Published:Updated:

சாத்தான்குளம் சம்பவம்: ஓர் ஆண்டு நிறைவு... வழக்கு விசாரணையின் தற்போதைய நிலை என்ன?

சாத்தான்குளம்
சாத்தான்குளம்

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் போலீஸாரின் கொடூரத் தாக்குதலால் தந்தை, மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழந்து ஓராண்டாகியும், அந்தச் சம்பவம் தொடர்பான நீதிமன்ற விசாரணை இன்னும் முடிந்தபாடில்லை. நீதி கேட்டுப் போராடிக்கொண்டிருக்கின்றனர் ஜெயராஜின் குடும்பத்தினர்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவரின் மகன் பென்னிக்ஸ். இருவரும் செல்போன் கடை நடத்திவந்தனர். கடந்த ஆண்டு, ஜூன் 19-ம் தேதி ஊரடங்கில், குறித்த நேரத்துக்குள் கடையை அடைப்பது தொடர்பாக போலீஸாருக்கும் ஜெயராஜுக்கும் ஏற்பட்ட சிறு வாக்குவாதத்தால் விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்லப்பட்டார் ஜெயராஜ். தந்தையைத் தேடி ஸ்டேஷனுக்குச் சென்ற பென்னிக்ஸ், போலீஸார் தன் தந்தையை தாக்கிக்கொண்டிருந்ததைப் பார்த்து, தடுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த போலீஸார் தந்தை, மகன் இருவரையும் போலீஸ் ஸ்டேஷனில்வைத்து இரவு முழுவதும் கடுமையாகத் தாக்கவே, இருவரும் பலத்த காயமடைந்தனர். தொடர்ந்து, அவர்களை சாத்தான்குளம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சரவணன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

உயிரிழந்த பென்னிக்ஸ் - ஜெயராஜ்
உயிரிழந்த பென்னிக்ஸ் - ஜெயராஜ்

நீதிபதி இருவரையும் கோவில்பட்டி சிறையில் அடைக்க உத்தரவிட்டார். தொடர்ந்து, இருவருக்கும் உடற்தகுதிச் சான்றிதழ் பெற, சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, அரசு மருத்துவர் வினிலா, சான்றிதழ் தர மறுத்துள்ளார். ஆய்வாளர் ஸ்ரீதரின் வற்புறுத்தலால் மூன்று மணி நேரம் கழித்து சான்றிதழில் கையெழுத்து போட்டுள்ளார் வினிலா. அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்ட இருவரும் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தநிலையில், 22-ம் தேதி இரவில் பென்னிக்ஸும், 23-ம் தேதி அதிகாலையில் ஜெயராஜும் சிறையிலேயே அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாட்டையே உலுக்கியது. அரசியல் தலைவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் எனப் பல தரப்பினரிடமிருந்தும் கண்டனக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கின.

’பென்னிக்ஸ் நெஞ்சுவலியாலும், ஜெயராஜ் காய்ச்சலாலும் உயிரிழந்தார்’ என போலீஸார் தரப்பில் சொல்லப்பட்டது. உடற்கூராய்வு செய்யப்படுவதற்கு முன்னரே, ‘இருவரும் உடல்நலக் குறைவால்தான் உயிரிழந்துள்ளனர்’ என அப்போதைய முதல்வர் பழனிசாமி கூறியதும், அப்போது சர்ச்சையானது. ‘போலீஸ் ஸ்டேஷனில் உயிரிழந்தால்தான் ‘லாக்அப் டெத்’ ஆகும். சிறையில் உயிரிழந்தது எப்பது ’லாக்அப் டெத்’ ஆகும்?’ என அப்போதைய செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூற, எதிர்க்கட்சியினர் உட்பட அனைவரும் கொந்தளித்தனர்.

சாத்தான்குளம் காவல் நிலையம்
சாத்தான்குளம் காவல் நிலையம்

உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலையும், உயர் நீதிமன்றத் தீர்ப்பையும் மதிக்காமல் ’ரிமாண்ட்’க்கு உத்தரவித்த நீதிபதி மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் (ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம், சமத்துவ வழக்கறிஞர்கள் சங்கம், காங்கிரஸின் வழக்கறிஞர்கள் பிரிவு, மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் ஆகிய நான்கு சங்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள்) கடந்த ஆண்டு ஜூலை 6-ம் தேதி உயர் நீதிமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை உள்ளிட்ட 10 போலீஸார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அத்துடன், அந்தக் காவல் நிலையத்தில் பணிபுரிந்த அனைத்துக் காவலர்களும் கூண்டோடு வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு மாற்றப்பட்டனர்.

இதையடுத்து, தடயங்கள் அழிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, நீதிமன்றத்தின் உத்தரவுப்படி சமூகப் பாதுகாப்புத்துறை தனி தாசில்தார் செந்தூர்ராஜனின் கட்டுப்பாட்டில் சாத்தான்குளம் காவல் நிலையம் கொண்டுவரப்பட்டது. தாசில்தாரின் கட்டுப்பாட்டில் காவல் நிலையம் கொண்டுவரப்பட்டதும் பரபரப்பாகப் பேசப்பட்டது. அடுத்த சில நாள்களில் சாத்தான்குளம் டி.எஸ்.பி பிரதாபன், ஏ.டி.எஸ்.பி குமார் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட அடுத்த மூன்று மணி நேரத்தில் பணி வழங்கப்பட்டதும் சர்ச்சையானது. இதனால், அப்போதைய எஸ்.பி-யான அருண் பாலகோபாலனும் கட்டாய காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு, ஒரு மாதம் கழித்த பின்னரே, சென்னை சைபர் குற்றப்பிரிவு காவல்துறைக் கண்காணிப்பாளர்-2 ஆக நியமிக்கப்பட்டார்.

பெர்சிஸ் - வழக்கறிஞர் ராஜீவ் ரூபஸ்
பெர்சிஸ் - வழக்கறிஞர் ராஜீவ் ரூபஸ்

இந்த வழக்கில், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சம்பவத்தன்று இரவு என்ன நடந்தது என்பது குறித்த தலைமைக் காவலர் ரேவதியின் துணிச்சலான வாக்குமூலம்தான் குற்றவாளிகளைத் தப்பவிடாமல் சிக்கவைத்தது. இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றியது தமிழக அரசு. ஐ.ஜி சங்கர் தலைமையிலான போலீஸார் விசாரணையில் இறங்கினர். அன்றைய தினமே ஐந்து போலீஸார் கைதுசெய்யப்பட்டனர். அடுத்தடுத்து கைதுகள் அரங்கேறின. மொத்தம் 10 போலீஸார் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மதுரைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக அனைத்துத் தரப்பிலும் விவாதங்கள் தொடர்ந்துகொண்டிருந்தன. காவல்துறையின் மீது கடுமையாக விமர்சனங்கள் வைக்கப்பட்டன. வழக்கின் தீவிரத்தை உணர்ந்த நீதிமன்றம், இந்த வழக்கை சி.பி.ஐ வசம் ஒப்படைத்தது. டெல்லியிலிருந்து வந்த சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். இதற்கிடையில், கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி எஸ்.எஸ்.ஐ பால்துரை உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். பால்துரையின் இறுதிச் சடங்கின்போது துப்பாக்கிக்குண்டுகள் முழங்க அரசு மரியாதை செய்யப்பட்டது, ‘சிறையில் அடைக்கப்பட்ட கைதிக்கு அரசு மரியாதையா?’ எனப் பெரும் சர்ச்சையானது. தந்தை, மகன் தாக்கப்பட்டதில் ’ஃபிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்’ குழுவைச் சேர்ந்த சில இளைஞர்களுக்கும் தொடர்பு உள்ளது என்பதால், ’அந்தக் குழுவைக் கலைக்க வேண்டும்’ எனப் பல தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பால கிருஷ்ணன், ஆய்வாளர் ஸ்ரீதர்
சிறையில் அடைக்கப்பட்டுள்ள உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பால கிருஷ்ணன், ஆய்வாளர் ஸ்ரீதர்

இதையடுத்து, தமிழகம் முழுவதும் இந்தக் குழு செயல்பட தடைவிதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் 25-ம் தேதி, குற்றப் பத்திரிகையை சி.பி.ஐ அதிகாரிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். அதில், ``தந்தை, மகன் உயிரிழந்ததற்கு சாத்தான்குளம் காவல் நிலையத்தின் போலீஸாரே காரணம். சி.பி.சி.ஐ.டி போலீஸாரால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 10 பேரும் குற்றத்தில் தொடர்புடையவர்கள்” எனக் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரணை செய்துவந்த சி.பி.ஐ அதிகாரிகளில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாலும், ஊரடங்காலும் இந்த வழக்கு விசாரணை மந்தமானது.

இந்த வழக்கிலிருந்து போலீஸாரைக் காப்பாற்ற சில முயற்சிகள் நடந்தாலும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் நீதிமன்றம் உறுதியாக இருப்பது மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கின் தற்போதைய நிலை குறித்து, ஜெயராஜ் குடும்பத் தரப்பின் வழக்கறிஞரான சென்னை உய ர்நீதிமன்ற வழக்கறிஞர், ராஜீவ்ரூபஸிடம் பேசினோம். “இந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தது. பின்னர், மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்தநிலையில், ஒன்பது போலீஸாரும் ஜாமீன் கோரி தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்திலும், மதுரை மாவட்ட நீதிமன்றத்திலும் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட பின்னர், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனுவை விசாரித்த நீதிபதி பாரதிதாசன், ’தூத்துக்குடி நீதிமன்றத்தில் சிலராலும், மதுரை நீதிமன்றத்தில் சிலராலும் ஜாமீன் மனுக்களைத் தாக்கல் செய்யப்பட்டுள்ளன’ என்பதை சுட்டிக்காட்டி இந்த வழக்கைச் சிறப்பு அமர்வுக்கு மாற்றினார்.

3 மகள்களுடன் ஜெயராஜின் மனைவி செல்வராணி
3 மகள்களுடன் ஜெயராஜின் மனைவி செல்வராணி

அதன் பின்னரே விசாரணை தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்த வழக்கு விசாரணையில் இதுவரை, பென்னிக்ஸின் சகோதரி பியூலா, கோவில்பட்டி கிளைச்சிறையின் கண்காணிப்பாளராக இருந்த சங்கர் ஆகிய இரண்டு பேர் மட்டும்தான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதில், குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஒன்பது பேருக்கும் ஒவ்வொரு வழக்கறிஞர் இருப்பதால், ஒரு சாட்சியத்தை விசாரணை செய்து முடிக்கவே நான்கு முதல் ஐந்து நாள்கள் வரை ஆகிறது. இதில், கொரோனா ஊரடங்கால் நீதிமன்றம் மூடப்பட்டுள்ளதால் விசாரணையிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஆய்வாளர் ஸ்ரீதர், ஜாமீன் கேட்டும், உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் ஜாமீன் கேட்ட மனுவும், ‘தமிழக மக்கள் எங்களுக்கு எதிராக உள்ளனர். நீதித்துறை கண்டிப்புடன் நடந்துகொள்கிறது. எங்கள் தரப்பு நியாயம் ஏற்றுக்கொள்ளப்பட வாய்ப்பில்லை. எங்களுக்கு நீதி கிடைக்காமல் போய்விடும். அதனால், இந்த வழக்கை கேரள மாநில உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும்’ என உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவும் நிலுவையில் உள்ளன. இந்த வழக்கில் மாநில அரசும் பார்ட்டியாக சேர்க்கப்பட்டுள்ளது. விசாரணை விரைவில் முடிவடைந்தால், ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்துக்கு உரிய நீதியும், தவறு செய்த போலீஸாருக்குக் கடுமையான தண்டனையும் கிடைக்கும். இந்த வழக்கு, இந்தியா முழுவதும் முன்னுதாரணமாகவே இருக்கும்” என்றார் அவர்.

கைதுசெய்யப்பட்ட காவலர்கள்
கைதுசெய்யப்பட்ட காவலர்கள்

ஜெயராஜின் மூத்த மகளான பெர்சிஸிடம் பேசினோம். “இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட ஒன்பது பேருக்கும் குற்றப் பத்திரிகையின் நகல் வழங்கப்பட்டது. அன்றைய தினம், நீதிமன்றத்துக்குள்வைத்தே இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், அவரைப் பார்க்க வந்த உறவினர் ஒருவரின் செல்போனை வாங்கி, ‘ஒழுங்கா நான் கேட்ட முப்பத்தாறு லட்சம் பணத்தை என் மகள்கிட்ட கொண்டு வந்து கொடுத்துடு. இல்லேன்னா உன் கதையை முடிச்சுடுவேன்’னு யார்கிட்டயோ ஆவேசமாகப் பேசினார். இதை நீதிபதியின் கவனத்துக்குக் கொண்டு போனோம்.

ஸ்ரீதர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி டி.ஜி.பி-க்கும் மனு அனுப்பியிருந்தோம். நீதிமன்றத்துக்குள்ளேயே சட்டவிதி மீறலா போன் பேசுறாருன்னா, மத்த போலீஸ்காரங்களோட ஒத்துழைப்பு இல்லாம எப்படி நடந்திருக்கும்... இந்த வழக்கைப் பொறுத்தவரையில், குற்றம் இழைத்தவர்கள் மேல்நிலைக் காவல் அதிகாரிகள். ஆனால், சாட்சிகள் கீழ்நிலைக் காவலர்கள் என்பதால், அதிகார பலம், அழுத்தத்தால் சாட்சியங்களைக் கலைக்க வாய்ப்புள்ளது என்பதால், வழக்கை விரைவாக விசாரணை செய்தால் எங்களுக்கு உரிய நீதி கிடைக்கும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தோம். அதற்குப் பிறகு, ‘இந்த வழக்கு விசாரணயை ஆறு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்’ என உத்தரவிடப்பட்டது.

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் காவலர்கள்
விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் காவலர்கள்

ஆனா, கொரோனா ஊரடங்கால விசாரணை தள்ளிப்போயிட்டே இருக்கு. ஒரே குடும்பத்தில் ரெண்டு உயிர்களை இழந்திருக்கோம். நீதிமன்றத்தை மட்டும்தான் முழுமையா நம்புறோம். எங்களுக்கான நீதி நிச்சயம் கிடைக்கும்கிற நம்பிக்கையில இருக்கோம்” என்றார். நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதில், ஒன்றாக ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கும் மாறிவிடுமோ என்ற அச்சம் தற்போது எழுதுள்ளது. நீதிமன்றத்தின் மீதான மக்களின் நம்பிக்கை வீண் போகாது என்று நாமும் நம்புவோம்!

அடுத்த கட்டுரைக்கு