Published:Updated:

சென்னை: 16-வது மாடியிலிருந்து குதித்து பள்ளி மாணவி தற்கொலை! - போலீஸ் தீவிர விசாரணை

பள்ளி மாணவியின் தற்கொலைச் சம்பவம் சென்னை கொரட்டூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னை கொரட்டூர், வாட்டர் கேனால் சாலையில் பிரமாண்ட அடுக்குமாடிக் குடியிருப்புகள் அமைந்துள்ளன. நேற்று முன்தினம், பல்லாயிரக்கணக்கான மக்கள் வசித்துவரும் இந்தக் குடியிருப்புப் பகுதியின் 16-வது மாடியிலிருந்து அடையாளம் தெரியாத சிறுமி ஒருவர் கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடியிருப்புவாசிகள், உடனடியாக கொரட்டூர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்த கொரட்டூர் போலீஸார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சிறுமியின் உடலைக் கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்துவிட்டு, தற்கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்டமாக, அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்போரிடம் உயிரிழந்த சிறுமி குறித்து விசாரித்ததில் அவரை யாருக்கும் தெரியவில்லை என்று கூறவே, தற்கொலை செய்துகொண்ட சிறுமியின் கைப்பையிலிருந்த புத்தகங்கள், அடையாள அட்டைகளை ஆய்வுசெய்து அவர் பள்ளி மாணவி என்பதை உறுதி செய்தனர்.

தற்கொலை செய்துகொண்ட மாணவி
தற்கொலை செய்துகொண்ட மாணவி

அதேபோல், கைப்பையிலிருந்தவற்றை ஆய்வு செய்ததில், உயிரிழந்த மாணவி சென்னை, கொளத்தூரை அடுத்த ஜி.கே.எம் காலனி, எம்.ஜி.ஆர் தெருவைச் சேர்ந்த பாஸ்கரன் (38) என்பவரின் மகள் வைஜெயந்தி (16) என்பதும், அம்பத்தூரை அடுத்த சூரபட்டு பகுதியிலுள்ள பிரபல தனியார் பள்ளி ஒன்றில் 11-ம் வகுப்பு படித்துவந்தார் என்பதும் தெரியவந்தது. அதையடுத்து, மாணவியின் பெற்றோரை நேரில் அழைத்து கொரட்டூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ``பள்ளிக்கூடத்தில் ஒழுங்காகப் பாடங்களை கவனிப்பதில்லை என்றும், வீட்டுப்பாடங்களை முறையாக முடிப்பதில்லை என்றும் ஆசிரியர்கள் புகார் அளித்ததாகவும், அதனால் பயத்தில் மாணவி வைஜெயந்தி தற்கொலை செய்துகொண்டதாகவும்" பெற்றோர் கூறியிருக்கின்றனர்.

மாணவியின் தற்கொலை தொடர்பாக கொரட்டூர் போலீஸார் கூறுகையில், ``தற்கொலை செய்துகொண்ட மாணவி கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப் பிரிவில் 11-ம் வகுப்பு படித்துவந்திருக்கிறார். பள்ளி ஆசிரியர்கள் படிப்பில் மிகவும் மோசமாக இருப்பதாக வைஜெயந்தியை பள்ளியில் திட்டியதோடு மட்டுமல்லாமல், மாணவியின் பெற்றோரிடமும் போனில் புகார் அளித்திருக்கின்றனர். படிப்பு விஷயத்தில் கண்டிப்புடன் இருக்கும் பெற்றோர் தன்னைத் திட்டி, அடித்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் மாணவி விபரீத முடிவைக் கையிலெடுத்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

கொரட்டூர் காவல்நிலையம்
கொரட்டூர் காவல்நிலையம்

அதன்படி, நேற்று காலை வீட்டிலிருந்து வெளியேறிய மாணவி, தற்கொலை செய்துகொள்வதற்காக மதிய வாக்கில் கொரட்டூரிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்புக்குச் சென்றிருக்கிறார். அவர் அந்தக் குடியிருப்பின் 16-வது மாடிக்கு லிஃப்டில் சென்றது முதல், அங்கிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டது வரை அனைத்தும் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கின்றன. ஆனால், சிறுமி தற்கொலை செய்துகொள்ள அந்த அடுக்குமாடிக் குடியிருப்பைத் தேர்வு செய்ததற்கான காரணம்தான் தெரியவில்லை. அங்கு அவருக்குத் தெரிந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று விசாரித்துவருகிறோம்" என்றனர்.

பள்ளி மாணவியின் தற்கொலைச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு