எஸ்.பி.ஐ வங்கியின் ஏடிஎம் மையங்களில், பணம் டெபாசிட் இயந்திரத்தின் சென்சாரை விரல்களால் தடுத்து, நூதனமுறையில் லட்சக்கணக்கில் பணம் எடுக்கப்பட்டது. இது தொடர்பாக எஸ்.பி.ஐ வங்கி தரப்பில் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலைச் சந்தித்து புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில் சென்னை கூடுதல் கமிஷனர் (தெற்கு) கண்ணன் தலைமையிலான தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தினர். இந்தநிலையில், ஏடிஎம் மையங்களில் பணத்தை எடுத்த கும்பலைச் சேர்ந்தவர்கள் ஹரியானாவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்தது.

அதனால் தி.நகர் துணை கமிஷனர் ஹரிகரன்பிரசாத் தலைமையில், போலீஸார் ஹரியானாவுக்குச் சென்றனர். அங்கு ஹரியானா மாநில போலீஸாரின் உதவியோடு, அமீர் அர்ஷ் என்பவரை போலீஸார் கைதுசெய்து, சென்னைக்கு அழைத்துவந்தனர். அவரிடம் விசாரித்தபோது ஐந்துக்கும் மேற்பட்ட குழுக்களாகப் பிரிந்து, இந்த மோசடிச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்திருக்கிறது. அமீர் அர்ஷிடமிருந்து 4,50,000 ரூபாயை போலீஸார் பறிமுதல் செய்திருக்கின்றனர். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இது குறித்து ஏடிஎம் மையங்களில் நடந்த மோசடி வழக்கை விசாரிக்கும் போலீஸ உயரதிகாரி ஒருவரிடம் பேசினோம். ``கடந்த 15.6.2021-ம் தேதி முதல் 18.6.2021-ம் வரை எஸ்.பி.ஐ ஏடிஎம் மையங்களிலுள்ள பணத்தை டெபாசிட் செய்யும் இயந்திரங்களில் (கேடிஎம்) ஏடிஎம் கார்டுகளைப் பயன்படுத்தி, பணத்தை நூதன முறையில் கொள்ளையடித்தது வடமாநிலத்தைச் சேர்ந்த கும்பல் எனத் தெரியவந்தது. இந்தக் கும்பல் இதுவரை எங்களுக்கு வந்த புகாரின் அடிப்படையில் சுமார் 50 லட்சம் ரூபாய் வரை வங்கிக்கு இழப்பை ஏற்படுத்தியிருப்பது தெரியவந்திருக்கிறது. வங்கித் தரப்பில் மொத்தம் எவ்வளவு தொகை எடுக்கப்பட்டிருக்கிறது என ஆய்வு செய்துவருகின்றனர்.
கைதுசெய்யப்பட்ட அமீருக்கு, கேடிஎம் இயந்திரத்தில் சென்சாரைத் தடுத்தால் பணத்தை மோசடி செய்யலாம் என்ற தொழில்நுட்பம் தெரிந்திருக்கிறது. யூடியூப் மூலம் அதை அவர் கற்றுக்கொண்டிருக்கிறார். அதனால் அவரின் தலைமையில் ஐந்து டீம்கள் ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களிலிருந்து சென்னை வந்திருக்கின்றன. அவர்கள் சென்னையில் தங்கி, எஸ்.பி.ஐ ஏடிஎம் மையங்களில் பணத்தை டெபாசிட் இயந்திரங்கள் உள்ள இடத்தில் கைவரிசைகாட்டி வந்திருக்கிறார்கள். கொள்ளையடித்த பணத்துடன் இவர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றுவிட்டனர். இவர்கள் ஹரியானா மாநிலத்திலுள்ள பல்லாப்கார் (Ballabhgarh) பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் சைபர் க்ரைம் தொடர்பான குற்றங்களில் நூதன முறையில் ஈடுபடுபவர்கள். இந்தக் கொள்ளையர்கள் கூட்டத்தில் அமீரைக் கைதுசெய்திருக்கிறோம். மற்றவர்களைத் தேடிவருகிறோம்" என்றார்.
போலீஸார் கூறுகையில், ``சென்னையிலுள்ள எஸ்.பி.ஐ ஏடிஎம் மையங்களைக் குறிவைத்து, நூதன முறையில் கொள்ள்ளியடித்த இந்தக் கும்பல் லட்சக்கணக்கில் பணத்துடன் தப்பிச் சென்றிருக்கிறது. செல்போன் சிக்னல் மூலம்தான் இந்த வழக்கில் துப்பு துலக்கப்பட்டிருக்கிறது. விரைவில் அமீரின் கூட்டாளிகளைக் கைதுசெய்து, பணத்தை பறிமுதல் செய்துவிடுவோம்" என்றனர்.