Published:Updated:

முக்தி அடைய இரண்டு வயதுக் குழந்தையை நரபலி கொடுத்தவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை!

` சிறுவனின் வயதை மனதில்கொண்டு குறைந்தபட்ச மனிதாபிமானத்தைக்கூட அவர்கள் கொண்டிருக்கவில்லை. திருந்துவதற்கான மனநிலையும் இவர்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை.’

Murder
Murder

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிலாய் நகரில் வசித்துவந்தனர், கிரண் பாய் மற்றும் ஈஸ்வர் லால் யாதவ் தம்பதியர். இவர்களுக்கு, தாந்த்ரீகத்தில் மிகுந்த ஈடுபாடு இருந்திருக்கிறது.

human sacrifice
human sacrifice

தாந்த்ரீகம் என்பது தந்திர மாயங்களை கற்கும் முறை என அறியப்படுகிறது. பல பழைய புத்தகங்களில் இதற்கான மறைபொருள், மந்திரம் தொடர்பான சில சடங்குகள் கடைப்பிடிக்கப்படுவது குறித்த வழிமுறைகள் உள்ளன என்றும் சொல்லப்படுகிறது. இதைப் பயிற்சி செய்பவர்கள் சாதாரண சமூக, மத மற்றும் நிஜ வாழ்க்கையில் உள்ள தொடர்பை வெறுத்து, இந்தத் தாந்த்ரீகப் பயிற்சியால் ஒரு தனி நபர் இந்த நிஜ உலகம் ஒரு மாயை, ஒரு தோற்றம் என்ற கருத்தை அடைந்து, அதிலிருந்து முக்தி அடைய வேண்டுவதாக நம்பப்படுகிறது.

2010-ஆம் ஆண்டு தாந்த்ரீக முயற்சியினை மேற்கொண்ட இந்தத் தம்பதியில், மனைவி கிரண் பாய் குருமாதா என்று அழைக்கப்பட்டதாகவும், அவர் முக்தி அடைவதற்காகப் பயிற்சிகளை மேற்கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சியின் பொருட்டு, ஒரு மனித உயிரைப் பலி கொடுக்க வேண்டும் என்று கூறி, ஒரு குழந்தையைக் கொண்டுவருமாறு தன் கணவரிடமும் பிற உதவியாளர்களிடமும் கூறியிருக்கிறார், கிரண் பாய் .

Supreme Court
Supreme Court

அவர்கள் அந்தப் பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த இரண்டு வயதுடைய சிராக் என்ற சிறுவனைக் கடத்தி வந்துள்ளனர். பின்னர், சிறுவன் கொடூரமாகக் கொல்லப்பட்டு, அங்கேயே புதைக்கப்பட்டதாக அவர்கள்மீது வழக்கு தொடரப்பட்டது. இதேபோல, இந்தச் சிறுவன் கொல்லப்பட்ட சில தினங்களுக்கு முன்னர், ஆறு வயதுச் சிறுமியை இவர்கள் கடத்திக் கொன்றதாகவும் அவர்கள்மீது மற்றொரு வழக்கு பதியப்பட்டது.

இந்த வழக்கினை விசாரித்த கீழமை நீதிமன்றம், அந்த ஆறு வயதுச் சிறுமி வழக்கில் ஜாமீன், பரோல் அற்ற ஆயுள் தண்டனையும், சிறுவன் சிராக் கொலை வழக்கில் மரண தண்டனையும் விதித்து உத்தரவிட்டது. சத்தீஸ்கர் உயர் நீதிமன்றமும் இந்தத் தண்டனையை உறுதி செய்ததை அடுத்து, கிரண் பாய் மற்றும் யாதவ் இருவரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

Death Penalty
Death Penalty

நேற்று இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன் விவரம்.

``இந்த வழக்கில் யாதவ் மற்றும் அவரது மனைவி இருவரும், கடவுளுக்குப் பலி கொடுக்கிறோம் என்ற பெயரில் இரண்டு வயதுக் குழந்தை சிராக்கைக் கொடூரமாகக் கொலை செய்திருப்பது, சந்தேகத்துக்கு இடமின்றி ஆதாரங்களோடு நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தத் தம்பதியருக்கு அந்தச் சமயத்தில் மூன்று சிறு குழந்தைகள் இருந்தது என்பதையும் இந்த நீதிமன்றம் கவனத்தில் கொள்கிறது. இருப்பினும், அவர்கள் இரண்டு வயதுச் சிறுவனைக் கொடூரமாகக் கொலை செய்திருக்கிறார்கள். அந்தச் சிறுவனின் நாக்கு, கன்னங்கள் அறுக்கப்பட்டு, தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறான். சிறுவனின் வயதை மனதில்கொண்டு குறைந்தபட்ச மனிதாபிமானத்தைக்கூட அவர்கள் கொண்டிருக்கவில்லை. திருந்துவதற்கான மனநிலையும் இவர்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. எனவே, யாதவ் மற்றும் கிரண் பாய் இருவருக்கும் கீழமை மற்றும் உயர் நீதிமன்றங்களில் கொடுத்த அதே தண்டனையை இந்த நீதிமன்றம் உறுதிசெய்கிறது" எனத் தீர்ப்பு வழங்கியுள்ளது.

`இது, அரிதிலும் அரிதான ஒரு வழக்கு’ என்று கூறியுள்ள உச்ச நீதிமன்றம், இந்தக் கொலை வழக்கிற்கு மரண தண்டனையே சரியான தீர்ப்பு என்று கூறியுள்ளது. இந்தக் கொலைக்கு உடந்தையாக இருந்த இவர்களது உதவியாளர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Vikatan