநிலையில், கடந்த செப்டம்பர் 25-ம் தேதி முதல் குற்றப் பத்திரிக்கையை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சி.பி.ஐ அதிகாரிகள் தாக்கல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட காவலர்
கைது செய்யப்பட்ட காவலர்

இதையடுத்தும், இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. இந்தநிலையில், சி.பி.ஐ தாக்கல் செய்த அறிக்கையின் முழு விவரம் தற்போது தெரியவந்திருக்கிறது. அதில், ``தந்தை, மகன் இருவருமே பொய்யான குற்றச்சாட்டில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள். இருவர் மீதும் சாத்தான்குளம் காவல் நிலையக் காவலர்கள் மிருகத்தனமான தாக்குதலை மேற்கொண்டிருக்கிறார்கள். இந்தத் தாக்குதலால் இருவரின் உடலில், பல இடங்களில் ரத்தக்காயங்கள் ஏற்பட்டுள்ளன.

சாத்தான்குளம் போலீஸ் சர்ச்சை: 3 மாதங்களில் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாறிய 3-வது வழக்கு!

காவல் நிலையத்தின் கழிப்பறை, சுவர்கள், லத்தி, மேஜைகள் என பல்வேறு இடங்களில் தந்தை-மகன் இருவரது ரத்தங்கள் படிந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த ரத்தக் கறைகளை மத்திய தடயவியல் துறையின் பரிசோதனைக்கு அனுப்பியபோது இந்த ரத்தக்கறைகள் உயிரிழந்த தந்தை, மகனின் டி.என்.ஏ-வுடன் பொருந்தியிருக்கின்றன. இந்த ரத்த மாதிரிகள் ஜெயராஜின் மனைவி செல்வராணியின் டி.என்.ஏ-வுடனும் பொருந்துகிறது. மேலும் காவல் நிலையத்தில் ரத்தக் கறைகளின் தடயங்களை குற்றம்சாட்டப்பட்ட காவலர்கள் அழிக்க முயன்றிருக்கிறார்கள்.

உயர் நீதிமன்ற மதுரைக்கிளை
உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

இருவரின் ஆடைகள் களையப்பட்டு, அவர்களை டேபிளில் படுக்கவைத்து, மூன்று காவலர்கள் பிடித்துக்கொள்ள, இருவரின் புட்டங்களில் லத்தியால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளது. இரவு முழுவதும் தாக்கப்பட்டதில் இருவரும் பலத்த காயம் அடைந்ததால், அதிகமான ரத்தக்கசிவு ஏற்பட்டிருக்கிறது. சிந்திய ரத்தத்தைக் காயம்பட்ட தந்தை, மகன் இருவரையுமே துடைக்கச் சொல்லி துன்புறுத்தியிருக்கிறார்கள்.

சாத்தான்குளம்: `இருவரது காயங்கள் படபடக்க வைத்தது!’- 40வது நினைவுநாளில் கலங்கிய வியாபாரிகள்

வீட்டிலிருந்து மாற்று உடைகள் கொண்டுவரச் சொல்லி இரண்டு முறை உடைகள் மாற்றப்பட்டுள்ளன. சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் மருத்துவர் வினிலா, இருவரையும் உடல் பரிசோதனை செய்தபோது, இவர்களுடைய ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தின் சர்க்கரை அளவு ஆகியவற்றைச் சான்றிதழில் குறிப்பிடாமல் அலட்சியமாக செயல்பட்டது மட்டுமன்றி, `சிறையில் அடைக்க இவர்கள் தகுதியானவர்கள்’ என தகுதிச் சான்றும் கொடுத்திருக்கிறார்.

நீதிமன்றம் அழைத்து வரப்படும் போலீஸார்
நீதிமன்றம் அழைத்து வரப்படும் போலீஸார்

இருவரையும் சிறையில் அடைத்தபோது சிறைக்காவலர்கள், சிறை மருத்துவர் ஆகியோரின் ஆவணங்களில் இவர்களின் உடலில் பல இடங்களில் ரத்தக் காயங்கள் இருந்தது தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சி.பி.ஐ அதிகாரிகளின் விசாரணை ஆவணங்களின் மூலம் குற்றம்சாட்டப்பட்ட சாத்தன்குளம் காவல் நிலையக் காவலர்கள் குற்றம் செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளன” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு