Published:Updated:

எதிர்த்துப் பேசினால் அடித்துக் கொல்வோம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சாத்தான்குளம் போலீஸாரின் அட்டூழியம்
சாத்தான்குளம் போலீஸாரின் அட்டூழியம்

சாத்தான்குளம் போலீஸாரின் அட்டூழியம்

பிரீமியம் ஸ்டோரி
கொரோனா ஊரடங்கு காலத்தில், இரவு-பகல் பாராமல், உயிரைப் பணயம்வைத்து காவல் பணியில் ஈடுபட்டுவருகின்றனர் காவல் துறையினர்.

பெருமைக்குரிய இந்தப் பணியை சட்ட விதிகளுக்குட்பட்டு பெரும்பாலான காவல்துறையினர் செய்துகொண்டிருக் கிறார்கள். அதேசமயம், வழக்கம் போலவே கொரோனாவையும்கூடப் பணம் பார்க்கும் ஒரு விஷயமாகக் கையில் எடுத்துக்கொண்டு சில கறுப்பு ஆடுகள் அதிகார துஷ்பிரயோகம் செய்வதாகவும், தேவையில்லாமல் பொதுமக்களை அடித்து நொறுக்குவதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தபடியே உள்ளன. இந்நிலையில், `தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகன் இருவரின் உயிர்கள் காவல்துறையினரின் அத்து மீறலால் பறிபோய்விட்டன’ என்று எழுந்திருக்கும் குற்றச்சாட்டு, ஒட்டுமொத்த தமிழகத்தையும் குலைநடுங்க வைத்துள்ளது.

ஜெயராஜ், பென்னிக்ஸ்
ஜெயராஜ், பென்னிக்ஸ்

சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜும் அவரின் மகன் பென்னிக்ஸும் செல்போன் கடை நடத்திவந்தனர். ஊரடங்கு அமலில் இருப்பதால் இரவு 8 மணிக்கு அனைத்துக் கடைகளையும் அடைக்க வேண்டும். ஜூன் 19-தேதி இரவு, ஜெயராஜ் கடையை அடைக்க தாமதமாகியிருக் கிறது. அப்போது அந்தப் பகுதியில் ரோந்து வந்த போலீஸார், ஜெயராஜை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அதைக் கேள்விப்பட்ட பென்னிக்ஸும் காவல் நிலையத்துக்குச் சென்றிருக்கிறார். அன்று இரவே இருவர் மீதும் வழக்கு பதிவு செய்தனர் சாத்தான்குளம் போலீஸார்.

நீதிபதியின் உத்தரவின் பேரில் ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் 20-ம் தேதி அதிகாலையில் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டனர். 21-ம் தேதி இரவு, மயங்கிய நிலையிலிருந்த பென்னிக்ஸை கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிறைக்காவலர்கள் தூக்கிச் சென்றிருக்கிறார்கள். 22-ம் தேதி அதிகாலையில் பென்னிக்ஸ் இறந்துவிட்டார். அடுத்த சில மணி நேரங்களிலேயே ஜெயராஜை அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அவரும் இறந்துவிட்டார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அடுத்தடுத்து இறந்துபோன சம்பவம் தமிழகம் முழுக்க அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது.

எதிர்த்துப் பேசினால்
அடித்துக் கொல்வோம்!

உயிரிழந்தவர்கள் இருவரும் போலீஸ் விசாரணைக்கு வர மறுத்துச் சாலையில் உருண்டு புரண்டதில் உடலில் காயம் ஏற்பட்டதாக முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப் பட்டிருப்பது உறவினர் களையும் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வர்த்தகர்களையும் கொதிப்படையச் செய்துள்ளது. ‘காவல்துறையினர் கொடூரமாக அடித்துத் துன்புறுத்தியதால் தான் இருவரும் இறந்துபோயினர்’ என ஜெயராஜின் உறவினர்களும் வர்த்தகர்களும் குற்றம்சாட்டுகிறார்கள். அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் இந்தச் சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்துவருகிறார்கள். அமெரிக்காவில் போலீஸாரால் ஜார்ஜ் ஃபிளாய்டு கொல்லப்பட்ட சம்பவத்துடன் சாத்தான்குளம் சம்பவத்தை ஒப்பிட்டு நெட்டிசன்கள் பதிவிடுவது தமிழகக் காவல்துறைக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.

போராடியபோது...
போராடியபோது...

சாத்தான்குளம் வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் துரைராஜ், ‘‘ஜெயராஜும் அவரின் மகனும் அமைதியான சுபாவம் உடையவர்கள். அன்னிக்கு ரோந்து வந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணனும் ரகுகணேஷும், `கடையைச் சீக்கிரம் அடைச்சுட்டுப் போய்யா...’னு சொன்னாங்க. ‘அடைச்சுக்கிட்டுதானே சார் இருக்கேன். இன்னும் நிறைய கடைகள் அடைக்கா மத்தானே இருக்கு’ என்று ஜெயராஜ் சொன்னார். உடனே அவரை ஸ்டேஷனுக்கு இழுத்துட்டுப் போயிட்டாங்க. அப்பாவைக் கூப்பிட வந்த பென்னிக்ஸிடம் பக்கத்துக் கடைக்காரங்க விஷயத்தைச் சொல்லியிருக்காங்க. உடனே அவரும் ஸ்டேஷனுக்குப் போயிருக்கார். அங்கே அவரோட அப்பாவை போலீஸ்காரங்க அடிக்கிறதைப் பார்த்ததும், ‘அடிக்காதீங்க சார்’னு கத்தியிருக்கார். உடனே பென்னிக்ஸையும் அடிச்சுத் துவைச்சிருக்காங்க. அந்தச் சமயத்தில் வணிகர்கள் எல்லாரும் சேர்ந்து ஸ்டேஷனுக்குப் போனோம். ஆனா, எங்களை உள்ளேயே விடலை. கொஞ்சம் நேரம் கழிச்சு ஜெயராஜையும் பென்னிக்ஸையும் ஜீப்ல ஏத்திட்டுப் போனாங்க. அப்போ அவங்களால நடக்கவே முடியலை. அந்த அளவுக்குக் கொடூரமா அடிச்சிருந்தாங்க” என்று வருத்தப்பட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஜெயராஜின் உறவினர்களிடம் பேசினோம். ‘‘ஜெயராஜுக்கு மூணு மகள்கள். பென்னிக்ஸ் ஒரே மகன். அவனுக்கு 31 வயசாகுது. மூணு மகள் களுக்கும் கல்யாணம் முடிஞ்சுட்டுது. பென்னிக்ஸுக்கு போன மாசம்தான் நிச்சயம் பண்ணினாங்க. டிசம்பர்ல கல்யாணம் வெக்கலாம்னு முடிவு பண்ணியிருந்தாங்க. அதுக்குள்ள இப்படி ஆகிடுச்சு.

ஹென்றி டிபேன், அருண்பால கோபாலன்
ஹென்றி டிபேன், அருண்பால கோபாலன்

ஜெயில்ல அடைச்ச மறுநாள் பென்னிக்ஸோட நண்பர்கள் அவனைப் பார்க்கப் போயிருக்காங்க. அப்போ, ‘எங்களை நிர்வாணமாக்கி, ஏழெட்டு பேர் சேர்ந்து சுத்தி நின்னு கம்பால அடி அடினு அடிச்சாங்க. நாங்க கதறி அழுதும், இரக்கமே காட்டாம அப்பாவை வயித்துலேயே பூட்ஸ் காலால மிதிச்சாங்க. என்னோட ஆசனவாய்ல லத்தியாலயே குத்தினாங்க. ஆணுறுப்புல லத்தியைவெச்சு அடிச்சதுல என்னால சிறுநீர் கழிக்க முடியலை. மலம் கழிக்க முடியலை. ஆசனவாய்லருந்து ரத்தம் கொட்டிக்கிட்டே இருக்கு’னு சொல்லி அழுதிருக்கான்’’ என்றனர்.

ஜெயராஜின் மனைவி ஜெயராணி, “எந்த வம்புக்கும் போகாத என் வீட்டுக்காரரையும் மகனையும் போலீஸ்காரங்க அடிச்சே கொன்னுட்டாங்க. `அடி தாங்க முடியாம அவங்க அலறுன சத்தம் சத்தம் தெரு முழுக்கக் கேட்டுச்சு’னு சொல்றாங்க. அந்த அளவுக்குக் கொடூரமா அடிச்சிருக்காங்க. இப்படி அடிச்சுக் கொல்ற அளவுக்கு அப்படி என்ன செஞ்சுட்டார்? போலீஸ்காரங்க கடை அடைக்கச் சொன்னதுக்கு ஒரு வார்த்தை எதிர்த்துப் பேசினது அவ்வளவு பெரிய குத்தமா?’’ என்று கதறினார்.

இந்த விவகாரத்தைக் கையிலெடுத் திருக்கும் மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குநரும், வழக்கறிஞருமான ஹென்றி டிபேனிடம் பேசினோம். ‘‘ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் டாக்டர் சரியாகப் பரிசோதிக்காமல் மருத்துவச்சான்று கொடுத்துள்ளார். நீதிபதியிடம் இருவரையும் நேரில் ஆஜர்படுத்தவில்லை. நேரில் ஆஜர்படுத்தியிருந்தால், போலீஸின் டார்ச்சரை அவர்கள் சொல்ல வாய்ப்பு கிடைத்திருக்கும். எஃப்.ஐ.ஆரில் ‘இருவரும் தரையில் புரண்டதால் உடலில் காயம் ஏற்பட்டது’ எனப் பதிவு செய்யப் பட்டுள்ளது. சிறையில் அடைக்கும் முன்பு ஜெயிலர் காயங்களைப் பதிவு செய்திருக்க வேண்டும். அதுவும் கடைப்பிடிக்கப்பட வில்லை. தூத்துக்குடி எஸ்.பி-யான அருண்பால கோபாலன், தந்தை-மகன் கொலைக்குக் காரணமான போலீஸார்மீது எந்த நடவடிக் கையும் எடுக்கவில்லை. கலெக்டர்தான் இரு எஸ்.ஐ-க்களை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டுள்ளார். இந்தச் சம்பவத்தில் தவறு செய்த அனைவர்மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

எதிர்த்துப் பேசினால்
அடித்துக் கொல்வோம்!

எஸ்.பி-யான அருண்பால கோபாலன், ‘‘சிறையில் அடைக்கப்பட்ட தந்தை, மகன் இருவரும் நெஞ்சுவலி மற்றும் காய்ச்சல் காரணமாக உயிரிழந்திருக்கின்றனர். புகாரின் அடிப்படையில் இரு எஸ்.ஐ-க்கள், இரு காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக் கின்றனர். ஆய்வாளர் உள்ளிட்ட மற்ற காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள். போஸ்ட்மார்ட்டம் அறிக்கை மற்றும் விசாரணைக்குப் பின்னர்தான் முழு உண்மையும் தெரியும்’’ என்றார்.

உயர் நீதிமன்ற உத்தரவின்படி 3 மருத்துவர்கள் அடங்கிய குழு, ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரின் உடல்களை உடற்கூராய்வு செய்து முடித்த நிலையில், ‘எஸ்.ஐ-க்கள் மற்றும் காவலர்கள்மீது கொலை வழக்கு பதிவு செய்யாதவரை உடலை வாங்க மாட்டோம்’ என்று ஜெயராஜின் உறவினர்கள் கூறிவந்தனர். இந்நிலையில், கோவில்பட்டி ஜுடிசியல் மாஜிஸ்திரேட் பாரதிதாசன், ஜெயராஜின் மனைவி மற்றும் மகள்களிடம் மருத்துவமனையில் விசாரணை நடத்தினார். அதன்பிறகு, ‘இவ்வழக்கில் நீதிபதிகள் உரிய நீதியைப் பெற்றுத்தருவார்கள் என நம்பிக்கை இருக்கிறது’ என்று சொன்ன ஜெயராஜின் உறவினர்கள் இருவரின் உடல்களையும் பெற்று அடக்கம் செய்திருக்கிறார்கள்.

சமீபகாலமாகவே, காவல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்படும் பலரும் கை கால்கள் உடைந்து, கட்டுப்போட்டபடிதான் வெளியில் வருகிறார்கள். ‘பாத்ரூமில் வழுக்கி விழுந்துவிட்டார்’ என்று நீதிமன்றங்களிலேயே கதை சொன்னது போலீஸ். போலீஸ் காவலுக்கு அனுப்பும்போது, ‘பாத்ரூமில் வழுக்கி விழுந்துடாம பார்த்துக்கணும்’ என்று நீதிபதிகளே சொல்லும் அளவுக்குத்தான் நிலைமை இருக்கிறது. இந்நிலையில், ‘உயிர்களையே பறிக்கிறார்கள்’ என்கிற குற்றச்சாட்டும் சேர்ந்திருப்பது, காவல்துறைமீதான களங்கக் கறையை விரிவடையவே செய்துள்ளது. தற்காலிகப் பதவிநீக்கம், இடமாற்றம் போன்ற கண்துடைப்பு வேலைகளால் இந்தக் களங்கத்தைத் துடைத்துவிட முடியாது. தவறிழைத்தவர்களுக்குக் கடுமையான தண்டனை கிடைக்கும் வகையிலான நடவடிக்கைகள்தான் இப்போதைய தேவை!

இன்னொரு லாக்-அப் மரணம்?

