Published:Updated:

`நானே சித்தி வீட்டில் விடுகிறேன்!’- திருச்சியில் காதலனை நம்பிச் சென்ற சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

பிரதீப்
பிரதீப்

மாணவியை மீட்ட அந்தப் பெண் வழக்கறிஞர், குழந்தையின் பெற்றோருக்கும் போலீஸாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.

திருச்சி ஈ.பி சாலையில் உள்ள அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப். 21 வயது கூலித் தொழிலாளியான இவர், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவி கீர்த்தனா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்பவரைக் காதலித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் பிரதீப் தனது காதலியை, அவரது நண்பர்களுடன் பாலியல் வன்கொடுமை செய்த கோர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரதீப்
பிரதீப்

இதுகுறித்து நம்மிடம் பேசிய கீர்த்தனாவின் உறவினர்கள், ``கூலி வேலை செய்துவரும் பிரதீப், சிறுமியிடம் நட்பாகப் பேசி காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி உள்ளார். அவரது பேச்சில் மயங்கிய சிறுமியும் காதலித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுமியின் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாமல், அவரது சித்தி வீட்டில் தங்கி சிகிச்சை எடுத்து வருகிறார். ஞாயிற்றுக்கிழமை 11 மணியளவில், அம்மாவைப் பார்க்கப் போவதாகச் சொல்லிட்டு கீர்த்தனா வீட்டை விட்டுக் கிளம்பியுள்ளார்.

அவரின் வீடு அருகே பைக்கில் நின்றுகொண்டிருந்த பிரதீப், கீர்த்தனாவை சித்தி வீட்டில் விடுவதாகக் கூறி, அருகே உள்ள வேதாத்திரி நகரில் காலியாக ஆள்நடமாட்டம் இல்லாத புதர்மண்டிய காலிமனைப் பகுதிக்கு மாணவியை அழைத்துச் சென்றுள்ளார். தொடர்ந்து அங்கு வந்த பிரதீப்பின் நண்பர்கள் இருவருடன் சேர்ந்து மாணவியைக் கூட்டு வன்கொடுமை செய்துள்ளனர். மாணவியின் அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதியிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் குடியிருக்கும் பெண் வழக்கறிஞர் ஒருவர் ஓடிவந்து காப்பாற்றியுள்ளார். அவர், சத்தம்போட்டுக்கொண்டே மாடி வீட்டிலிருந்து கீழிறங்கி வருவதற்குள், அந்தக் கும்பல் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடியுள்ளதாகக் கூறப்படுகிறது.

`காணாமல்போன சிறுமி; 4 நாள்களுக்குப் பின் கல்குவாரியில் கிடைத்த சடலம்!'- அதிர்ச்சியில் வேலூர்

மாணவியை மீட்ட அந்தப் பெண் வழக்கறிஞர், குழந்தையின் பெற்றோருக்கும் போலீஸாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். ஆனால், கோட்டைக் காவல்நிலைய போலீஸார், காவல்நிலையத்தில் பணியாற்றும் போலீஸார் பாதுகாப்பு பணிகளுக்குச் சென்றுவிட்டதால், போதிய ஆள் இல்லை. பாதிக்கப்பட்ட பெண்ணைக் காவல்நிலையத்துக்கு அழைத்துவரும்படி கூறிவிட்டு போனைத் துண்டித்துவிட்டார்கள்.

தொடர்ந்து, குழந்தைகள் நலப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் போலீஸ் அவசர எண்ணுக்கும் தகவல் கொடுத்த குடியிருப்புவாசிகள், சிறுமியைத் திருச்சி மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்புக் குழுவினரிடம் ஒப்படைத்தனர். அதையடுத்து, 1 கிலோ மீட்டர் தொலைவுள்ள சம்பவ இடத்துக்குக்கு 2 மணி நேரம் கழித்து வந்த போலீஸார், சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.

சிறுமி
சிறுமி

போலீஸாரிடம் சிறுமி, ``பள்ளிக்குச் சென்றுவரும் என்னை அடிக்கடி சந்தித்த பிரதீப்புடன் பழக்கம் ஏற்பட்டது. என்னைக் காதலிப்பதாகக் கூறிய பிரதீப், இதுவரை 4 முறைக்கும் மேல் தனியாக அழைத்துச் சென்றுள்ளார். அதற்கு நான் மறுத்தால், என்னைக் கல்யாணம் பண்ணிக்கணும்னா, தனியா வா எனக் கட்டாயப்படுத்தி வன்கொடுமைக்கு ஆளாக்கினார். அந்தவகையில், ஞாயிற்றுக்கிழமை தன்னை அழைத்துச் சென்று மிரட்டி இப்படிச் செய்துவிட்டார்” எனக் கதறியுள்ளார்.

அதையடுத்து, கோட்டைக் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மகேஸ்வரி தலைமையிலான போலீஸார் போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, பிரதீப் மற்றும் அவரது நண்பர்களின் பெற்றோரை அழைத்து விசாரணை நடத்தி வந்தனர். அதைத்தொடர்ந்து, கோட்டைக் காவல்நிலைய போலீஸார், தலைமறைவாக இருந்த பிரதீப்பைக் கைது செய்து விசாரணை நடத்திவருவதாகக் கூறப்படுகிறது.

`போலீஸ் வேலை டு கொலை வழக்கு..!’- கோவை சிறுமி பாலியல் வழக்கில் தேடப்படும் மணிகண்டனின் பின்னணி

இதுகுறித்து போலீஸாரிடம் கேட்டபோது, ``அந்தச் சிறுமியும் பிரதீப்பும் காதலித்துள்ளனர். தனிமையில் இருக்கச் சிறுமியை பிரதீப் அழைத்துச் சென்றுள்ளார். இந்தவழக்கில், தொடர்ந்து விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. எங்கள் விசாரணையின் அடிப்படையில், முதற்கட்டமாக பிரதீப் மீது வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம்”என்றனர்.

திருச்சி கோட்டைக் காவல்நிலையம்
திருச்சி கோட்டைக் காவல்நிலையம்

போலீஸார் சம்பவ இடத்துக்கு 2 மணி நேரம் கழித்து வந்ததும், பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோரை டீ, டிபன் வாங்க அனுப்பியதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. சிறார் வன்கொடுமை வழக்குகளில் கோட்டை போலீஸார் செயல்பாடு மிக மெத்தனமாக உள்ளதாகக் குற்றஞ்சாட்டுகிறார்கள் பாதிக்கப்பட்ட தரப்பினர். மேலும் போலீஸாரோ, பிரதீப் மட்டும்தான் குற்றவாளி எனத் திட்டவட்டமாகக் கூறுகிறார்கள். இது இப்படியிருக்க, கடந்த நான்குநாள்களில், திருச்சி அரியமங்கலம் அம்மாக்குளம் அடுத்த பாரதியார் தெருவைச் சேர்ந்த சங்கர் என்பவரால், அப்பகுதியில் வசிக்கும் 4 வயது மகளும், திருச்சி துவாக்குடி வடக்குமலை நேதாஜி தெருவைச் சேர்ந்த சரவணன் எனும் கார் ஓட்டுநரால், அப்பகுதியைச் சேர்ந்த 13 வயதுச் சிறுமியும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். இதற்குக் காரணமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து, சிறார் வன்கொடுமைச் சம்பவங்கள் திருச்சியில் அதிகரித்து வருவது, திருச்சி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு