விருதுநகர் மாவட்டம், சாத்தூர் சிதம்பரம் நகரைச் சேர்ந்தவர் அன்னலட்சுமி. ஆசிரியையாகப் பணியாற்றி வரும் இவர் நேற்று முன்தினம் வழக்கம்போல் ஸ்கூட்டரில் பணிக்காக புறப்பட்டார். செல்லும்வழியில், பெட்ரோல் பங்கில் ஸ்கூட்டருக்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு பயணத்தை தொடர்கையில், அவரை பின்தொடர்ந்து மர்மநபர்கள் இரண்டு பேர் டூவீலரில் வந்தனர். எதிர்பாராத சமயத்தில் டூவீலரில் வந்த மர்மநபர்கள், அன்னலட்சுமியின் கழுத்தில் கிடந்த தங்கச்செயினை பறித்தனர். அப்போது சுதாரித்துக்கொண்ட அன்னலட்சுமி டூவீலரில் இருந்தவாறு செயினை பிடித்துக்கொண்டு திருடர்களுடன் போராடினார்.

இதில் தங்கச்செயினின் ஒருபகுதி திருடர்களின் கையிலும், மற்றொருப்பகுதி அன்னலட்சுமி கையிலும் சிக்கியது. இதனால் ஆசிரியை கூச்சல்போடவே அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். இதையடுத்து, செயின்பறிப்பில் ஈடுபட்டவர்கள் தங்களது டூவீலரில் அங்கிருந்து வேகமாக தப்பிச்சென்றனர். தூரத்திலிருந்தபடி சம்பவத்தை கவனித்த போக்குவரத்து காவலர் சதீஷ்குமார் என்பவர், திருடர்களை பிடிப்பதற்காக அவர்களை விரட்டிச்சென்றார். சாத்தூர் அருகே சுப்பிரமணியபுரம் காட்டுப் பகுதியில் வைத்து பொதுமக்கள் உதவியுடன் செயின்பறிப்பு திருடர்களை காவலர் சதீஷ்குமார் மடக்கிப் பிடித்தார்.
இதைத் தொடர்ந்து, பிடிபட்டவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் செயின்பறிப்பில் ஈடுபட்டவர்கள் உசிலம்பட்டி அருகே முண்டுவேலம்பட்டியைச் சேர்ந்த முத்துப்பாண்டி மற்றும் சிவகாசி சாட்சியாபுரம் பகுதியைச் சேர்ந்த அழகுராஜ் என்பது தெரியவந்தது. மேலும் அவர்களின் கையில் சிக்கியிருந்த செயினின் மீதப்பகுதி எங்கே என போலீஸ் விசாரித்ததில், பிடிப்பட்டால் அடிப்பார்கள் என பயந்து செயினை காட்டுப் பகுதியில் வீசியதாக கூறியுள்ளனர்.

இதையடுத்து புகாரின் பேரில் அவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டனர். தொடர்ந்து தூக்கி வீசப்பட்ட தங்கச்செயினை மீட்பதற்காக கைதுசெய்யப்பட்ட முத்துபாண்டி, அழகுராஜ் ஆகிய இருவரையும் சம்பவ இடத்துக்கு அழைத்துச்சென்ற போலீஸார், செயின் தூக்கி வீசப்பட்ட இடத்தை அடையாளம் காட்டும்படி கூறியுள்ளனர். அதன்படி திருடர்கள் அடையாளம் காட்டிய காட்டுப் பகுதியில் போலீஸார் பலமணி நேரம் தேடியும் தொலைந்து போன செயினை கண்டுப்பிடிக்க முடியவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த போலீஸார், கைதுசெய்யப்பட்ட இருவரின் வயிற்றையும் ஸ்கேன் செய்து பார்க்க முடிவு செய்தனர். அதன்படி தனியார் மையத்தில் வயிற்றை ஸ்கேன்செய்து பார்த்தபோது முத்துப்பாண்டியின் வயிற்றுக்குள் தங்கச்செயின் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து மருத்துவர்களின் ஆலோசனைப்படி வயிற்றை சுத்தம் செய்யும் மருந்து வழங்கப்பட்டு முத்துப்பாண்டியின் வயிற்றுக்குள்ளிருந்து செயின் வெளியே எடுக்கப்பட்டது. இந்த சம்பவம் சாத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.