`இந்தச் சம்பவம் நடப்பதற்கு சில நாள்களுக்கு முன்னர் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் ஒரு லாக்-அப் மரணம் நடந்தது’ என்கிறார்கள் அந்தப் பகுதி மக்கள். ‘பேய்க்குளத்தில் ஒரு கொலை வழக்கு தொடர்பாக, குற்றவாளியின் தம்பி மகேந்திரன் என்பவரை காவல்நிலையத்துக்கு அழைத்து வந்து, இன்ஸ்பெக்டர் அருள் மற்றும் இப்போது சஸ்பெண்ட் ஆகியிருக்கும் இரு சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆகியோர் அடித்து உதைத்ததில் காவல்நிலையத்திலேயே மகேந்திரன் இறந்துவிட்டார். மகேந்திரனின் குடும்பத்தை மிரட்டி, இந்த விஷயம் வெளிவராமல் செய்துவிட்டனர். மகேந்திரனுக்கு 28 வயதுதான் இருக்கும்’ என்கிறார்கள்.

ஜூன் 25-ம் தேதி கோவில்பட்டி சிறையிலிருந்து ராஜா சிங் என்ற விசாரணைக் கைதி உடல்நலக் குறைவு காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர், சாத்தான்குளம் பனைகுளம் பகுதியைச் சேர்ந்தவர். இவரும் போலீஸாரால் கொடூரமாகத் தாக்கப்பட்ட நிலையில் ஆசனவாயில் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

கொடூர விசாரணை ஸ்டைல்!

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எந்தப் புகாராக இருந்தாலும் அடித்துவிட்டுத்தான் விசாரணையே நடத்துவார் என்கிறார்கள் உள்ளூர் மக்கள். சில தினங்களுக்கு முன்பு மதபோதகர் ஒருவரையும், உடனிருந்த ஏழு பேரையும் அடித்து நொறுக்கியுள்ளனர் இந்தக் காவல்நிலையத்தைச் சேர்ந்தவர்கள். இது தொடர்பாக டி.ஐ.ஜி-யிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் காவல்நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்படுபவர்களின் இரு காதுகளிலும் ஓங்கி அடிப்பார்களாம். ஆணுறுப்பு, விலாப் பகுதி, ஆசனவாய்ப் பகுதிகளில் லத்தியால் குத்தி சித்ரவதை செய்வார்களாம். அடி வாங்கியவர்கள் மயங்கி விழுந்தால் தண்ணீரை ஊற்றி எழுப்பி, அனைவரும் சேர்ந்து ரவுண்டுகட்டி அடித்துத் துவைப்பார்களாம். இப்படி விசாரணைக்குச் சென்று வந்தவர்கள் இயல்புநிலைக்குத் திரும்பப் பல மாதங்கள் ஆகுமாம்.

காவல்துறையை எச்சரித்த உயர் நீதிமன்றம்!

ஜூன் 23-ம் தேதி ஜெயராஜின் மனைவி செல்வராணி தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, ‘ஜெயராஜ், பென்னிக்ஸ் உடலை மூன்று மருத்துவர்கள்கொண்ட குழு உடற்கூராய்வு செய்ய வேண்டும். அதை வீடியோ பதிவுசெய்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டது.

மேலும், இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை உண்டாக்கி வருவதால், ஜூன் 24-ம் தேதி இதைப் பொதுநல வழக்காகக் கருதி தாமாக விசாரிக்கத் தொடங்கியிருக்கிறது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.

நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி அடங்கிய அமர்வு 24-ம் தேதி காலை வழக்கை விசாரிக்கத் தொடங்கியபோது, ‘‘காவல் நிலையங்களுக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் கைதிகள் மரணமடைவது அடிக்கடி நடக்கிறது. இதைத் தடுக்க வேண்டும் என்பதே நீதிமன்றத்தின் நோக்கம்’’ என்று சொன்னதோடு, ‘‘வழக்கு விசாரணையில் தமிழக

டி.ஜி.பி-யும், தூத்துக்குடி எஸ்.பி-யும் வீடியோ கான்ஃபரன்ஸிங்கில் 12:30 மணிக்கு ஆஜராக வேண்டும்’’ என்று உத்தரவிட்டனர். ஒரு மீட்டிங்கில் இருந்ததால், டி.ஜி.பி-க்கு பதிலாக தென்மண்டல ஐ.ஜி ஆஜரானார். விசாரணையின்போது, போலீஸார்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, ‘‘இந்த வழக்கு விசாரணையை நீதிமன்றம் தீவிரமாகக் கண்காணிக்கும். தற்போது இந்த வழக்கை விசாரித்துவரும் கோவில்பட்டி நீதித்துறை நடுவர், சுதந்திரமாக விசாரணை நடத்துவார். அந்த விசாரணையில் இந்த நீதிமன்றம் தலையிடாது. இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது தடுக்கப்பட வேண்டும். இதற்கான வழிகாட்டுதல்களைத் தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும்’’ என்றனர் நீதிபதிகள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு