Published:Updated:

சாத்தான்குளம் போலீஸ் சர்ச்சை: 3 மாதங்களில் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாறிய 3-வது வழக்கு!

சாத்தான்குளம்
சாத்தான்குளம்

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் சரகத்தில், போலீஸார்மீது எழுந்த குற்றசாட்டுகளால் சி.பி.சி.ஐ.டி பிரிவு போலீஸார் கடந்த மூன்று மாதங்களில் தற்போது மூன்றாவது வழக்கை விசாரணை செய்யவிருக்கிறார்கள்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் சாத்தான்குளம் காவல் நிலைய போலீஸாரால் தந்தை, மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் அழைத்துச் செல்லப்பட்டனர். காவல் நிலையத்தில் போலீஸாரின் தாக்குதலுக்குப் பிறகு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த ஜூன் 22-ம் தேதி இரவில் பென்னிக்ஸும், 23-ம் தேதி காலையில் ஜெயராஜும் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையாக வெடித்து, ஐ.நா வரை எதிரொலித்தது. பல்வேறு கட்சித் தலைவர்களும், சமூக அமைப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

உயிரிழந்த பென்னிக்ஸ் & ஜெயராஜ்
உயிரிழந்த பென்னிக்ஸ் & ஜெயராஜ்

உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. கோவில்பட்டி குற்றவியல் நீதிமன்ற நடுவர் பாரதிதாசன் விசாரணை நடத்தினார். இதையடுத்து இந்த வழக்கை தமிழக அரசு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. சி.பி.சி.ஐ.டி-யின் ஐ.ஜி-யான சங்கர் தலைமையிலான போலீஸார் விசாரணையைத் தொடங்கிய முதல் நாளிலேயே இரட்டைக்கொலைச் சம்பவத்துக்குக் காரணமான உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் கைதுசெய்யப்பட்டார்.

சாத்தான்குளம்: 17, 13 இடங்களில் கடுமையான காயங்கள்! அதிரவைத்த உடற்கூராய்வு அறிக்கை

தொடர்ந்து உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், ஆய்வாளர் ஸ்ரீதர், சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை உள்ளிட்ட மொத்தம் 10 போலீஸார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர், இந்த வழக்கு சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதில், எஸ்.எஸ்.ஐ பால்துரை மட்டும் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நடந்து 80 நாள்களைக் கடந்தும் சி.பி.ஐ விசாரணை நடந்துவருகிறது.

உயிரிழந்த மகேந்திரன் & அவரது தாயார் வடிவு
உயிரிழந்த மகேந்திரன் & அவரது தாயார் வடிவு

இதற்கிடையில், இந்தச் சம்பவத்துக்கு 20 நாள்களுக்கு முன்னர் அதே சாத்தான்குளம் காவல் நிலைய போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட, பேய்க்குளம் அருகிலுள்ள ஆசீர்வாதபுரத்தைச் சேர்ந்த மகேந்திரனும் தாக்கப்பட்டார். ஒரு நாள் முழுவதும் காவல் நிலையத்தில் துன்புறுத்தப்பட்ட மகேந்திரன், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அடுத்த 10 நாள்களில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சாத்தான்குளம்: மகேந்திரன் வழக்கு விசாரணையில் தீவிரம் காட்டும் சி.பி.சி.ஐ.டி போலீஸார்!

போலீஸாரின் மிரட்டலால் இந்தச் சம்பவம் அமுங்கிப்போனது. சாத்தான்குளம் சம்பவம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், `என் மகன் மகேந்திரனின் உயிரிழப்புக்கு அதே சர்ச்சைக்குரிய காவல் நிலைய போலீஸார்தான் காரணம். மகனின் இறப்புக்கு நியாயம் கிடைக்க வேண்டும்’ என அவரின் தாயார் வடிவு, தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வழியாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையில், `இது தொடர்பான வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டிருக்கிறது’ என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

உயிரிழந்த செல்வன்
உயிரிழந்த செல்வன்

இதையடுத்து சி.பி.சி.ஐ.டி-யின் டி.எஸ்.பி அனில்குமார் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். இந்தநிலையில், சாத்தான்குளம் காவல் சரகத்துக்கு உட்பட்ட தட்டார்மடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சொக்கன்குடியிருப்பைச் சேர்ந்த செல்வனை, நிலத்தகராறில் கடந்த 17-ம் தேதி அந்தப் பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க நிர்வாகி திருமணவேல் காரில் கடத்தித் தாக்கியிருக்கிறார்.

செல்வன் கொலை வழக்கு: `உடைக்கப்பட்ட எம்.எல்.ஏ கார்; பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு’ - நடந்தது என்ன?

இதில் செல்வன் உயிரிழந்தார். நிலப்பிரச்னை குறித்த வழக்கில் திருமணவேலுக்கு ஆதரவாக, ஒருதலைபட்சமாக தட்டார்மடம் காவல் நிலைய ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் செயல்பட்டார் என குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து திருமணவேல், ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட சிலர் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்தநிலையில், `குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்படும் வரை உடலைப் பெற மாட்டோம்’ என உயிரிழந்த செல்வனின் உறவினர்கள், நான்கு நாள்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி சி.பி.சி.ஐ.டி ஆய்வாளர் அலுவலகம்
தூத்துக்குடி சி.பி.சி.ஐ.டி ஆய்வாளர் அலுவலகம்

இதற்கிடையில், ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டு, பின்னர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். திருமணவேல், அவரின் ஆதரவாளர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் சென்னை, சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இதற்கிடையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது. சாத்தான்குளம் காவல் சரகத்தில் கடந்த மூன்று மாதங்களில் இத்துடன் மூன்று வழக்குகள் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டிருக்கின்றன.

அடுத்த கட்டுரைக்கு