Election bannerElection banner
Published:Updated:

நாமக்கல்: ப்ளஸ் டூ மாணவியை ஏமாற்றிப் பாலியல் வன்கொடுமை - சரக்கு ஆட்டோ டிரைவரைத் தேடும் போலீஸ்!

திருச்செங்கோடு
திருச்செங்கோடு ( நா.ராஜமுருகன் )

திருச்செங்கோடு அருகே ப்ளஸ் டூ படிக்கும் மாணவி ஒருவரை, சரக்கு ஆட்டோ டிரைவர் ஒருவர் காதலிப்பதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நாமக்கல் மாவட்டத்தில் தொடர்ச்சியாக சிறுமிகள், பள்ளி மாணவிகளுக்கு எதிராகப் பாலியல் வன்கொடுமை நடந்துவருவது பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கெனவே, குமாரபாளையம் அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியை, 12 நபர்கள் இரண்டு வருடங்களாகப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தக் கொடூரத்துக்கு, அந்தச் சிறுமியின் தாயும் துணைபோனது அந்தப் பகுதி மக்களை அதிரவைத்தது. புதுச்சத்திரம் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த 16 வயது ப்ளஸ் ஒன் படித்த பள்ளி மாணவியை, சினிமா துணை நடிகர் உட்பட நான்கு பேர், கடந்த இரண்டு வருடங்களாகப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம், நாமக்கல் மாவட்ட மக்களைப் பதைபதைக்கவைத்தது.

அனைத்து மகளிர் காவல் நிலையம்
அனைத்து மகளிர் காவல் நிலையம்
நா.ராஜமுருகன்

இந்தநிலையில், திருச்செங்கோடு அருகே ப்ளஸ் டூ படிக்கும் மாணவி ஒருவரை, சரக்கு ஆட்டோ டிரைவர் ஒருவர், காதலிப்பதாகக் கூறி, பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகேயுள்ள விட்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (21). சரக்கு ஆட்டோ டிரைவராக இருக்கிறார். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த ப்ளஸ் டூ படிக்கும் 17 வயது பள்ளி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.

ஒருகட்டத்தில் அவர் அந்த மாணவியிடம், ``நான் உன்னைக் காதலிக்கிறேன், நிச்சயம் உன்னைத்தான் திருமணம் செய்யப்போகிறேன்" என நம்பவைத்து அந்த மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகச் சொல்லப்படுகிறது. சத்தியமூர்த்தி தன்னைத் தவறாகப் பயன்படுத்தியிருக்கிறார் என்பது அந்த மாணவிக்குப் புரியவே, தனது பெற்றோரிடம் இது பற்றிக் கூறி கதறி அழுதிருக்கிறார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த மாணவியின் பெற்றோர், ஆட்டோ டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், சரக்கு ஆட்டோ டிரைவரான சத்தியமூர்த்தியைக் கைதுசெய்யவும் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.

நாமக்கல்: பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ப்ளஸ் ஒன் மாணவி! - சினிமா துணை நடிகர் உட்பட மூவர் கைது
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு