Published:Updated:

ஈரோடு: ரயில்வே பணி... ரூ.2.55 கோடி மோசடி - போலி பணி நியமன ஆணை கொடுத்த பலே ஆசாமி கைது

நவநீதகிருஷ்ணன்

பணம் கொடுத்தால் உடனடியாக பணி நியமன ஆணையைப் பெற்றுத் தருவதாக நவநீதகிருஷ்ணன் கூறியிருக்கிறார். இதை நம்பி கஸ்தூரிதேவி, அவரின் நண்பர்கள், உறவினர்கள் என 14 பேரிடமிருந்து பல தவணைகளாகப் பணத்தைப் பெற்றுத் தந்திருக்கிறார்.

ஈரோடு: ரயில்வே பணி... ரூ.2.55 கோடி மோசடி - போலி பணி நியமன ஆணை கொடுத்த பலே ஆசாமி கைது

பணம் கொடுத்தால் உடனடியாக பணி நியமன ஆணையைப் பெற்றுத் தருவதாக நவநீதகிருஷ்ணன் கூறியிருக்கிறார். இதை நம்பி கஸ்தூரிதேவி, அவரின் நண்பர்கள், உறவினர்கள் என 14 பேரிடமிருந்து பல தவணைகளாகப் பணத்தைப் பெற்றுத் தந்திருக்கிறார்.

Published:Updated:
நவநீதகிருஷ்ணன்

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் பச்சமலை அடிவாரத்தைச் சேர்ந்தவர் கஸ்தூரிதேவி. ஆடிட்டர் அலுவலகம் ஒன்றில் ஊழியராகப் பணிபுரிந்துவருகிறார். நண்பர் ஒருவர் மூலம் திருப்பூர், ராயபுரத்தைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் (45) என்பவர் இவரிடம் அறிமுகம் ஆனார். `தனக்கு தென்னக ரயில்வேயில் பணிபுரிந்துவரும் முக்கியப் பொறுப்பிலுள்ள உயரதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், அவர்களின் உதவியுடன் ரயில்வேயில் பணி வாங்கித் தர முடியும்' எனக் கூறி கஸ்தூரிதேவியை நம்பவைத்துள்ளார். குறிப்பாக, ரயில்வேயில் பொறியாளர் பணியிடங்களான ஏ.இ., ஜே.இ., பணியிடங்களிலும், அலுவலக உதவியாளர்கள் உள்ளிட்ட கிளரிக்கல் பணியிடங்களைத் தன்னால் வாங்கித் தர முடியும் என்று செம பில்டப் கொடுத்திருக்கிறார். உங்களுக்குத் தெரிந்தவர்கள், உறவினர்களிடம் கூறினால் அவர்களுக்குப் பணி வாங்கித் தருவதாகவும், ஒவ்வொரு பணியிடத்துக்கும் குறிப்பிட்ட தொகை செலவாகும் என்றும் கூறியிருக்கிறார். அதன்படி ஒவ்வொரு வேலைக்கும் ரூ. 10 முதல் 25 லட்சம் வரையிலும் செலவாகும் என ரேட் பிக்ஸ் செய்திருக்கிறார்.

ரயில்வே
ரயில்வே

இந்தத் தொகையைக் கொடுத்தால் உடனடியாக பணி நியமன ஆணையைப் பெற்றுத் தருவதாகவும் நவநீதகிருஷ்ணன் ஆசைவார்த்தைகளைக் கூறியிருக்கிறார். இதை நம்பி கஸ்தூரிதேவி, அவரின் நண்பர்கள், உறவினர்கள் என 14 பேரிடமிருந்து பல தவணைகளாகப் பணத்தைப் பெற்றுத் தந்திருக்கிறார். வேலை கேட்டு வந்தவர்களிடமிருந்து நவநீதகிருஷ்ணன், இந்தத் தொகையை நேரடியாக வாங்காமல், கஸ்தூரிதேவியின் வங்கிக் கணக்கில் செலுத்தவைத்து அவரிடமிருந்து ரூ. 10 லட்சம், 20 லட்சம் என மொத்தம் ரூ. 2 கோடியே 55 லட்சத்தை வாங்கியிருக்கிறார். பணம் வாங்கியவர்களிடம் குறிப்பிட்ட நாளில் வரச்சொல்லி, அவர்களுக்கு இந்திய ரயில்வே பணியில் சேருவதற்கான போலியாகத் தயாரிக்கப்பட்ட பணி நியமன ஆணையை வழங்கியிருக்கிறார்.

இந்தப் போலி பணி ஆணையை நவநீதகிருஷ்ணன் கொடுக்கும்போது அவர்களிடம், ரயில்வே பணிக்கான பயிற்சி திருச்சி ரயில்வே அலுவலகத்தில்  வழங்கப்பட இருப்பதாகவும், அதற்கான அழைப்பு உங்களைத் தேடிவரும் என்றும், அதுவரை பணி நியமன ஆணையுடன் காத்திருக்குமாறு கூறிவிட்டு பணத்துடன் எஸ்கேப் ஆகிவிட்டார். அதன் பிறகு அவரை பலமுறைத் தொடர்புகொண்டபோதிலும் நவநீதகிருஷ்ணன் தொலைபேசியை எடுக்கவில்லை. பெரும்பாலான நேரங்களில் சுவிட்ச் ஆஃப் ஆகியிருந்திருக்கிறது.  இதனால் சந்தேகமடைந்த அவர்கள், நவநீதகிருஷ்ணன் வழங்கிய ரயில்வே பணி நியமன ஆணை உண்மையானதுதானா என்று பரிசோதித்துப் பார்த்திருக்கிறார்கள். அப்போதுதான் அவர் கொடுத்தது போலியான பணி நியமன ஆணை என்பது தெரியவந்தது.

பணத்தை வாங்கிக்கொண்டு தங்களை ஏமாற்றிவிட்டதை உணர்ந்தவர்கள், கஸ்தூரிதேவியிடம் பணத்தைக் கொடுக்குமாறு கேட்டனர். தான் வாங்கிய பணத்தை நவநீதகிருஷ்ணனிடம் கொடுத்துவிட்டதாகவும் கஸ்தூரிதேவி கூறியிருக்கிறார். இதையடுத்து, கஸ்தூரிதேவி உள்ளிட்ட 14 பேர் ஈரோடு மாவட்ட கண்காணிப்பாளர் (எஸ்.பி.) சசிமோகனிடம், மோசடி நபரான நவநீதகிருஷ்ணனிடமிருந்து பணத்தைப் பெற்றுத் தரக் கோரி மனு அளித்தனர்.

போலீஸாரின் பிடியில் நவநீதகிருஷ்ணன்.
போலீஸாரின் பிடியில் நவநீதகிருஷ்ணன்.

இது குறித்து விசாரணை நடத்துமாறு மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாருக்கு எஸ்.பி உத்தரவிட்டதையடுத்து, இன்ஸ்பெக்டர் கோமதி, பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில், பணம் கொடுத்து ஏமாந்தது தெரியவந்ததையடுத்து, நவநீதகிருஷ்ணனை போலீஸார் அதிரடியாக கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தற்போது நவநீதகிருஷ்ணன் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

இது குறித்து குற்றப்பிரிவு ஆய்வாளர் கோமதி நம்மிடம் கூறுகையில், ``மாவட்ட எஸ்.பி-யின் உத்தரவுப்படி வழக்கு பதிவுசெய்யப்பட்டு நவநீதகிருஷ்ணன் கைதுசெய்து சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். முதற்கட்ட விசாரணையில் 14 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகப் புகார்கள் பெறப்பட்டிருக்கின்றன. நவநீதகிருஷ்ணன் இன்னும் எத்தனை பேரை ஏமாற்றி பணம் பெற்றார் என்பது குறித்து விசாரித்துவருகிறோம். அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் இருந்தால் அவர்களும் புகார் அளிக்கலாம்.

தற்போது சிறையில் உள்ள நவநீதிகிருஷ்ணனை கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்த திட்டமிட்டிருக்கிறோம். அவரிடம் விசாரணை நடத்தினால் மேலும் பாதிக்கப்பட்டவர்கள் குறித்தும், பணத்தை அவர் எங்கு வைத்திருக்கிறார் என்ற தகவலும் தெரியவரும்” என்றார்.