Published:Updated:

`யார் தப்பு செய்தாலும் தட்டிக் கேட்பான்!' -கஞ்சா கும்பலால் செங்கல்பட்டு சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்?

பொது சேவை மற்றும் ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவன். திருப்பாவை, திருவெம்பாவை எனப் பாசுரங்களைப் படிப்பான். இதனால் பள்ளியிலும் ஆசிரியர் மத்தியில் அவனுக்கு நல்ல பெயர் உண்டு.

மாணவர்  புருஷோத்தமன்
மாணவர் புருஷோத்தமன்

கஞ்சா பழக்கத்திலிருந்து இளைஞர்களைச் சீர்திருத்தப் போராடிய பள்ளி மாணவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் செங்கல்பட்டு பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. `அவரே கைகளைக் கட்டிக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்' எனக் காவல்துறையைச் சேர்ந்த சிலர் கருத்து தெரிவிப்பதால் அப்பகுதி மக்கள் கொதிப்பில் இருக்கிறார்கள்.

மாணவரின் சடலம்
மாணவரின் சடலம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள வல்லம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவருக்கு உஷா என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். இந்த நிலையில், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஏழு வருடமாக செங்கல்பட்டு வேண்பாக்கம் பகுதியில் மகன்களுடன் வசித்து வருகிறார் உஷா.

மூத்த மகன் புருஷோத்தமன் செங்கல்பட்டில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 6-ம் தேதி, ஏகாதசி என்பதால் சொர்க்கவாசல் திறப்பைக் காண அருகில் உள்ள கோயிலுக்குச் செல்வதாக வீட்டில் கூறிவிட்டுச் சென்றுள்ளார் புருஷோத்தமன்.

கோயிலுக்குச் சென்ற மகன் வீடு திரும்பாததால் அக்கம்பக்கத்தில் விசாரித்துள்ளார் உஷா. எங்குதேடியும் மாணவர் கிடைக்காததால், செங்கல்பட்டு தாலுகா காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் விசாரணை செய்து வந்தநிலையில், நேற்று வேண்பாக்கம் அரசு ஐ.டி.ஐ-க்குப் பின்புறமாக உள்ள பாழடைந்த கிணற்றில் புருஷோத்தமனின் உடல் மிதப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தினர் கிணற்றிலிருந்து உடலை மீட்டனர். கழுத்து நெரிக்கப்பட்டு, கைகள் கட்டப்பட்ட நிலையில் கிணற்றுக்குள் புருஷோத்தமனின் உடல் கிடந்ததால் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

புருஷோத்தமன்
புருஷோத்தமன்

இதுகுறித்து வேண்பாக்கம் பகுதியில் உள்ளவர்களிடம் பேசினோம், ``இளைஞர்கள் போதைக்கு அடிமையாகக் கூடாது, தன்னைச் சுற்றி இருப்பவர்கள் எந்தத் தவறும் செய்யக் கூடாது என நினைப்பவன் புருஷோத்தமன். யார் தப்பு செய்தாலும் தட்டிக் கேட்பான். பொது சேவை மற்றும் ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவன். திருப்பாவை, திருவெம்பாவை எனப் பாசுரங்களைப் படிப்பான். இதனால் பள்ளியிலும் ஆசிரியர் மத்தியில் அவனுக்கு நல்ல பெயர் உண்டு.

மற்றபடி எந்த வம்புகளுக்கும் போக மாட்டான். வேண்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்பனை அதிகம். இதனால் அப்பகுதி சிறுவர்களும் இளைஞர்களும் சீரழிகின்றனர். `இளைஞர்களை நல்வழிப்படுத்த வேண்டும். இல்லையென்றால் அவர்களை நாம் காப்பாற்ற முடியாது’ என உள்ளூர் மக்களிடம் சில நாள்களுக்கு முன்பு பேசினான்.

இந்த நிலையில் பாழடைந்த கிணற்றில் அந்த மாணவனின் உடலைக் கைப்பற்றி இருக்கிறார்கள். அவர் இறந்து கிடந்த பகுதியில் மாணவர்களும் இளைஞர்களும் கஞ்சா புகைப்பது வழக்கம். இதனால் அப்பகுதியில் உள்ளவர்கள் கஞ்சா புகைத்தபோது புருஷோத்தமனுடன் தகராறு ஏற்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம். அல்லது கஞ்சா விற்பனைக்கு எதிராகப் பேசியதால் கஞ்சா வியாபாரம் செய்பவர்கள் யாராவது கொலை செய்திருக்கலாம்” என்கிறார்கள்.

ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர் என்பதால், ஏகாதசி அன்று தற்கொலை செய்துகொண்டாரா எனத் தெரியவில்லை.
செங்கல்பட்டு போலீஸார்

செங்கல்பட்டு காவல்துறை வட்டாரத்தில் பேசினோம். ``புருஷோத்தமன் எந்த தவற்றுக்கும் துணைபோக மாட்டார் என அப்பகுதி மக்கள் சொல்கிறார்கள். ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர் என்பதால், ஏகாதசி அன்று தற்கொலை செய்துகொண்டாரா எனத் தெரியவில்லை. பிரேதப் பரிசோதனை முடிவு வந்த பிறகே கொலையா, தற்கொலையா என்பது தெரியவரும்” என்கிறார்கள்.