சென்னை கோடம்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் முகமது மீரா லப்பை (51). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரின் மகள் பாத்திமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். கடந்த 6-ம் தேதி வழக்கம் போல ஸ்கூல் வேனில் பள்ளிக்குச் சென்ற பாத்திமா, ஸ்கூல் முடிந்து வீட்டுக்குச் செல்ல வேனுக்கு வரவில்லை. அதனால், ஸ்கூல் வேன் டிரைவர், மாணவி பாத்திமாவின் அப்பாவுக்கு போன் செய்து விவரத்தைத் தெரிவித்தார். அதோடு பள்ளி நிர்வாகத்திடமும் தகவலைக் கூறினார்.

இதையடுத்து அதிர்ச்சியடைந்த முகமது மீரா லப்பை பதறியடித்துக் கொண்டு பள்ளிக்கு வந்து மகள் குறித்து விசாரித்தார். இந்தச் சமயத்தில் முகமது மீரா லப்பைக்கு ஒரு போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய பெண், ``உன் மகளை நான் கடத்திவிட்டேன். பத்து லட்சம் ரூபாய் கொடுத்தால் உயிரோடு விடுவேன். இல்லையென்றால் கொன்றுவிடுவேன்” என்று மிரட்டிவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டார். அதைக்கேட்ட முகமது மீரா லப்பை, விவரத்தை பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்துவிட்டு ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSபட்டப்பகலில் பள்ளி மாணவி ஒருவர் கடத்தப்பட்ட தகவல், சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலின் கவனத்துக்கு வந்தது. உடனடியாக கூடுதல் கமிஷனர் டாக்டர் கண்ணன் இணை கமிஷனர் பிரபாகரன், துணை கமிஷனர் பகலவன் ஆகியோரின் மேற்பார்வையில் நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் ஆபிரகாம், இன்ஸ்பெக்டர்கள் சேட்டு, மோகன்தாஸ் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. முகமது மீரா லப்பையிடம் பேசிய பெண்ணின் செல்போன் நம்பர் குறித்த விவரத்தையும் அந்த செல்போனின் சிக்னலையும் போலீஸார் ஆய்வு செய்தனர். அதே நேரத்தில் பள்ளி அமைந்துள்ள பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது மாணவி பாத்திமாவை பர்தா அணிந்த பெண் ஒருவர் ஆட்டோவில் அழைத்துச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. மேலும், முகமது மீரா லப்பையிடம் பேசிய செல்போன் நம்பரின் சிம்கார்டு, வாணியம்பாடியில் சில தினங்களுக்கு முன் வாங்கியிருப்பது தெரியவந்தது.

மேலும் தற்போது அந்தச் செல்போன் சிக்னல், சென்னை வடபழனி, அரும்பாக்கம் பகுதியில் உள்ள வணிக வளாகங்களில் காட்டியது. நுங்கம்பாக்கத்திலிருந்து புறப்பட்ட ஆட்டோ, அரும்பாக்கம் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் நிறுத்தப்பட்டதையும் போலீஸார் கண்டறிந்தனர். உடனடியாக அங்குச் சென்று ஒரு போலீஸ் டீம் கண்காணித்தது. இன்னொரு டீம் போலீஸார் செல்போன் சிக்னலை ஆய்வு செய்துக் கொண்டிருந்தனர். அப்போது பாத்திமாவைக் கடத்தி வைத்திருக்கும் பெண், முகமது மீரா லப்பையிடம் போனில் பேசினார். பணத்தை ரெடி செய்து விட்டீர்களா என்று கேட்டார். அதற்கு நீங்கள் கேட்கும் பத்து லட்சம் ரூபாயை உடனடியாக ஏற்பாடு செய்ய முடியவில்லை என்று முகமது மீரா லப்பை கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதையடுத்து இருவரும் போனில் பேரம் பேசினர். இறுதியில் இரண்டு லட்சம் ரூபாய் என பேசி முடித்து, வடபழனியில் உள்ள ஹார்டுவேர் கடையில் பணத்தைக் கொடுக்கும்படி அந்தப் பெண் கூறினார். இரண்டு லட்சம் ரூபாயை என்னால் உடனடியாக கொடுக்க முடியாது என்று முகமது மீரா லப்பை தெரிவித்தார். இதையடுத்து முதலில் ஒரு லட்சம் ரூபாயைக் கொடுங்கள், மீதியை பிறகு கொடுங்கள் என்று அந்தப் பெண் தெரிவித்தார். இந்த விவரத்தை முகமது மீரா லப்பை தனிப்படை போலீஸாரிடம் தெரிவித்தார். அதனால் போலீஸார் அந்தப் பெண்ணைக் கையும் களவுமாக பிடிக்க வியூகம் அமைத்தனர். ஒரு லட்சம் ரூபாயுடன் முகமது மீரா லப்பையை அந்தப் பெண் கூறிய கடையில் கொடுக்கும்படி கூறினார். அவரைப் பின்தொடர்ந்து மப்டியில் போலீஸார் அந்தப்பகுதியில் காத்திருந்தனர்.

பெண் கூறிய ஹர்டுவேர் கடையில் பணத்தை முகமது மீரா லப்பைக் கொடுத்தார். பணத்தைக் கொடுத்த சில நிமிடங்களிலேயே பாத்திமாவைக் கடத்தி வைத்திருந்த பெண், முகமது மீரா லப்பையை தொடர்பு கொண்டு உன் மகள் வடபழனி மெட்ரோ ரயில் நிலையம் அருகில் நிற்கிறாள், அழைத்துச் செல்லுங்கள் என்று கூறி இணைப்பை துண்டித்து விட்டார். அதைக்கேட்ட முகமது மீரா லப்பை, அங்குச் சென்று பாத்திமாவை அழைத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்றார். மகளைக் கண்டதும் முகமது மீரா லப்பையின் குடும்பத்தினர் ஆர தழுவி கண்ணீர்மல்க முத்தமிட்டனர். இதையடுத்து மப்டியிலிருந்த தனிப்படை போலீஸார், சம்பந்தப்பட்ட ஹார்டுவேர் கடையைக் கண்காணித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது கடைக்கு ஆட்டோவிலிருந்து இறங்கிய பர்தா அணிந்த பெண் ஒருவர், ஹார்டுவேர் கடையிலிருந்து பணத்தை பெற்றுக் கொண்டு மீண்டும் ஆட்டோவில் ஏறினார். அதைக் கவனித்த போலீஸார், அந்தப் பெண்ணை மடக்கிப்பிடித்தனர். விசாரணையில் அவரின் பெயர் மோகசீனா பர்வீன் (33), அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தது. பணத்தை வாங்கிய ஹார்டுவேர் கடையின் உரிமையாளர் இஜாஸ் அகமது (52), கோடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் என்று தெரிந்தது. இதையடுத்து இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் மோகசீனா, ஏன் இந்தக் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டார் என்ற விவரம் தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் பேசினோம். ``கைது செய்யப்பட்டுள்ள மோகசீனா பர்வீன், எம்.ஏ பட்டதாரி. இவரின் கணவர், ஃபாஸ்ட்புட் கடை நடத்திவருகிறார். சில ஆண்டுகளுக்கு முன் இவர், மழலையர் பள்ளி ஒன்றை தொடங்க திட்டமிட்டு அதற்காக பத்து லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கினார். ஆனால் கொரோனா காரணமாக அவரால் பள்ளியை நடத்த முடியவில்லை. அதனால் ஏற்பட்ட நஷ்டத்தால் கடன் சுமையில் மோகசீனா பர்வீன் சிரமப்பட்டு வந்தார். மேலும் அவருக்கு 5 லட்சம் ரூபாய்க்கு மேல் நகைக்கடனும் இருந்தது. கடன் சுமை அவரின் கழுத்தை நெரித்ததால் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட அவர் முடிவு செய்தார். இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் தனி ஆளாகவே மோகசீனா பர்வீன் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. மோகசீனா பர்வினுக்கு உதவிய இஜாஸ்அகமது, நடத்தி வரும் கடையில்தான் மோகசீனா பர்வின் தம்பி, வேலைப்பார்க்கிறார். அதனால் இஜாஸ் அகமதுவிடம் பணத்தைக் கொடுக்கும்படி சொல்லியுள்ளார். பணத்தை வாங்கிய அவரும் அதை எண்ணிப்பார்த்திருக்கிறார். அவரும் மோகசீனா பர்வீனிடம் எதற்காக பணம் கொடுக்க சொல்கிறீர்கள் என்று கேள்வி கேட்கவில்லை. இந்த வழக்கில் இருவரையும் கைது செய்துள்ளோம். கடத்தப்பட்ட பாத்திமாவை, 4 மணி நேரத்துக்குள் மீட்டுவிட்டோம். அறிமுகம் இல்லாத நபர்களை நம்பி பள்ளி மாணவிகள் செல்லக் கூடாது" என்றார்.
கடத்தப்பட்ட பள்ளி மாணவியிடம் போலீஸார் விசாரித்தபோது ``ஆண்டி எனக்கு ஐஸ் கிரீம், சாக்லெட் வாங்கிக் கொடுத்தார்கள்" என்று கூறியிருக்கிறார். 4 மணி நேரமும் தன்னை மோகசீனா பர்வீன் என்பவர் கடத்தி வைத்திருந்தார் என்பதை அந்தப் பள்ளி மாணவி உணரவில்லை என்கிறார்கள் போலீஸார். பள்ளி மாணவியை நான்கு மணி நேரத்துக்குள் மீட்ட தனிப்படை போலீஸாரை கமிஷனர் சங்கர் ஜிவால் பாராட்டினார்.