Published:Updated:

“உன்னால ஒண்ணும் புடுங்க முடியாதுடா!” - காக்கிகளின் கலவரமூட்டும் மறுபக்கம்...

சாத்தான்குளம்
பிரீமியம் ஸ்டோரி
சாத்தான்குளம்

சாத்தான்குளம் காவலர்கள் மட்டுமல்லாமல் இப்போது புதிதாகப் பொறுப் பேற்றுள்ள காவலர்களின் பின்புலத்தையெல்லாம் அலசியது ஜூ.வி. கிடைத்த தகவல்கள் அனைத்தும் பகீர் ரகம்.

“உன்னால ஒண்ணும் புடுங்க முடியாதுடா!” - காக்கிகளின் கலவரமூட்டும் மறுபக்கம்...

சாத்தான்குளம் காவலர்கள் மட்டுமல்லாமல் இப்போது புதிதாகப் பொறுப் பேற்றுள்ள காவலர்களின் பின்புலத்தையெல்லாம் அலசியது ஜூ.வி. கிடைத்த தகவல்கள் அனைத்தும் பகீர் ரகம்.

Published:Updated:
சாத்தான்குளம்
பிரீமியம் ஸ்டோரி
சாத்தான்குளம்
நகரின் முக்கிய வீதி ஒன்றில் இருக்கிறது அந்த மளிகைக் கடை. சற்றுத் தள்ளி அவ்வப்போது காவலர்கள் சோதனையில் ஈடுபடும் இடம். அதில் ஒரு காவலர் ஒருநாள் இந்தக் கடையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பாட்டில்களில் ஒன்றை எடுத்துக்கொண்டு காசு கொடுக்காமல் செல்கிறார். அடுத்தநாள் இன்னொன்று... மூன்றாம் நாள் இன்னொன்று.

நான்காம் நாள் கடைக்காரர், ‘‘சார்...’’ என்று அழைத்து, ‘‘கீழே இருக்குற 20 லிட்டர் கேனை எடுத்து ஜீப்ல வெச்சுக்கோங்க சார். கேனுக்கு காசு வேண்டாம். தீர்ந்தப்புறம் திரும்பவும் தர்றேன்’’ என்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘‘ஏன்... வாட்டர் பாட்டில் எடுக்கக் கூடாதா?’’

‘‘சார்... ஒரு பாட்டிலுக்கு ரெண்டு ரூவாதான் நிக்கும். மூணு பாட்டில் எடுத்தா, மொத்த லாபமும் போயிடும். அதான் சார்...’’ என்று சொல்ல, அந்தக் காவலர் தோரணையுடன், ‘‘ஓஹோ...’’ என்றபடி பாட்டிலை வைத்துவிட்டுப் போய்விடுகிறார்.

சில நாள்கள் கழித்து நம்மிடம் அந்தக் கடைக்காரர் இந்தச் சம்பவத்தைச் சொல்லிவிட்டு, ‘‘சாத்தான்குளம் மேட்டர் கேள்விப்பட்டதிலிருந்து தூக்கமே போச்சுங்க. கடையைத் திறந்து சாமி கும்புடறப்பல்லாம் ‘எந்தக் காரணத்தைக் கொண்டும் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போக வெச்சிராதே’னுதான் வேண்டிக்கிறேன். பயமா இருக்கு’’ என்றார்.

“உன்னால ஒண்ணும் புடுங்க முடியாதுடா!” - காக்கிகளின் கலவரமூட்டும் மறுபக்கம்...

‘போலீஸ்னா என்னான்னு காட்டுறேன்’ என்று பல படங்களிலும், ஏன் நேரிலுமே கேள்விப்பட்ட வார்த்தைகளை சாத்தான்குளத்தில் மொத்தமாக நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள் காவலர்கள். அதுதான் இப்படிச் சின்னச் சின்னதாக எல்லா பக்கமும் எதிரொலித்திருக்கிறது.

சாத்தான்குளம் விவகாரத்தில் காவலர்களின் உண்மை முகங்கள் தெரிய ஆரம்பித்திருக்கின்றன. விசாரிக்கச் சென்ற நீதிபதி பாரதிதாசன் காதுபட, ‘உன்னால ஒண்ணும் புடுங்க முடியாதுடா’ என்று தகாத சொற்களை வீசியிருக்கிறார் ஒரு காவலர். காவல் நிலையத்திலிருந்து குதித்து, தப்பித்து ஓடும் காரியத்தை இந்நாள் வரை கயவர்கள்தான் செய்துவந்தனர்; இப்போது ஒரு காவலர் செய்திருக்கிறார். உண்மையை உரத்துப் பேச உறுதிமொழி எடுத்துக்கொண்ட ஒரு பெண் காவலர் அந்த உண்மையைப் பேசியிருக்கிறார் - அச்சத்துடன்!

இந்தநிலையில், சாத்தான்குளம் காவலர்கள் மட்டுமல்லாமல் இப்போது புதிதாகப் பொறுப் பேற்றுள்ள காவலர்களின் பின்புலத்தையெல்லாம் அலசியது ஜூ.வி. கிடைத்த தகவல்கள் அனைத்தும் பகீர் ரகம். ஏகப்பட்ட சர்ச்சைகளையும் குற்றச்சாட்டுகளையும் கொண்ட இவர்களா சாத்தான்குளம் விவகாரத்தில் நீதி கிடைக்க ஒத்துழைப்பார்கள் என்கிற சந்தேகம் ஏற்படு வதையும் தவிர்க்க முடியவில்லை. ‘யோக்கியன் வர்றான்... சொம்பை எடுத்து உள்ளே வை’ என்று ஒரு சொலவடை இருக்கிறது. அது நினைவுக்கு வருவதையும் தவிர்க்க முடியவில்லை.

ஜெயராஜ் - பென்னிக்ஸ்
ஜெயராஜ் - பென்னிக்ஸ்

மாஜிஸ்ட்ரேட்டை அவதூறாகப் பேசிய மகாராஜன்!

மகாராஜன்... இவர்தான் நா கூசும் அந்த வார்த்தைகளை ஒரு நீதிபதி காதுபடவே பேசிய மகா மோசமான ராஜன். தூத்துக்குடி மாவட்டம், முதலூர் அருகேயுள்ள புதுக்குடி நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர். இரண்டு வருடங் களுக்கும் மேலாக சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியாற்றிவந்த அவர், ஸ்டேஷனில் தாதாபோலவே வலம் வருவாராம்.

மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசன், ஸ்டேஷனில் விசாரணை நடத்தியபோது ஏ.எஸ்.பி-யான குமார், டி.எஸ்.பி-யான பிரதாபன் ஆகியோர் ஒத்துழைப்புக் கொடுக்க வில்லை என்பதால், தானும் அவர்களுக்கு விசுவாசமாக இருப்பதாகக் காட்டிக் கொள்வதற்காகவே மாஜிஸ்ட்ரேட்டை அவதூறாகப் பேசியுள்ளார்.

மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசன், ஸ்டேஷனில் இருக்கும் போலீஸாரின் லத்தியைக் கேட்டிருக்கிறார். அப்போது மகாராஜன், ‘எல்லாரோட லத்தியும் எதுக்கு சார்... அந்தத் தேதியில் டூட்டி பார்த்தவங்க லத்தியை மட்டும் கேளுங்க’ என நீதிபதிக்கே வழிகாட்டுதல் சொல்லி யிருக்கிறார். அதனால், மாஜிஸ்ட்ரேட் அதிருப்தி அடைந்திருந்த நிலையில், அவருக்குப் பின்புறமாகச் சென்று காதில் கேட்கும்படி ‘உன்னால ஒண்ணும் பிடுங்க முடியாதுடா’ என்று அவதூறாகப் பேசியுள்ளார்.

சர்ச்சைகளைச் சட்டை செய்யாத ஏ.எஸ்.பி குமார்!

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளராக இருந்த குமார், இதற்கு முன்னர் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவில் பணியாற்றியபோதும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். நீதிமன்ற உத்தரவுப்படி பொன்.மாணிக்கவேல் பணியாற்றியபோது, அவருடன் குமாரும் பணியாற்றினார். அப்போது, பொன்.மாணிக்கவேல் தங்களை மதிப்பதில்லை என அவருக்குக்கீழ் பணியாற்றியவர்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது அதில் முக்கியக் குரலாக ஒலித்தது குமாரின் குரல் என்கிறார்கள்.

சாத்தான்குளம் நீதிமன்றத்தில் மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசன் விசாரணை நடத்தியபோது அங்கிருந்த குமார் தன் உடல் பலத்தைக் காட்டும் வகையில் செய்கைகளைச் செய்து, தன்னை அச்சுறுத்தியதாக மாஜிஸ்ட்ரேட் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். எந்தப் புகாரில் சிக்கினாலும் மேலிடத்தைச் சரிக்கட்டும் பக்குவம் தெரிந்தவர் என்பதால், காத்திருப்போர் பட்டியலில் இருந்த அவர் தற்போது நீலகிரி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கத்துறை கூடுதல் எஸ்.பி-யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அனில்குமார் நேர்மையைச் சந்தேகிக்கும் வழக்கறிஞர்!

‘‘பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் கண்ணீரை மனதில்கொண்டு, நெல்லை சி.பி.சி.ஐ.டி-யின் டி.எஸ்.பி-யான அனில்குமார் விசாரணை நடத்த வேண்டும்” என நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது. ஆனால், அவர்மீதும் அதிருப்தி நிலவுகிறது. தன்னுடைய புகார் குறித்த விசாரணையை இரண்டு வருடங்களாக சி.பி.சி.ஐ.டி டி.எஸ்.பி-யான அனில்குமார் இழுத்தடித்து வருவதாகக் குற்றம்சாட்டுகிறார், தட்டார்மடம் பூச்சிக்காடு கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞரான பெரியசாமி.

இது பற்றி அவர் கூறுகையில், ‘‘நில ஆக்கிரமிப்பு புகார் தொடர்பாக நானும் புகார்தாரரும் தட்டார்மடம் காவல்நிலையத்துக்குச் சென்றோம். அங்கிருந்த சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம் என்பவர் எங்கள் புகாரைப் பதிவுசெய்ய மறுத்தார். நான் அவரிடம், ‘புகாரைப் பெற்றுக்கொண்டு ரசீது கொடுங்க சார்’ என்றதும் ஆத்திரமடைந்த அவர், ‘என்னையே எதிர்த்துப் பேசுறியா... வக்கீல் என்றால் பெரிய இவனா’ என்று கேட்டபடியே கொடூரமாகத் தாக்கினார்.

“உன்னால ஒண்ணும் புடுங்க முடியாதுடா!” - காக்கிகளின் கலவரமூட்டும் மறுபக்கம்...

என் உடல் முழுவதும் ரத்தம் கொட்டியது. ஆத்திரம் தீர அடித்து முடித்த சுந்தரம், ‘இதே கோலத்துல நீ என்னோடு ஒரு செல்ஃபி எடுக்கணும். அதை உன்னோட ஆபீஸ்ல மாட்டி வைக்கணும். அதைப் பார்க்கும்போதெல்லாம் உனக்கு என் நினைப்பு வரணும்’ என்று என்னைக் கட்டாயப்படுத்தி செல்ஃபி எடுக்க வைத்தார்.

இது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளை, தானாக முன்வந்து வழக்குப் பதிவுசெய்து சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டது. நீதிமன்றம் ஆறு வார காலத்தில் அறிக்கை கேட்டிருந்த நிலையில், விசாரித்து அறிக்கை தர வேண்டிய டி.எஸ்.பி அனில்குமார் இரண்டு வருடங்களாக அறிக்கை தாக்கல் செய்யாமல் இழுத்தடித்துவருகிறார். அவர் எப்படி சாத்தான்குளம் வழக்கில் நேர்மையாகச் செயல்பட்டு விரைவாக விசாரணையை முடிப்பார்?’’ என்று சந்தேகம் கிளப்புகிறார்.

சர்ச்சை இன்ஸ்பெக்டர் ஃபெர்னார்டு சேவியர்!

சாத்தான்குளம் இன்ஸ்பெக்டராக ஸ்ரீதர் இருந்தபோது, அந்த ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதிகளில் யார் அவரை எதிர்த்தாலும் ஏதாவது ஒரு பொய் வழக்கு பதிவுசெய்து ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து அடித்து உதைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். அவரிடம் பாதிக்கப்பட்ட பலரும் அவர் மாற்றலாகிச் சென்றுவிட்டதால் சி.பி.சி.ஐ.டி-யிடம் வெளிப்படையாகப் புகார் தெரிவித்துவருகிறார்கள்.

தற்போது சாத்தான்குளம் காவல்நிலையத்தின் புதிய இன்ஸ்பெக்டராக ஃபெர்னார்டு சேவியர் பொறுப்பேற்றுள்ளார். இவர் தூத்துக்குடியில் காவல்துறை கண்காணிப்பாளரின் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டராகப் பணியாற்றியவர். அப்போது தாது மணல் மற்றும் ஆற்று மணல் கடத்தல் கும்பலுக்கு ஆதரவாக இருந்தவர் என்கிற குற்றச்சாட்டு உள்ளது. பின்னர் நாகர்கோவில் வடசேரி காவல்நிலையத்தில் பணியாற்றியபோது, சாலையில் சென்ற ஒரு தாய், மகளிடம் வம்பிழுத்து அந்தப் பெண்ணிடம் வசமாக வாங்கிக்கட்டிக் கொண்டது தொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையில் சிக்கினார். அதற்காக அந்தப் பெண் மற்றும் அவரின் தாய் மீது வழக்கு பதிவுசெய்ததிலும் இன்ஸ்பெக்டர் ஃபெர்னார்டு சேவியர் மீது சர்ச்சை உள்ளது.

அசட்டையாக இருந்த அருண்பால கோபாலன்!

மதுரையில் போக்குவரத்து துணை கமிஷனராக இருந்த அருண்பால கோபாலன், தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி-யாகப் பொறுப்பேற்றது முதல் மாவட்டம் முழுவதும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்தன. செயின் பறிப்பு, கொள்ளை, மணல் கொள்ளை ஆகியவை தாராளமாக நடந்தன. மாவட்டத்தில் ஆணவக்கொலைகள் நடந்த போதும் கண்டுகொள்ளாமலேயே இருந்தார். அதனால், சாதிரீதியான கொலைகள், பழிக்குப் பழியான கொலைகள் என மாவட்டமே ரத்தக்களறியாக மாறியிருந்தது.

தூத்துக்குடியில் பணியிட மாற்றம் செய்யப் பட்ட இன்ஸ்பெக்டர் ஒருவரின் பிரியாவிடை பார்ட்டி, ஸ்டெர்லைட் ஊழியர் குடியிருப்பில் வைத்து பிரமாண்டமாகக் கொண்டாடப்பட்ட தகவல்கூட எஸ்.பி-யின் கவனத்துக்குச் செல்ல வில்லை. ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து 10 நாள்களுக்குப் பின்னரே பார்ட்டியில் பங்கேற்றவர்களுக்கு மெமோ கொடுத்தார் அருண்பால கோபாலன்.

“உன்னால ஒண்ணும் புடுங்க முடியாதுடா!” - காக்கிகளின் கலவரமூட்டும் மறுபக்கம்...

கொரோனா ஊரடங்கில் மதுரையைச் சேர்ந்த கட்டப்பஞ்சாயத்து பிரபலம் ஒருவர் தூத்துக்குடிக்கு வந்திருந்தார். அப்போது, தானே காரை ஓட்டிச் சென்று தனியாக அவரைச் சந்தித்தார் அருண்பால கோபாலன். இந்த விவகாரம் வெளியில் கசிந்ததும், டி.ஜி.பி அலுவலகம் வரை புகார் சென்றது. காவல் நிலையங்களில் நடக்கும் தவறுகள் குறித்து அவரது கவனத்துக்குக் கொண்டு சென்றாலும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளார். அதுவே சாத்தான்குளம் சம்பவம் நடக்கக் காரணமாகிவிட்டது. தற்போது காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் அவர்மீதும் விரைவில் நடவடிக்கை பாயும் என்கிறார்கள்.

சாத்தான்குளத்தை விரும்பிக் கேட்ட பிரதாபன்!

தூத்துக்குடி மாவட்டத்தின் பல ஸ்டேஷன்களில் ஏற்கெனவே இன்ஸ்பெக்டராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர், சாத்தான்குளம் டி.எஸ்.பி-யான பிரதாபன். சர்ச்சை எதுவும் வந்துவிடாமல் சைலன்ட்டாக ‘பசை’ பார்க்கும் லாகவம் தெரிந்தவர். கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன்னர் ரூரல் டி.எஸ்.பி-யாகப் பதவியேற்றார். அங்கு பணியில் இருந்தால். ஸ்டெர்லைட் உள்ளிட்ட ஏதாவதொரு சிக்கலில் மாட்டிக் கொள்வோம் என நினைத்து, சாத்தான்குளம் லிமிட்டை விரும்பிக் கேட்டு வந்துள்ளார்.

சாத்தான்குளம் வந்த பிறகு லோக்கல் போலீஸாருக்கு அனுசரணையாகச் செயல் பட்டிருக்கிறார். அவர்களின் தவறுகளைக் கண்டிக்காமல் தட்டிக்கொடுத்து வளர்த்துள்ளார். அதனாலேயே சர்ச்சைக்குரிய ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்தில் இவரும் புகாருக்கு உள்ளாகியிருக்கிறார். அவரைக் காத்திருப்போர் பட்டியலில் வைத்திருந்த நிலையில், மூன்று மணி நேரத்திலேயே புதுக்கோட்டை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு டி.எஸ்.பி-யாக நியமிக்கப்பட்டது சர்ச்சையாகியிருக்கிறது.

பாலியல் புகாரில் சிக்கியுள்ள ஐ.ஜி முருகன்!

தென்மண்டல ஐ.ஜி-யான சண்முக ராஜேஸ்வரன் ஓய்வுபெற்றதால், அவருக்குப் பதிலாக முருகனை நியமித்துள்ளதும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இந்தப் பொறுப்புக்கு ஐ.ஜி-க்களாக உள்ள சந்தோஷ்குமார், அன்பு இருவர் பெயர்தான் முதலில் பரிசீலிக்கப்பட்டது. தென்மாவட்டங்களில் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், ஏற்கெனவே அங்கு பணிபுரிந்த அனுபவமுள்ள முருகனை நியமித்தால்தான் சரியாக இருக்கும் என அவரைத் தேர்வு செய்திருக்கிறார்கள்.

லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி-யாக முருகன் பணியாற்றியபோது, அதே துறையில் எஸ்.பி-யாக பணிபுரிந்த ஒரு பெண் அதிகாரியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது. அப்போதைய டி.ஜி.பி-யான டி.கே.ராஜேந்திரனிடம் சம்பந்தப்பட்ட பெண் புகார் அளிக்கவும் விசாகா கமிட்டி, சி.பி.சி.ஐ.டி என விசாரணைகள் நீண்டன. தனது புகாரை தமிழக போலீஸ் விசாரித்தால், தனக்கு நியாயம் கிடைக்காது என சென்னை உயர் நீதிமன்றத்தைப் பெண் அதிகாரி நாடினார். இதற்கிடையே இருவரையும் லஞ்ச ஒழிப்புத்துறையிலிருந்து பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டது. ஆனால், டெக்னிக்கல் காரணங்களைச் சொல்லி லஞ்ச ஒழிப்புத்துறையிலேயே முருகன் பணியைத் தொடர்ந்தார். அரசிடமிருந்து அழுத்தங்கள் அதிகரித்த பிறகே, பொருளாதாரக் குற்றப்பிரிவு ஐ.ஜி பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

ஆகஸ்ட் 2019-ல் முருகன் மீதான பாலியல் அத்துமீறல் புகாரை விசாரித்து அறிக்கை அளிக்கும்படி தெலங்கானா டி.ஜி.பி-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்ற முருகன், தடையாணை பெற்றுவிட்டார். இதற்கிடையில், கொரோனா பாதிப்பு மேற்பார்வையிட மதுரை சரகத்துக்கு நியமிக்கப்பட்டார் ஐ.ஜி-யான முருகன். ஒன்றரை மாதங்கள் பணியில் இருந்துவிட்டு சென்னை திரும்பினார். இப்படிப்பட்ட வரலாறுள்ள ஒருவரைத்தான் தென்மண்டல ஐ.ஜி-யாக நியமித்துள்ளனர்.

‘குட்கா’ புகழ் ஜெயக்குமார்

தூத்துக்குடி எஸ்.பி-யாக நியமிக்கப்பட்டிருக்கும் ஜெயக்குமார், சென்னை காவல்துறையில் ரௌடிகள் ஒழிப்பு பிரிவு துணை ஆணையர், விழுப்புரம் எஸ்.பி எனப் பல தளங்களில் பணிபுரிந்தவர். சட்டம்-ஒழுங்கைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது அவருக்கு அத்துப்படி என்பதால்தான் ஜெயக்குமார் பெயரை டி.ஜி.பி திரிபாதி டிக் செய்தாராம்.

சென்னை மத்திய குற்றப்பிரிவில் துணை ஆணையராக ஜெயக்குமார் பணிபுரிந்தபோது தான் குட்கா விவகாரம் வெடித்தது. தற்போது சி.பி.ஐ விசாரணையிலுள்ள இந்த வழக்கில், நான்கு முறை ஜெயக்குமார் ஆஜராகியுள்ளார். வழக்கில் சி.பி.ஐ தரப்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்போது, ஜெயக்குமார் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கலாக முகாந்திரம் உள்ளது.

ஆகக்கூடி தேடித் தேடிப் பிடித்துத்தான் சாத்தான்குளம் விவகாரத்தை விசாரிக்கும் பணியிலும், அதை மேற்பார்வையிடும் பணியிலும் நியமித்துள்ளனர். ஆனால், ‘`இவர்கள் ஒவ்வொருரின் வண்டவாளத்தையும் பார்க்கும் போது, நிச்சயமாக நீதி கிடைக்காது என்பது இப்போதே தெரிகிறது’’ என்று கவலை பொங்கச் சொல்லும் தன்னார்வலர்கள் சிலர்,

‘‘ஆரம்பஜோரில் கைது, சிறையில் அடைப்பு என்றெல்லாம் வேகம் காட்டுவார்கள். ஒரு கட்டத்துக்குப் பிறகு மக்கள் இதை மறக்க ஆரம்பித்ததும் தங்கள் வேலையைக் காட்ட ஆரம்பித்துவிடுவார்கள். நீர்த்துப்போகும் அளவுக்கான சாட்சிகள், காரணங்களையெல்லாம் எடுத்துவைத்து தானாகவே வழக்கை ஒன்றுமில்லாமல் போகச் செய்துவிடுவார்கள்.

ஏனெனில், இவர்கள் ஒவ்வொருவருமே தங்கள் மீது ‘குற்றப்பத்திரிகை’ சுமத்தப்பட்டிருக்கும் சூழலில்தான் இந்தப் பதவிகளில் ஒட்டிக் கொண்டுள்ளனர். அரசாங்கத்தின் கருணை இருந்தால் மட்டுமே அவற்றிலிருந்தெல்லாம் தப்பிக்க முடியும். ஏற்கெனவே பல சந்தர்ப்பங்களில் தங்கள் ‘திறமை’யைக் காண்பித்தவர்கள்தான். தற்போதும் தங்களைத் தற்காத்துக்கொள்ள எந்த எல்லைக்கும் செல்வார்கள். ‘ஜெயராஜும் பென்னிக்ஸும் ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கிக்கொண்டுதான் இறந்துபோனார்கள்’ என்று நாளைக்கு நீதிமன்றத்தையே நம்ப வைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. எனவே, இந்த விசாரணை அதிகாரிகள் அனைவரையுமே மாற்றிவிட்டு, புத்தம் புதிதாக நேர்மையான அதிகாரிகளாகத் தேடிப்பிடித்து நியமித்து விசாரணையை நடத்த வேண்டும்’’ என்கிறார்கள்.

ஆனால், நேர்மையான அதிகாரிகளை எங்கே தேடுவது என்பதுதான் பிரச்னையே. அப்படியே கிடைத்தாலும், விரல்விட்டு எண்ணும் அளவுக்காவது கிடைப்பார்களா என்பதே சந்தேகம்தான்.

கடைசியில்... வாஞ்சிநாதன், ராகவன், ஆதித்யா அருணாசலம், முத்துசாமி ஐ.பி.எஸ், சத்யதேவ், சாமி, ‘துரை’சிங்கம், சத்யமூர்த்தி ஐ.பி.எஸ் இவர்களைத்தான் கூப்பிட வேண்டியிருக்கும்போல.

மன்னித்துக்கொள்ளுங்கள் மக்களே... வேதனையின் உச்சத்தில் இதைத் தவிர வேறெதுவும் சொல்லத் தோன்றவில்லை!