சிவகாசி அருகேயுள்ள அய்யம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் மனைவி கடல் மீனா. இவர்களுக்கு இரண்டு மகள்கள். கண்ணன்-கடல்மீனா தம்பதியர் இருவருமே அருகேயுள்ள பட்டாசு ஆலையில் தினக்கூலிகளாகப் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்தத் தம்பதியின் இரண்டாவது மகள் அய்யம்பட்டியிலுள்ள அரசுப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்துவந்தார். இந்த நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்து மாணவி வீட்டுக்குத் திரும்பியிருக்கிறார்.

அப்போது மிகவும் மன வருத்தத்துடன் காணப்பட்ட அவரிடம் பேச்சுக் கொடுத்துவிட்டு மாணவியின் பாட்டி சுப்புத்தாய் வெளியே சென்றுவிட்டார்.
பின்னர் சிறிது நேரத்தில் சுப்புத்தாய் வீட்டுக்குத் திரும்பிவந்து பார்த்தபோது, வீட்டுக்குள் மாணவி தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து சத்தம் போட்ட சுப்புத்தாயின் குரலைக் கேட்டு அருகிலிருந்தவர்கள் ஓடி வந்து தூக்கில் சடலமாகத் தொங்கிக்கொண்டிருந்த மாணவியை மீட்டு மாரனேரி போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், மாணவியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
போலீஸார் மாணவியின் தற்கொலை குறித்துப் பேசும் போலீஸார், ``முதற்கட்ட விசாரணையில், மாணவிக்கு வீட்டிலோ, பள்ளியிலோ எவ்வித மனவருத்தமும் இல்லை.

மாணவிக்கு வயிற்றுவலி இருந்திருக்கிறது. இதை தாங்க முடியாமல் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். இருப்பினும், மாணவியின் மரணம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்திவருகிறோம்" என்கிறார்கள்.
இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தற்கொலைத் தடுப்பு மையம் - 104
சிநேகா தற்கொலைத் தடுப்பு மையம் - 044 - 24640050, 28352345.
பெண்களுக்கான தீர்வு மையம் - 1091